சனி, 8 பிப்ரவரி, 2014

‘அருமையான புத்தகங்கள் கற்பனைத்திறனை ஊக்குவிக்கும்

தமிழுக்கும், இலக்கியத்துக்கும், இளைஞர்களுக்கும் தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய வகையில், இறையன்பு ஐ.ஏ.எஸ். எழுதிய புத்தகங்கள், படிப்போரை நிச்சயம் மகானாக்கும் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் புகழாரம் சூட்டினார்.
இறையன்பு படைப்புலகம் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்., எழுதிய 40 புத்தகங்களில் உள்ள அரிய கருத்துகளை பல்வேறு நீதிபதிகள், தமிழ் ஆராய்ச்சியாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் ஆராய்ந்து 190 கட்டுரைகள் படைத்திருக்கிறார்கள்.
இந்த அனைத்து கட்டுரைகளையும், மதுரை பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி பல்கலைக் கழக மானியக்குழு நிதி உதவியுடன் 'இறையன்பு படைப்புலகம்' எனும் தலைப்பில் 1,500 பக்கங்களாக தொகுத்து, 3 தொகுதி நூல்களாக படைத்துள்ளது.
இந்த நூல்களின் திறனாய்வுக்காக, 'இறையன்பு படைப்புலகம்' எனும் தலைப்பில் தேசிய அளவிலான 2 நாள் கருத்தரங்கம் சென்னையில் நேற்று தொடங்கியது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்.ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு, இந்திய முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தலைமை தாங்கினார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.நாகமுத்து முன்னிலை வகித்தார்.

விழாவில் 'இறையன்பு ஆய்வுக்கோவை' எனும் நூலினை நீதிபதி எஸ்.நாகமுத்து வெளியிட, தொழிலதிபர் 'ராம்ராஜ்' கே.ஆர்.நாகராஜன் பெற்றுக்கொண்டார்.
விழாவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசியதாவது:– இந்திய ஆட்சிப்பணியில் இருந்து கொண்டு தமிழுக்கும், தமிழ் இலக்கியத்துக்கும், மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும், தன்னம்பிக்கையை அளிக்க கூடிய படைப்புகளை இறையன்பு சர்வ சாதாரணமாக படைத்து இருக்கிறார் என்றால் அவருடைய அறிவுத்திறன் அசாதாரணமாக விளங்குகிறது. இவ்வளவு படைப்புகளையும், தனது பணிக்காலத்தில் படைத்திருக்கிறார் என்றால் அதற்கு காரணம், அவர் படித்த புத்தகங்கள் தான். 'அருமையான புத்தகங்கள் கற்பனைத்திறனை ஊக்குவிக்கும்', 'கற்பனைத்திறன் படைப்பாற்றலை உருவாக்கும்', 'படைப்பாற்றல் சிந்திக்கும் திறனை வளர்க்கும்', 'சிந்தனை திறன் அறிவை வளர்க்கும்', 'அறிவு உன்னை மகானாக்கும், இறையன்புவின் படைப்புகளும், அவருடைய புத்தகங்களும் படிப்போரை மகானாக்கும் என்பது நிச்சயம்.
நல்ல புத்தகங்கள், அறிவூட்டும் புத்தகங்கள், இளைய சமுதாயத்தின் மனதை நல்ல வகையில் வழி நடத்த உதவும் புத்தகங்கள் இறையன்புவிடம் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பல மடங்காக வளர்ச்சியடைய வாழ்த்துக்கள். 'இறையன்பு படைப்புலகம்' அளித்த புத்தகங்கள், மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் எப்படி வடிவமைத்து கொள்வது, எப்படி சோதனைகளை சாதனைகளாக்குவது எப்படி தோல்விகளை வெற்றிப்படிக்கட்டுகளாக மாற்றுவது என்று உத்திகளை கொடுக்கிறது.

.கடந்த 10 ஆண்டுகளில், கிட்டத்தட்ட 12 மில்லியன்(1.2 கோடி) இளைஞர்களை சந்தித்து உரையாடி இருக்கிறேன். இந்த பூமிக்கு கீழே, மேலே, வானத்தில் இருக்கக்கூடிய எவ்வித வளத்தைக்காட்டிலும், சக்தியை காட்டிலும், இளைஞர்களின் எழுச்சி உண்டாக்கப்பட்ட மனம் மிகவும் சக்திவாய்ந்தது ஆகும். எனவே புத்தகங்களை படைக்கும் படைப்பாளிகள், எழுத்தாளர்கள் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்ககூடிய படைப்புகளை கற்பனைத்திறத்தோடும், காட்சி அமைப்புகளோடும் படைக்க வேண்டும். பெற்றோர்களும், ஆசியர்களும் தங்கள் குழந்தைகள் நல்ல செயல்களையோ, சாதனைகளையோ செய்தார்கள் என்றால் அவர்களுக்கு நீங்கள் பரிசளிப்பது புத்தகங்களாகத்தான் இருக்க வேண்டும். இவ்வாறு அப்துல் கலாம் பேசினார்.

விழாவில் நீதிபதி எஸ். நாகமுத்து பேசும்போது, தமிழ்நாட்டில் உள்ள கல்லூரி மாணவர்களிடையே உங்களை மிகவும் கவர்ந்த முதல் இரண்டு மனிதர்கள் யார்? என்று கருத்துகணிப்பு நடத்தப்பட்டிருக்கிறது. இதில் 100 சதவீத மாணவர்கள் அப்துல் கலாமை முன்னோடியாக பின்பற்றி செயல்படுவதாக அறிவித்து இருக்கிறார்கள். 2– வது இடத்தை இறையன்பு ஐ.ஏ.எஸ்.வுக்கு வழங்கி இருக்கிறார்கள். காலத்தால் அழிக்க முடியாத இதிகாச நூல்களையும் இறையன்பு படைக்க வேண்டும்' என்றார்.
பிரபல எழுத்தாளர் ராமகிருஷ்ணன் திறனாய்வு உரையாற்றி பேசும்போது, ' இறையன்பு ஐ.ஏ.எஸ். சிறந்த ஆட்சியாளர், சிந்தனையாளர், பண்பாளர், நல்லமனிதர், எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர், அத்தனையும் ஒருங்கே பெற்ற பன்முக தன்மை உடையவர் ஆவார். அவரை உந்துசக்தியாகயும், வழிகாட்டியாகவும் கொண்டு தான் பலர் ஐ.ஏ.எஸ்.ஆகிறார்கள்.' என்றார்.


Sent from my iPad

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக