ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

ஆசிரியர்கள் சமூகத்தை வடிவமைக்கும் சிற்பிகள்-உ.சகாயம்






எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் மாறாதது என்னுடைய நேர்மை என்று தமிழக அரசின் அறிவியல் நகர துணைத் தலைவர் உ.சகாயம் பேசினார்.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே ஈபிஈடி கல்லூரியில் ஆசிரியர் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அவர் மேலும் பேசியதாவது:

ஆசிரியர்கள் சமூகத்தை வடிவமைக்கும் சிற்பிகள். காந்தி தனது சத்திய சோதனை புத்தகத்தில் ஆரம்பப் பள்ளியில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறார். அதில், மாணவர்களுக்கு நடை பெற்ற தேர்வில் காந்தி தவறாக விடை எழுதுகிறார். இதையடுத்து அருகே இருந்த மாணவனைப் பார்த்து ஆசிரியர் எழுதச் சொல்கிறார். ஆனால், அவர் அதை செய்யவில்லை. பிழை எனத் தெரிந்தும், தவறான பதிலையே எழுதுகிறார். இது அவரது நேர்மைக்கு உதாரணம்.

அதேபோன்று குடியரசுத் தலைவர் என்ற உயர்ந்த பதவியில் இருந்த அப்துல்கலாம் பல பிரதமர்களுக்கு ஆலோசகராக இருந்துள்ளார்; பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், சிறந்த அறிவியல் அறிஞர்களைப் பார்த்துள்ளார். ஆனால், தனது ராமேசுவரம் ஆரம்பப் பள்ளியின் ஆசிரியரான சிவசுப்பிரமணி அய்யரைத்தான் மனம் கவர்ந்த கதாநாயகன் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏழைக் குழந்தைகளின் கல்விக் கான கடைசி நம்பிக்கை அரசுப் பள்ளிகள்தான். இப்போது அம்மா, அப்பா, சித்தப்பா, சித்தி என யாரும் வீட்டில் இல்லை; மம்மி, டாடி, ஆன்ட்டி, அங்கிள் மட்டுமே நிரம்பியுள்ளனர். எங்கே நமது தமிழ் என எண்ணிப் பார்க்கிறேன்.

தமிழ்நாட்டில் எந்தக் கவிஞ னும், எழுத்தாளனும், பேச்சா ளனும், தலைவனும் தமிழை வளர்க்கவில்லை. உலகின் மூத்தமொழி என தேவநேயப் பாவாணரால் கூறப்பட்ட தமிழை, அரசுப் பள்ளி மாணவர்கள்தான் வளர்க்கிறார்கள்.

லட்சியத்துக்கும், இலக்குக்கும் வேறுபாடு உண்டு. ஐ.ஏ.எஸ். ஆவேன் என்பது இலக்கு; நேர்மையான ஐ.ஏ.எஸ். ஆவேன் என்பது லட்சியம். இலக்கு உங்களுக்கானது; லட்சியம் சமூகத்துக்கானது. பாடம் கற்றுத்தருவது எளிது; சமூகத்தை கற்றுத்தருவது கடினம். ஆரம்பப் பள்ளியில் படித்தபோது தினமும் 12 கி.மீ. தூரம் நடந்து சென்றேன். பாடத்தை மட்டுமின்றி, சமூகத்தில் நிகழும் அவலங்களையும் ஆசிரியர் நாராயணசாமி விளக்கினார். 23 ஆண்டுகளில் 24 முறை இடம் மற்றும் துறை மாற்றம் செய்யப்பட்டுள்ளேன். எத்தனை இடர்பாடுகள் வந்தாலும், மாறாதது என்னுடைய நேர்மை என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக