திங்கள், 11 ஜனவரி, 2016

உதவி பேராசிரியர் பணிக்கான 'செட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும்' பட்டதாரிகள் கோரிக்கை

உதவி பேராசிரியர் பணிக்கான, 'செட்' தேர்வை, துணைவேந்தரே இல்லாத பல்கலை நடத்துவதால், முறைகேடுகளுக்கு
வாய்ப்புள்ளது; தேர்வை ரத்து செய்ய வேண்டும்' என, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசுகல்லுாரிகளில்,பேராசிரியர் பணிக்கு செல்ல வேண்டுமென்றால், முதுகலை பட்டம், ஆராய்ச்சி படிப்புடன், தேசிய அளவிலான, 'நெட்' அல்லது மாநில அளவிலான, 'செட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். நெட் தேர்வில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் வினாத்தாள் இருப்பதால், மாநில மொழியில், செட் தேர்வு நடத்தப்படுகிறது.
மாநில தகுதி தேர்வு எனப்படும், 'ஸ்டேட் எலிஜிபிலிட்டி டெஸ்ட்' என்ற ஆங்கில வார்த்தைகளின் சுருக்கம்
தான், செட்.அதை ஒவ்வொரு மாநிலமும், உள்ளூர் பல்கலைகள் மூலம் நடத்த, யூ.ஜி.சி., எனப்படும், பல்கலைக்கழக மானிய குழு அனுமதித்துள்ளது. 2015ல், செட் தேர்வை, பாரதியார்பல்கலை நடத்தியது. அதில், பல முறைகேடு புகார்கள் எழுந்தன. ஆனால்,எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நடப்பாண்டில், கொடைக்கானல், அன்னை தெரசா பல்கலைக்கு பொறுப்பு மாற்றப்பட்டுள்ளது. தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று, யூ.ஜி.சி., இந்த உத்தரவிட்டுள்ளது; இதற்கு, பட்டதாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.யூ.ஜி.சி., நடத்தும் நெட் தேர்வே போதுமானது. செட் தேர்வால் குளறுபடிகளே
நடக்கிறது. இந்த ஆண்டு செட் தேர்வை நடத்தும், அன்னை தெரசா பல்கலையில், பல மாதங்களாக துணைவேந்தர் இல்லை. துணைவேந்தர் பொறுப்பை, உயர்கல்வித் துறை செயலர் அபூர்வா ஏற்றுள்ளார்.மலைப்பகுதியில் உள்ள பல்கலையிலிருந்து,பாதுகாப்பாக அனைத்து மாவட்டங்களுக்கும் வினாத்தாள் அனுப்புவதில் சிக்கல் உள்ளது. மேலும், தேவையற்ற குளறுபடிகளுக்கு வழி வகுக்கும், இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும்.- சாமிநாதன், ஒருங்கிணைப்பாளர், 'நெட் - செட் அசோசியேஷன்'