திருக்குறள் என் வாழ்வில் இணைந்த மிக முக்கிய வாழ்கைச் சித்தாந்தம். என் மாணவப் பருவத்தில் நான் அறிந்த திருக்குறள், என்னுடைய வாழ்வில் முக்கிய அங்கமாகி, என் மனதில் லட்சியப் பொறிகளை உருவாக்கியது.

1946-ல் ஸ்வோர்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது என்னுடைய தமிழ் ஆசிரியர் திருமலைக்கண்ணன், வினைத்திட்பம் என்கிற 67-வது அதிகாரத்தில் இருந்து 666-வது திருக்குறளைப் பாடிப் பாடி பரவசப்படுத்தினார். அன்று மனதில் பதிந்த அந்தக் குறள், என் வாழ்வில் லட்சியங்களைக் கொண்டுவரும் விண்கலம் போன்றதோர் சக்தி மிக்கக் குறள் ஆனது.

'எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின்'

இக்குறள்தான் என் வாழ்வின் அஸ்திவார மானது. எனது விஞ்ஞானப் பணியில் ஒவ்வொரு காலகட்டத்திலும் சோதனைகள் சோர்வுறச் செய்த போது, உள்ளத்துக்கு உரமூட்டிய குறள் இது.

நம் நாட்டின் பல விஞ்ஞானிகளின் எண்ணங்கள் பல வடிவங்களில் உருவெடுத்து அக்னி எழுச்சிபெற்று, ஏவுகணைச் சக்தியாக மலர்ந்தது. நம்நாடு பல துறைகளில் தன்னிறைவு பெற்றுத் திகழ்கிறது. செயலில் உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம்.

நான் படித்த திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரிக்குப் போயிருந்தேன். ஒரு மாணவர் என்னிடம் ஒரு வினா எழுப்பினார். "செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சியிலும் உங்களைப் பார்க்கும்போதெல்லாம் சிரித்துக் கொண்டிருக்கிறீர்களே. வாழ்க்கை எப்போதும் இனிப்பாக இருக்க முடியுமா?" என்று அவர் கேட்டார்.

நான் சொன்னேன்: "ஒவ்வொருவரின் வாழ்விலும் பல புயல்களையும், மிகச் சில தென்றல்களையுமே எதிர்கொள்ள நேர்கிறது. ஒரு தென்றலின் சுகத்தை நோக்கிச் செல்லும்போது, பல புயல்களைக் கடக்க வேண்டியிருக்கிறது. தோல்வியில்லாமல் வெற்றியில்லை. கண்ணீர் எப்போதும் கரிப்பாகவே இருக்கும். ஆனாலும் ஓரிரு சமயங்களில் அது இன்பமாகவும் இருக்கும். அந்த இன்பம் பெற வேண்டுமானால் பல புயல்களைக் கடக்கும் உள்ள உறுதியைப் பெற வேண்டும். நம் எண்ணங்கள் உறுதியானால், அவை உழைப்பாக மாறி, நாம் எண்ணிய லட்சியத்தை அடையலாம். இக்கருத்தைப் பலவிதங்களில், தெளிவுரைகளில் மறைநூல் திருக்குறள் உணர்த்தக் காணாலாம்.

என் வாழ்க்கையில் ஓர் அரும்பெரும் விஞ்ஞானியுடன் பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த விஞ்ஞானி 'உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' என்ற குறளுக்கு ஓர் உதாரணமாக இருந்தார். 1963-ல் இந்தியா எந்தவித விஞ்ஞான வளர்ச்சியையும் பெறும் முன்பே, எப்படி இந்தியாவை வளமான நாடாக மாற்ற முடியும் என்ற எண்ண எழுச்சியைப் பரப்பினார். அவரின் ஒவ்வொரு எண்ணமும், மூச்சும் விஞ்ஞானத்தையும் தொழில்நுட்பத்தையும் சுற்றியே இருக்கும். அவர் பெயர் விக்ரம் சாராபாய். அவர் 'இஸ்ரோ' என்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பை இந்த நாட்டுக்குக் கொடுத்தவர்.

1969-ல் 'கம்யூனிகேஷன் சேட்டிலைட்' எனப்படும் தொடர்புச் சாதன செயற்கைக் கோள்களை எந்த நாடும் வான்வெளியில் ஏவி விடவில்லை. அந்தக் காலகட்டத்திலேயே, இந்தியா எப்படி பெரிய ராக்கெட்டுகளைக் கொண்டு தொடர்புச் சாதன செயற்கைக் கோள்களை ஏவ வேண்டும் என்ற வான்வெளி ஆராய்ச்சித் திட்டத்தை வெளியிட்டார். அந்த மாபெரும் விஞ்ஞானியின் தலைமையில் எங்களுக்குப் பணிபுரியக் கிடைத்தது பெரிய வாய்ப்பாகும். விக்ரம் சாராபாயின் எண்ணங்களில் உருவான வான்வெளி ஆராய்ச்சித் திட்டம், 25 ஆண்டுகளில் பல ஆயிரக் கணக்கான விஞ்ஞானிகள் நாட்டில் தோன்றக் காரண மானது.

இன்று நம்நாடு பல விதமான செயற்கைக் கோள்களை உருவாக்கி, மிக முக்கியமான வான்வெளித் தொடர்புச் சாதனைகளை ஏற்படுத்தி, அது வான்வெளி ஆராய்ச்சிக்கும் பொருளாதார மேம்பாட்டுக்கும் அடிக்கல்லாக அமைந்துள்ளது.

விக்ரம் சாராபாய் ஒரு தொலைநோக்கு கொண்ட விஞ்ஞானி. அந்த விஞ்ஞானிக்கு அணிவிக்க மலர் மாலையாக திருக்குறளின் 60-வது அதிகாரத்தில் இருந்து 595-வது குறளைக் கூற விரும்புகிறேன்.

'வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத்து அனையது உயர்வு.'

விக்ரம் சாராபாய் 30 ஆண்டுகளுக்கு முன் உயர்ந்த லட்சியத் திட்டங்களை வெளியிட்டார். அப்போது அது ஒரு கனவாகத் தோன்றியது. அந்தக் கனவு எண்ணங்கள் உயர்வான லட்சியங்களாக மாறி, விண் திட்டமாகி, இன்றைக்கு நமது செயற்கைக்கோள்கள் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமுமாகச் செய்திகளை அனுப்பிக் கொண்டிருக்கின்றன. இந்தத் தொலைநோக்கு விஞ்ஞானியின் வெற்றி, இந்திய விஞ்ஞானத்தின் வெற்றி. இவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ளக் காரணம், நாம் ஒவ்வொருவர் வீட்டிலும் ஒவ்வொரு நாளும் இக்குறள் ஒலித்துக் கொண்டிருக்க வேண் டும். இதுவே எண்ணங்களைச் செயல்களாக மாற்றி, உள்ள உறுதியைக் கொண்டு லட்சி யத்தை அடைய இளைய தலை முறைக்குத் தூண்டுதலைக் கொடுக்கும்.