செவ்வாய், 5 ஜனவரி, 2016

கல்வி, வேலைவாய்ப்பு: புத்தாண்டின் புதிய சவால்கள்



காலம் மேலும் ஒரு காலடி எடுத்து வைத்துவிட்டது. 2016-ன் வாசலுக்குள்ளே நுழைந்திருக்கும் தருணத்தில் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் என்ன விதமான சவால்கள் காத்திருக்கின்றன ?

வேண்டும் சமூக நீதி!

கல்வியின் முன்னேற்றத்துக்காகத் தேசிய அளவில் பல இயக்கங்களை நடத்திக் கொண்டிருப்பவர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

கடந்த வருடம் முழுவதும் பள்ளிக்கல்வித் துறையில் குழப்பம்தான் நிலவியது என்கிறார். ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்களைத் தளர்த்த வேண்டும் என்று பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு தமிழக அரசு ஏற்றது. அரசு வழங்கிய தளர்வு மதிப்பெண்களை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மேல்முறையீடு செய்தல் உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகள் எதையும் தமிழக அரசு எடுக்கவில்லை.

தகுதித் தேர்வு எழுதித் தேர்வாகிய வர்களுக்குப் பணிநியமனம் அளிப்பதில் அறிவிக்கப்பட்ட வெயிட்டேஜ் முறை சமூகநீதிக்கு எதிரானதாக இருப்பதாக எதிர்ப்புகள் எழுந்தன. இந்தப் பிரச்சினையும் உச்ச நீதிமன்றம் சென்றுள்ளது. இதனால் புதிதாக எந்த ஆசிரியரையும் நியமிக்க முடியாத நிலையில் தமிழக அரசு இருக்கிறது என்கிறார்.

அவர் மேலும் கூறும்போது, குழப்பம் ஒருபக்கம் நீடித்தாலும் மறுபக்கத்தில் அரசுப் பள்ளிகளை அரசே பலவீனப்படுத்துகிற போக்கு தொடர்கிறது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்குப் பள்ளிகளில் மொழியாசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை. ஒருவரே எல்லா பாடங்களையும் எடுக்கும் நிலை மாறவேண்டும் என்று வலியுறுத்தினார்.

பிற மொழிகளைத் தாய்மொழிகளாகக் கொண்டவர்களுக்கும் தாய்மொழிவழிக் கல்வி கிடைக்க வேண்டும் என்றும் ஒரு வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், தமிழும் ஆங்கிலமும் கட்டாயம் எனும்போது மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட ஒரு மாணவர் எப்படித் தனது தாய்மொழிக் கல்வியைப் பெற முடியும்?

தமிழகத்தின் அனைத்துக் குழந்தைகளும் தமிழ் படிக்க வேண்டும். அதேநேரத்தில் தாய் மொழிக் கல்வியும் வேண்டும் என்று வலியுறுத்தினார் அவர்.

இந்த 2016-ம் ஆண்டிலாவது தமிழக அரசு தனது பள்ளிகளை அருகமைப் பள்ளிகளாக அறிவிக்க வேண்டும். "தனியார் பள்ளிகள் இருந்தால் அங்கே அரசுப் பள்ளிகள் எதற்கு" என்ற மனப்பான்மையும் அரசில் உள்ளது. அது மாறவேண்டும் என்று முடித்துக்கொண்டார் பிரின்ஸ்.

திறன் வளர்ப்புக் காலம்

பல பெரிய நிறுவனங்களுக்கான மனித வள ஆலோசகராகப் பணிபுரிபவர் டாக்டர் கார்த்திகேயன்.

தமிழகத்தில் வேலைவாய்ப்புகள் உருவாவதில் போன ஆண்டிலும் பெரிய அளவுக்கு முன்னேற்ற மில்லை. ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறைகளிலும் எதிர்பார்த்த அளவுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை. புத்தாண்டின் முதல் ஆறுமாதங்களில் கூட இந்த நிலையிலிருந்து உடனடியாக மீண்டுவிடலாம் என்ற அறிகுறிகள் இல்லை என்பதே யதார்த்தம் என்கிறார் அவர்.

இருப்பினும், இளைஞர்கள் தங்களின் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான காலம் இது. கல்லூரி வளாகங்களில் அதிகமான அளவுக்கு மாணவர்கள் பெருநிறுவனங்களால் பணிக்கு எடுத்துக் கொள்ளப்படாவிட்டாலும் பல்வேறு இன்டெர்ன்ஷிப் பயிற்சிகளுக்கான வாய்ப்புகள் அவர்களுக்குக் கிடைக்கும் என்கிறார் அவர்.

நமக்கு நாமேதான் சரி!

படிக்கும் காலத்திலேயே வேலைவாய்ப்புக் கான தொடர்புகளை உருவாக்குவது, வேலை வாய்ப்புகளை வழங்கக்கூடிய இடங்களில் இருப்பவர்களோடு நல்ல தொடர்பில் இருப்பது ஆகியவை பெரிய அளவுக்கு உதவும். அதில் கவனம் செலுத்தவேண்டும் என்று அவர் வழிகாட்டுகிறார்.

பொறியியல் படிப்புகள் வழங்கும் வேலைவாய்ப்புகள் தொடர்ந்து அதிகரிக்காது என்ற கணிப்பு சரியாகியிருக்கிறது. தற்போது அதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.

பொருளாதாரச் சூழலின் தேக்கத்தை மாற்றக்கூடிய மிகப்பெரிய திட்டம் எதுவும் தற்போது வரப்போவதில்லை. இந்தச் சூழலில் நாம் எவ்வாறு நம்மை வளர்த்துக்கொள்ளலாம் என்பதே தற்போதைய சவால் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

சேவைகளின் வளர்ச்சி!

மருத்துவம், பலவகையான கல்வியை அளிக்கும் நிறுவனங்கள், ஹோட்டல் துறை, நிதி நிறுவனங்கள், அழகுசாதனத் துறை விரிவடைந்துள்ளன. சேவைத் தொழில்களில் வேலைவாய்ப்புகள் உள்ளன. தமிழக இளைஞர்களும் அவற்றில் அதிகக் கவனத்தைச் செலுத்தலாம். கட்டுமானத் துறையும் இன்னமும் நன்றாகவே போய்க்கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில் நீங்களே சொந்தத் தொழில் தொடங்கலாம் என்று யோசனைகள் வரும். ஆனாலும் பெரிய நிறுவனங்களே ஒரு திணறலோடுதான் செயல்படுவதால் சிறிய நிறுவனங்கள் அகலக் கால் வைக்கக்கூடாது என்றும் கார்த்திகேயன் எச்சரிக்கிறார்.

கல்வியின் நோக்கம் என்ன?

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் தலைவரான பேராசிரியர் நா. மணி,

2015- முழுவதும் 'காட்ஸ்' ஒப்பந்தத்துக்குள் இந்தியாவின் உயர்கல்வியைக் கொண்டுவருவதற்கு எழுந்த பெரிய எதிர்ப்புகளை நினைவுகூர்கிறார். சமீபத்தில் நைரோபியில் நடந்த மாநாட்டில் 'காட்ஸ்' ஒப்பந்தம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப் படவில்லை என்றாலும் தான் நிறைவேற்றுவதாக ஒப்புக்கொண்ட வற்றிலிருந்து இந்தியா பின்வாங்கவில்லை. ஆகவே, 2016-லும் இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்குள் பெரிய விவாதத்தையும் எதிர்ப்புகளையும் ஏற்படுத்தும். பொருளாதார மந்தத்தின் விளைவால் பொறியியல் படிப்புகள் மீதான ஆர்வம் குறைந்து கலையியல், அறிவியல் கல்லூரிகளை நோக்கி மாணவர்கள் திரும்பியது நல்ல விஷயம் என்றாலும் அங்கும் வேலைவாய்ப்பு என்ற அடிப்படையில் மட்டுமே கல்வி அணுகப்படுகிறது. இதனால், அடிப்படை அறிவியல் என்ற விஷயமே புறக்கணிப்புக்குள்ளாகிறது. இப்படியிருந்தால் இந்தியாவில் அறிவியல் வளர்ச்சியே இல்லாமல் போகும் ஆபத்து ஏற்படும். கல்வியின் நோக்கமே வேலைவாய்ப்பு என்று ஆக்கிவிட்டார்கள். அப்படியல்ல என்று அழுத்தமாக மறுக்கிறார் பேராசிரியர்.

செலவு அல்ல, முதலீடு

நமது அரசியலமைப்புச் சட்டம் நமக்கு வழங்கியிருக்கும் தார்மிக நெறிமுறைகளைப் பூர்த்திசெய்வதுதான் கல்வியின் பிரதான நோக்கம்.

கல்விக்குச் செலவிடும் தொகையை வீண் என்றுதான் அரசு கருதுகிறது. இதனால்தான், பல்கலைக்குழு மானியக் குழு (UGC), இந்திய மருத்துவக் குழு (MCI) போன்ற அமைப்புகளையெல்லாம் ஒன்றாக்கி, நீர்த்துப்போகச் செய்யும் வேலைகளை மத்திய அரசு செய்துவருகிறது. அப்படிச் செய்தால் கல்வி சார்ந்த ஆராய்ச்சிக்கும் கல்வி வளர்ச்சிக்கும் செலவிடும் தொகை வெகுவாகக் குறைக்கப்படும். அதற்குப் பிறகு அறிவு வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி எல்லாமே இந்தியாவில் பின்தங்கிப் போய்விடும். கல்விக்குச் செலவிடும் தொகை செலவு அல்ல, முதலீடு என்று விளக்குகிறார் அவர்.

இவ்வளவுக்கு மத்தியிலும், கல்வியைப் பற்றிய மக்களின் விழிப்புணர்வு, கல்வி உரிமைக்காக அவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள்தான் நமக்கு ஊக்க மளிப்பவை. நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் (GDP) 6 சதவீதத்தைக் கல்விக்காகச் செலவிடப்பட வேண்டும் என்ற இலக்கு இன்னும் கனவாகவே இருக்கிறது. நாடு தழுவிய அளவில் பொதுப்பள்ளிக்கான குரலை மேலும் உரக்க ஒலிக்க வேண்டும். இந்த இலக்குகளை நோக்கி மக்களெல்லாம் ஒன்றுதிரண்டு போராடினால் 2016-ல் பெரும் மாற்றங்களை நமது இளைய தலைமுறை கொண்டுவரும் என்றும் பேராசிரியர் நா.மணி நம்பிக்கை கொள்கிறார்.

புத்தாண்டின் புதிய சவால்களை சந்தித்து புதிய தலைமுறையினர் வெற்றிபெறுவார்கள் என மூன்றுபேரும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக