சைதை துரைசாமியின் மனித நேய மையத்தில் படித்த சென்னையை சேர்ந்த பார்வையற்ற மாணவி பெனோ சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வில் வெற்றி பெற்று, நேர்முக தேர்வுக்கு செல்கிறார்.
260 பேர் தேர்ச்சி
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி.) ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.பி.எஸ். உள்பட சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான முதன்மை தேர்வு முடிவுகள் 11–ந்தேதி வெளியிடப்பட்டது. இதில், தமிழ்நாட்டில் இருந்து 260 பேர் வெற்றி பெற்று நேர்முக தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
பார்வையற்ற மாணவி பெனோ
இவர்களில், சென்னை மேயர் சைதை துரைசாமி நடத்தும் மனித நேய ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகத்தில் படித்த 74 பேர் தேர்வு பெற்றுள்ளனர். இவர்களில், சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த பார்வையற்ற மாணவி பெனோவும் ஒருவராவார்.
தேர்வில் வெற்றிபெற்றது குறித்து மாணவி பெனோ 'தினத்தந்தி' நிருபரிடம் கூறியதாவது:– படிப்பில் ஆர்வம் எனது அப்பா பெயர் சார்லஸ், அம்மா பெயர் மேரிபத்மஜா, என்னுடைய அண்ணன் பெயர் புருனோ, கனடா நாட்டில் வேலைபார்க்கிறார். எனக்கு பிறவியிலேயே பார்வையில்லை. சென்னை அண்ணாசாலையில் உள்ள லிட்டில் பிளவர் கான்வென்ட் பள்ளிப்படிப்பை முடித்தேன். பத்தாம் வகுப்பு தேர்வில் 93 சதவீத மார்க் பெற்றேன். பிளஸ்–2 தேர்வில் 90 சதவீத மார்க் வாங்கினேன். அதைத்தொடர்ந்து, ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியில் பி.ஏ.(ஆங்கில இலக்கியம்) படித்து அதிலும் நல்ல மதிப்பெண் எடுத்து பி.ஏ.பட்டம் பெற்றேன். சிறுவயதில் இருந்தே, மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கவேண்டும் என்பது எனது லட்சியம். இதை நிறைவேற்றும் வகையில் எனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டு, பள்ளிப்படிப்பையும், கல்லூரி படிப்பையும் நிறைவு செய்தேன். என்னுடைய முன்னேற்றத்துக்கு எனது பெற்றோர், சகோதரர், ஆசிரியர்கள், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் உறுதுணையாக இருக்கிறார்கள்.
ஐ.ஏ.எஸ். அதிகாரியாகி...
வாழ்க்கையில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகி மற்றவர்களுக்கு உதவவேண்டும் என்ற மனஉறுதியுடன், சென்னையில் உள்ள மனிதநேய மையத்தில் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு படித்தேன். மனிதநேய மையத்தின் தலைவர் சைதை துரைசாமி எனது லட்சியத்தை புரிந்துகொண்டு, மேல் படிப்பில் எனக்கு ரொம்ப ஊக்கம் அளித்தார். படிப்பில் சாதிக்கவேண்டும் என்று அடிக்கடி சொல்வார். படிப்பு தொடர்பாக என்ன உதவி வேண்டுமானாலும் தைரியமாக கேட்கவேண்டும் என்றும் அடிக்கடி சொல்வார். 'சிவில் சர்வீசஸ் தேர்வில் சாதிக்க வேண்டும்' என்ற அவருடைய வார்த்தைகள் எனக்கு மன உறுதியையும், ஆர்வத்தையும், ஊக்கத்தையும் அளித்துள்ளது.
நிச்சயம் வெற்றிபெறுவேன்
சிவில் சர்வீசஸ் தேர்வில் எப்படியும் வெற்றிபெறவேண்டும் என்ற எனது ஆழ்மனதில் ஊறிப்போய் இருந்த என் லட்சியம், முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன். நேர்முக தேர்வு அடுத்த மாதம் 7– ந்தேதி தொடங்குகிறது. இதிலும் நிச்சயம் வெற்றிபெறுவேன் என்று நம்புகிறேன். இவ்வாறு மாணவி பெனோ கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக