செவ்வாய், 24 டிசம்பர், 2013

ஜெர்மனியைச் சேர்ந்த இளம் கணிதப் பேராசிரியருக்கு ‘சாஸ்த்ரா- ராமானுஜன் 2013’ விருது


ஜெர்மனியைச் சேர்ந்த இளம் கணிதப் பேராசிரியருக்கு ‘சாஸ்த்ரா- ராமானுஜன் 2013’ விருதும், 10 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசுத் தொகையும் கும்பகோணத்தில் நடைபெற்ற விழாவில் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

எண் இயற்கணித வடிவியல் மற்றும் சுயமாற்ற வடிவங்கள் தொடர்பான ஆய்வுகள், காலோயிஸ் குறியீட்டு வடிவங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு ஆகியவற்றுக்காக இவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

சாஸ்த்ரா பல்கலைக்கழக கும்பகோணம் சீனிவாச ராமானுஜன் மையத்தில் நடைபெற்ற விழாவில் ஜெர்மன் நாட்டின் பான் பல்கலைக்கழக இளம் கணிதப் பேராசிரியர் பீட்டர் ஷோல்ஷுக்கு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

விருது குறித்து, ஃப்ளோரிடா பல்கலைக்கழகக் கணிதப் பேராசிரியரும், விருதுக் குழுத் தலைவருமான அல்லாடி கிருஷ்ணசுவாமி பேசியது:

“2005 முதல், கணிதமேதை ராமானுஜன் பிறந்த நாளில் ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படுகிறது. ராமானுஜன் மொத்தம் 32 ஆண்டுகள்தான் உயிர் வாழ்ந்தார். அந்த வயதுக்குள்ளேயே அவர் உலகை கலக்கும் வகையிலான கணிதத் தேற்றங்களை உருவாக்கினார். அதனால் இந்த விருதும் 32 வயது அல்லது அதற்கு கீழே உள்ளவர்களுக்கே வழங்கப்படுகிறது. உங்களால் 32 வயதுக்குள் எவ்வளவு கண்டுபிடிக்க முடியும் என்பதை அறிவதற்கானது. இளம் வயதில்தான் அதிகமான கண்டுபிடிப்புகளும் உருவாகும். அவர்களை ஊக்கப்படுத்தவே இந்த விருது வழங்கப்படுகிறது. இது உலக அளவில் கணிதத்துறையில் குறிப்பிடத்தக்க விருதாகும்.

இந்த ஆண்டு விருது பெற்ற சோல்ஷுக்கு 25 வயதுதான் ஆகிறது. இப்போதே இவர் முழு பேராசிரியாகிவிட்டார். முனைவர் பட்ட ஆய்வை முடித்த மறுநாளே இவர் பேராசிரியராகப் பொறுப்பேற்றார். இதுவரை ராமானுஜன் விருது பெற்றவர்களிலேயே இவர்தான் மிக இளம் வயதுடையவர்.

1987-ல் ஜெர்மனியின் டிரெஸ்டனில் பிறந்த இவர், உலகின் மிகச் சிறந்த கணித மேதைகளில் ஒருவராக உள்ளார். இவர் மாணவராக இருந்தபோதே சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் 3 தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றவர். காலத்தால் அழியாத இவரது படைப்புகளுக்காக, அடுத்து பல பத்தாண்டுகளுக்கு கணிதத்துறையில் மிகப்பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் சக்தியாக இருப்பார் என உலகக் கணித அறிஞர்கள் கருதுகின்றனர்” என்றார்.

பீட்டர் சோல்ஷுக்கு விருது வழங்கி மத்திய அறிவியல் தொழில்நுட்ப துறையின் (டீஎஸ்டி), அறிவியல் மற்றும் பொறியியல் ஆய்வு வாரிய (எஸ்இஆர்பி) செயலர் டி.கே. சந்திரசேகர் பேசியது:

“டீஎஸ்டி சார்பில் இங்கு நிறுவப்பட்டுள்ள மறை கணிதம் மற்றும் ராமானுஜன் கணித ஆய்வு இருக்கைகள் தொடர்ந்து செயல்படுவதற்கான ஒப்பந்தம் நீட்டிக்கப்படும். எஸ்இஆர்பி பள்ளி சார்பில் ராமானுஜன் பெயரில் 2 ஆய்வு உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. ஒன்று, வெளிநாட்டில் வசிக்கும் இந்தியாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள், இங்கு வந்து தங்கி 5 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்வதற்கானது. அவர்களுக்கு ஐஐடி உதவி பேராசிரியரின் ஊதியத்துக்கு இணையான உதவித் தொகையும், ஆராய்ச்சிக்காக ரூ.7 லட்சமும் வழங்கப்படும். இதுவரை 255 பேர் பெற்றுள்ளனர்.

இரண்டாவது, இந்தியாவில் முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கானது. இவர்களுக்கும் இதேபோன்ற உதவித் தொகைகள் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இவர்கள், 3 ஆய்வுக் கட்டுரைகளை ஆய்விதழ்களில் வெளியிட்டிருக்க வேண்டும். இதுவரை 500 பேர் பெற்றுள்ளனர்” என்றார்.

ஏற்புரையிலும், பின்னரும் பீட்டர் சோல்ஷ் தெரிவித்தது: “கணிதத்தில் குறிப்பிட்ட பங்களிப்புகாக இந்த விருது

வழங்கப்பட்டுள்ளது. எனது வழிகாட்டியான பேராசிரியர் மைக்கேல் ராப்பபோர்டு-க்கு பெரும் பங்குள்ளது. கணித மேதை ராமானுஜன் விருதை, அவர் வாழ்ந்த ஊரில் பெறுவதில் பெருமையாக உள்ளது. கணிதத்துக்கு மட்டுமல்லாமல் பெரிய பெரிய கலைநயமிக்க கோயில்களுக்கும் இந்த ஊர் புகழ்பெற்றது என்பதை சுற்றிப் பார்த்தபோது தெரிந்து கொண்டேன்” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக