திங்கள், 30 டிசம்பர், 2013

தடுமாறி நிற்கும் உலகத் தமிழாராய்ச்சி மன்றம்


அருட்தந்தை சேவியர் தனிநாயக அடிகளாரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டுவரும் இந்தத் தருணத்தில், அவரது தமிழாய்வு உணர்வு காரணமாக உருவான உலகத் தமிழாராய்ச்சி மன்றம் (இண்டர்நேஷனல் அசோசியேஷன் ஆஃப் தமிழ் ரிசர்ச்) தடுமாறிநிற்கும் நிலை நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

இலங்கையில் பிறந்த தனிநாயக அடிகளார், எத்தனையோ பெருமைகளுக்கு உரியவர். ஆனால், தவறாமல் அவர் நினைவுகூரப்படுவது, இதுவரை நடந்து முடிந்த எட்டு உலகத் தமிழ் மாநாடுகளால்தான். இந்த மாநாடுகளை நடத்தியது உலகத் தமிழாராய்ச்சி மன்றமே. இந்த மாநாடுகளின் அரசியல் ஆரவாரங்களிடையே விளம்பரமே இல்லாமல் தமிழாய்வை முன்னிறுத்தின, இந்த மன்றம் நடத்திய ஆய்வரங்கங்கள். இப்படிப்பட்ட பெருமைக்குரிய மன்றம் இன்று செயலிழந்து முடங்கிக்கிடக்கிறது.

மன்றத்தின் தோற்றமும் அமைப்பும்

1964-ல் புது டெல்லியில் அனைத்துலகக் கீழையியல் ஆய்வறிஞர்களின் மாநாடு நிகழ்ந்தபோது, தமிழாய்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி உலகத் தமிழாராய்ச்சி மன்றம் நிறுவப்பட்டது. 1930-களிலிருந்து திராவிட இயக்கத்தின் அரசியல் செயல்பாடுகளில் மொழி மையம் கொண்டிருந்தது, இந்த மன்றம் உருவாவதற்கான வலுவான பின்னணியாக அமைந்தது. அரசியல் சார்பற்ற கல்விசார் அமைப்பாக பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இந்த மன்றம் பதிவுசெய்யப்பட்டது. இருந்தாலும், இதற்கெனத் தலைமை அலுவலகம் பாரிஸிலோ வேறு நாடுகளிலோ இல்லை. இதற்கெனத் தனி நிதியும் கிடையாது. உலக அளவில் பல தமிழியல் அறிஞர்கள் இந்த அமைப்பின் பொறுப்புகளில் இருக்கிறார்கள்.

மன்றமும் உலகத் தமிழ் மாநாடுகளும்

உலக அளவில் தமிழ் மாநாடுகளை நடத்துவது தமிழாராய்ச்சி மன்றத்தின் முதன்மை நோக்கம். 1966-ம் ஆண்டு முதலாம் உலகத் தமிழ் மாநாட்டை கோலாலம்பூரில் இந்த மன்றம் நடத்தியது. தொடர்ந்து, 1968-ல் இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு சென்னையிலும், 1970-ல் மூன்றாம் மாநாடு பாரிஸிலும், 1974-ல் நான்காம் மாநாடு இலங்கையில் யாழ்ப்பாணத்திலும், ஐந்தாம் மாநாடு 1981-ல் மதுரையிலும், ஆறாம் மாநாடு 1987-ல் மீண்டும் கோலாலம்பூரிலும், 1989-ல்ஏழாம் மாநாடு மொரீசியஸிலும், எட்டாம் உலகத் தமிழ் மாநாடு 1995-ல் தமிழகத்தில் தஞ்சாவூரிலும் நடைபெற்றன.

நிர்வாகக் கட்டுப்பாடுகள்

இந்த மன்றம் மாநாட்டை நடத்துவதற்கு அந்தந்த நாட்டு அரசின் நிதியாதாரத்தைச் சார்ந்திருந்ததால், அதன் நிர்வாகக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மாநாட்டுச் செயற்பாடுகள் நடைபெற வேண்டிய கட்டாயமும், மாநாட்டை மூலதனமாக வைத்து ஆளும் கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடும் நிலையும் தவிர்க்க முடியாத நடைமுறைகளாயின. அரசு அதிகாரிகளின் பெரிய அண்ணன் மனப்பாங்கும் இவற்றுக்கு ஒரு மாற்றும் குறைந்ததில்லை.1995-ம் ஆண்டு நடைபெற்ற எட்டாம் மாநாட்டு ஆய்வரங்கக் கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட 10 ஆண்டுகள் ஆனதும், அச்சடித்த 5,000 பக்கங்கள் கொண்ட 5 தொகுதிகளை வெளியிட்டு விநியோகிக்க ஐந்தாண்டுக் காலம் ஆனதும் உலகத் தமிழாராய்ச்சி மன்றம் இதற்குக் கொடுத்த விலை.

ஆளும் கட்சிகளின் அரசியல் ஆதாயம்

தமிழகத்தில் நடைபெற்ற மூன்று உலகத் தமிழ் மாநாடுகளும் அரசியல் லாபத்தை எதிர்நோக்கி நடத்தப்பட்டவையே. 1967-ல் தி.மு.க. ஆட்சிக் கட்டிலில் அமர்ந்ததைக் கொண்டாடும் விழாவாக சென்னையில் இரண்டாம் மாநாடு 1968-ல் நடைபெற்றது. 1981-ல் மதுரையில் நடந்த மாநாடும், 1995-ல் தஞ்சாவூரில் நடந்த மாநாடும் அ.தி.மு.க-வின் அந்தந்தக் காலத் தேர்தல்களுக்குக் களம் அமைப்பதை எதிர்நோக்கி நடத்தப்பட்டன. மலேசியா, இலங்கை, பிரான்ஸ், மொரீசியஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடுகள் புலம்பெயர்ந்த தமிழர்களின் அச்சத்தைப் போக்கி, அவர்களுடைய நம்பிக்கையைப் பெறுவதில் அந்தந்த நாட்டு அரசியல் கட்சிகளுக்கு உதவின.

எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டின்போது அரசின் தலையீடு ஆய்வரங்க அமைப்பையும் பாதித்தபோது, தமிழாராய்ச்சி மன்றத்தின் கல்விசார் சுதந்திரம் கேள்விக்குறியானது. ஆய்வரங்கங்களில் பங்கேற்க வந்த இலங்கைத் தமிழறிஞர்களும், வெளிநாட்டு அறிஞர்களில் சிலரும் வெளியேற்றப்பட்டனர். இந்த நிகழ்வு உலக நாடுகளின் முன் தமிழாராய்ச்சி மன்றத்துக்குத் தலைகுனிவை ஏற்படுத்தியது.

தடுமாற வைத்த செம்மொழி மாநாடு

இந்த நிலையில், 15 ஆண்டுகளுக்குப் பின்னர் உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் நிர்வாக அமைப்பைத் தடுமாற வைத்த பெருமையைக் கோவையில் நடந்த முதலாம் செம்மொழித் தமிழ் மாநாடு வாரிக்கொண்டது. ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாட்டை 2010 ஜனவரியில் நடத்தப்போவதாக உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் ஒப்புதல் இல்லாமலேயே தமிழக அரசு அறிவித்தது. 2009 செப்டம்பரில்தான் மன்றத்தின் தலைவரான நொபுரு கரஷிமாவுக்கு இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டது. உலகளாவிய மாநாடொன்றை நான்கே மாதங்களில் நடத்துவது சாத்தியமல்ல; குறைந்தது ஓராண்டுக் காலமாவது வேண்டும் என்ற கருத்து தமிழக அரசுக்குத் தெரிவிக்கப்பட்டது. மேலும், மாநாட்டை நடத்துவதற்கு இரண்டு முன்நிபந்தனைகளையும் மன்றம் வலியுறுத்தியது.

1. கிட்டத்தட்ட 5,000 பக்கங்களில் 5 தொகுதிகளாக அச்சிட்டு 2005-லேயே விநியோகத்துக்குத் தயாராக இருந்த எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டு ஆய்வேடுகளை உடனடியாக வெளியிட வேண்டும்.

2. மாநாட்டின்போது ஆய்வரங்கங்களுக்கும் உடன் நிகழும் அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் இடையே தெளிவான எல்லை வரையறுக்கப்பட வேண்டும்.

கருத்து மோதல்கள்

இந்த இரண்டு நிபந்தனைகளையும் தமிழக அரசு ஒப்புக்கொண்டாலும், அரசு முன்வைத்த தேதியை கரஷிமா ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், கரஷிமாவுக்கும் மன்றத்தின் துணைத் தலைவர்களான வி. சி. குழந்தைசாமி, ஐராவதம் மகாதேவன் போன்றோருக்கும் இடையே கருத்து மோதல்கள் வெடித்தன.

குழந்தைசாமி, உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் கூட்டத்தைக் கூட்டி, நடுவண் குழுவின் ஒன்பது உறுப்பினர்களில் ஆறு பேரின் ஒப்புதலைப் பெற்று மாநாடு நடத்துவதற்கான இசைவை அன்றைய தமிழக முதலமைச்சருக்குத் தெரிவித்தார். தமிழாராய்ச்சி மன்றத்தின் ஏகமனதான ஒப்புதலின்றி உலகத் தமிழ் மாநாட்டை நடத்துவதில்லை என்பதில் தீர்மானமாக இருந்த அன்றைய முதலமைச்சர், உலகத் தமிழ் மாநாட்டுக்குப் பதிலாக முதலாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை கோயம்புத்தூரில் 2010, ஜூன் மாதம் அரசே நடத்தும் என்று அறிவித்தார். இந்த மோதல்களின் எதிரொலியாக, கரஷிமா மன்றத் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.

உலகத் தமிழ் மாநாடுகளின் எதிர்காலம்

உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் இந்தத் தடுமாற்றத்தின் காரணமாக உலகத் தமிழ் மாநாடுகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது. உலகத் தமிழியல் ஆய்வறிஞர்களையும், உலகளாவிய தமிழ் ஆர்வலர்களையும் ஒன்றுகூடவைத்த ஓர் உன்னதக் கூட்டமைப்பு முழுவதுமாகச் சிதைவுறும் நிலைக்கு இன்று தள்ளப்பட்டிருப்பது தமிழாய்வுக்கு ஏற்பட்டிருக்கும் துரதிர்ஷ்டம்.

எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டுக்குப் பின்னர் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஓடிவிட்டன. தமிழகத்தைத் தவிர, எந்த அயல்நாடும் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்த இன்றுவரை முன்வரவில்லை. உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தில் ஏற்பட்டிருக்கும் கருத்து மோதல்களும் நிர்வாக மாற்றங்களும் ஒருபுறமிருக்க, தமிழர் புலம்பெயர்ந்துள்ள நாடுகளின் சமூக, அரசியல் பிரச்சினைகளும் இந்தத் தயக்கத்துக்கு முக்கியக் காரணங்கள்.

மாறும் ஆய்வுப் போக்கு

உலகத் தமிழாராய்ச்சி மன்றம் தொடங்கி 50 ஆண்டு காலத்தில் தமிழாய்வின் போக்கும் இன்று மாறியுள்ளது. குறிப்பிட்ட துறைசார்ந்த அறிஞர்கள் கூடி ஆய்வுக் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் இந்தக் காலகட்டத்தில், உலக அளவில் மட்டுமின்றி தேசிய அளவிலும் கூடத் தமிழியல் கருத்தரங்குகளை நடத்தலாம். தனிப் புலம்சார் பிரச்சினைகளைக் குவிமையமாகக்கொண்டு, தமிழாராய்ச்சி மன்றம் இந்தப் பணியில் முனைப்புக் காட்ட வேண்டும் என்னும் கரஷிமாவின் கருத்து சிந்திக்கத் தக்கது. உலகத் தமிழ் மாநாடு என்னும் உறுமீன் வருமளவு காத்திருந்து, காலத்தில் மேற்கொள்ள வேண்டிய ஆய்வுப் பணிகளைத் தள்ளிப்போடுவதை இந்தக் கருத்தரங்குகள் மூலம் தவிர்க்கலாம்.

புத்துயிரும் புதுப்பொலிவும்

இன்று தடுமாறி நிற்கும் உலகத் தமிழாராய்ச்சி மன்றம், மீண்டும் புத்துயிர் பெற வேண்டும். இது தமிழியல் துறை சார்ந்த நேர்மையும் ஆளுமையும் மிக்க இளம் ஆய்வறிஞர்களின் தோள்மீது உள்ளது. அருட்தந்தை தனிநாயக அடிகளார்போல் இன்னொரு தமிழறிஞர் தலைமையேற்று இந்த மாமன்றத்தைத் தலைநிமிரச் செய்ய முன்வருவாரா?

சு. இராசாராம்,பேராசிரியர் (ஓய்வு), தொடர்புக்கு: subbiah_rajaram@yahoo.in

Tamil.thehindu