வெள்ளி, 20 டிசம்பர், 2013

பெருந்தகவலின் காலம் -இரா.முருகன்


பென்சில். அதை வைத்து, படிக்கிற புத்தகத்தில் பிடிக்கிற இடங்களைக் கோடு போட்டு அலங்காரமோ அலங்கோலமோ படுத்தலாம். முனை மழுங்கினால் சீவலாம். காணாமல் போனால் இன்னொரு பென்சில் வாங்கலாம்.

பென்சிலின் பெருந்தகவல்

பென்சிலைப் பற்றிச் சொல்ல வேறு என்ன உண்டு?

தகவல் சேர்க்கலாம். புது பென்சிலை வைத்துக் கோடு இழுத்துக்கொண்டே போனால், முழுவதும் கரைவதற்குள் 35 மைல் கோடு இழுத்திருப்போம். நிலவுக்குப் போகும்போது ஈர்ப்புவிசை இல்லாத காரணத்தால் நாமும் பென்சிலோடு அந்தரத்தில் பறந்தபடியே புதுக்கவிதை எழுதலாம். இன்னும் உலகின் பழைய பென்சில், காந்தி பயன்படுத்திய பென்சில், பென்சில்பற்றிய கவிதை, பென்சில் ஓவியங்கள்…

காலம் கொண்டுவரும் தகவல்கள்

பென்சில் மட்டுமில்லை, மனிதர்கள், நிகழ்ச்சிகள், அறிவியல் ஆய்வு, பொருளாதாரம், வங்கித் தொழில், வணிகம், கர்நாடக சங்கீதம், கானா பாட்டு இப்படி சகலத்தையும் பற்றிச் சேகரித்து வைத்துப் பகிர்ந்துகொள்ளத் தகவல் நிறைய உண்டு. காலத் தேர் முன்னோக்கி உருளஉருள, தகவல்கள் கூடிக்கொண்டே போகின்றன. தலைப்புகள் முளைத்தபடி இருக்கின்றன.

எல்லா அலுவலகத்திலும் இருக்கும் மனித வள மேம்பாட்டுத் துறையை எடுத்துக்கொள்வோம். அலுவலகத்தில் பணிபுரியும், பணி புரிந்தவர்களின் பெயர், விலாசம், புகைப்படம், கல்வித் தகுதி,வேலை, ஊதியம் என்று தொடங்கி, ஏகப்பட்ட தகவல்கள் கணினித் தகவல்தளத்தில் (டேட்டாபேஸ்) சேகரித்துவைக்க வேண்டும்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு அலுவலகத்தில் ஒரு கணினியிலோ, சில கணினிகள் இணைந்த வலைப் பின்னலிலோ இத்தகவல்களைச் சேர்த்து வைத்தார்கள். மிஞ்சிப் போனால் ஒரு கிகாபைட் அளவு தகவல் மொத்தமாக. ஆரக்கிள், சைபேஸ், எஸ்க்யூஎல் சர்வர் இப்படியான தகவல் பரப்பு, அதை இயக்க மென்பொருள் கொண்டு இந்தத் தகவலைச் சுளுவாக நெறிப்படுத்தி சம்பளப் பட்டியலோ, தீபாவளி போனஸ் கணக்கோ போடலாம். வாழ்க்கையும் கணக்கும் சிக்கல் குறைந்து இருந்த காலம் அது.

இன்றைய தகவல் பெருக்கம்

இன்றைக்கு அடிப்படைத் தகவல் மட்டும் போதாது. வேலைக்குச் சேர்ந்த ஊழியர் அளிக்கும் கல்விச் சான்றிதழ் உண்மையிலேயே பல்கலைக்கழகம் அளித்ததா, அப்படி ஒரு பல்கலைக்கழகம் இருக்கிறதா என்று தொடர்புடைய ஆயிரத்தெட்டு தகவல்களை ‘பின்னணி சரிபார்த்து’நிறுவனத்தின் கணினியில் ஏற்ற வேண்டும்.

ஆயிரக்கணக்கில் ஊழியர்கள் உள்ள நிறுவனம் என்றால் மெகாபைட், கிகாபைட் எல்லாம் எகிறி, எக்ஸாபைட் அளவில்தான் இத்தனை தகவல் தேவை என்று கணக்கிட முடியும். எக்ஸாபைட்? பத்து பெருக்கல் பத்து பெருக்கல் பத்து பெருக்கல் பத்து என்று பதினெட்டு தடவை பெருக்கிக்கொண்டே போனால் கிடைக்கும் தகவல் துண்டுகள்!

ஒரு கணினியிலோ வலைப்பின்னலிலோ சேகரித்து, ஆரக்கிளும் சைபேஸும் இவ்வளவு தகவலைக் கையாண்டு, வேண்டுவன வேண்டியபடி எடுத்துத்தருவது மலையைத் தலைமுடி கட்டி இழுக்கும் பணியாகிவிடும்.

தமிழ்த் திரைப்படங்கள்பற்றி ஒரு தகவல் பரப்பு அமைத்தால்? இதுவரை வெளிவந்த ஆயிரக் கணக்கான தமிழ்ப் படங்களின் டிஜிட்டல் வடிவங்கள், இசை, போடப்பட்ட வழக்குகள், தீர்ப்புகள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று தகவல் பெருகிக்கொண்டே போகும்.

போக்குவரத்து, பங்குச் சந்தையில் வணிக நடவடிக்கைகள் என்று குறிப்பிட்ட பணிகளுக்கு இப்படி மலையாகக் குவியும் தகவல்களிலிருந்து விரைவாகவும், சரியான வழியிலும் தேடி, அடுத்த நிமிடம், அடுத்த மணி நேரம், அடுத்த நாள் எப்படி இந்த நடவடிக்கைகள் நிகழும் என்று தர்க்க ரீதியான ஆருடம் கணிக்க வேண்டியிருக்கும். நாம் புழங்கும் சாமான்யமான தகவல்நெறிப்படுத்தல் இல்லை இதெல்லாம். பெருந்தகவல் (பிக் டேட்டா) என்று இதன் சிறப்பு கருதிப் பட்டம் சூட்டிவிடலாம்.

பெருந்தகவல்: சிறுகுறிப்பு

பெருந்தகவல் என்பது குறித்து ஒரு வாக்கியத்தில் சின்னஞ்சிறு குறிப்பு வரைக என்று கேட்டால், அதெல்லாம் முடியாது என்று வெளிநடப்பு செய்யாமல் சொல்ல இதோ பதில்- இன்றைக்கு நடைமுறையில் இருக்கும் எளிய தகவல் தளங்களில் கையாள முடியாமல், சிறப்பு நடவடிக்கை மூலம் கையாளப்பட வேண்டிய பிரம்மாண்டமான தகவல் அடுக்குகள். இவை அதிவேக உருவாக்கம், அதிகக் கொள்ளளவு, அதிக வகைகள் என்று மூன்று குணாதிசயங்களைக் கொண்டவை.

தினசரி உலகில் வணிகம், தொழில், அறிவியல் என்று பல துறைகள் சார்ந்து உருவாகும் தகவல் கிட்டத்தட்ட இரண்டரை எக்ஸாபைட். அதைப் போல் பல மடங்கு தகவலைச் சேமித்து வைக்க மலிவான கணினி வன்பொருள் சாதனங்கள், இணையத்தில் ஏற்படுத்திக்கொள்ள இயலும் மேகக் கணினிகள், பல இடங்களில் அமைந்து ஒருங்கே இயங்கும் கணினி அமைப்புகள் என்று பல முறைகள் புழக்கத்தில் வந்துவிட்டன.

போன வாரம் லெபனான் நாட்டுக் கடற்கரையை ஒட்டி இருபத்தைந்து ட்ரில்லியன் கன அடி நில வாயு இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது மில்லியன் மில்லியன்கள் கன அடி. அகன்ற நிலப்பரப்பு, மிக அடர்த்தியான வாயு கையிருப்பு. நிலத்தடியிலும் மேற்பரப்பிலும் ஆய்வு செய்த வகையில் பல தரத்தில் குவியும் தகவல். துல்லியமாக வாயு இருக்கும் இடங்களைத் தேடி அடையாளம் காணவும் அந்த வளத்தைச் சீராகப் பயன்படுத்த பாதை வகுக்கவும் பெருந்தகவல் அமைப்புகளே கைகொடுக்கின்றன.

கடவுள் துகள்

அண்மையில் அணுத்துகள் ஆய்வுக்கான ஐரோப்பியக் கூட்டமைப்பு (செர்ன்), ஹாட்ரான் என்ற துகள் தாக்குவிப்பான் (பார்ட்டிக்கிள் கொலைடர்) மூலம் ஆய்வுசெய்து ஹிக்ஸ் போஸான் என்ற‘கடவுள் துகள்’ இருப்பதை நிறுவ முற்பட்டது. இந்த ஹாட்ரான் கருவியில் பத்து லட்சம் சென்சர்கள் வினாடிக்கு நாலு கோடி அணுத் துகள் மோதல்களைப் பதிவுசெய்தன. அவற்றுக்கான பெருந்தகவலில் இருந்து நூறோ இருநூறோ குறிப்பிடத் தகுந்த மோதல்கள் பற்றிய நுண்தகவலை மட்டும் பிரித்தெடுத்து ஆய்வுசெய்யத் தேவை எழுந்தது. பெருந்தகவல் அமைப்பும், தகவல் சேமிப்பும், கண் சிமிட்டும் நேரத்துக்குள் வேண்டிய தகவல் அடுக்கை வைக்கோல் போரில் ஊசியாகத் தேடிக் கண்டுபிடிக்கும் ஆற்றலும் கடவுள் துகளின் இருப்பை உறுதிசெய்யத் துணைநின்றன.

கடவுள் துகளைக் காணப் பெருந்தகவல் துணைபுரியும். கடவுள் இருப்பதைக் காண? சின்ன நம்பிக்கை மனதில் இருந்தாலே போதுமோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக