புதன், 25 டிசம்பர், 2013

குப்பை உணவை தவிர்த்தால், தொப்பையில்லாத வாழ்க்கை வாழலாம்


‘கடந்த காலங்களில் சளி, இருமல் இருந்தால் வீட்டு வைத்தியமும் பாட்டி குறிப்பும் கை கொடுக்கும். இன்று டாக்டரிடம் ஓடுகிறார்கள். வீட்டு வைத்திய முறை மீட்கப்பட வேண்டும். பாரம்பரிய உணவுப் பழக்கத்துக்கு மாறவேண்டும்’ என கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

நாகர்கோவில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில், ஹோமியோபதி, இந்திய மருத்துவம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை சார்பில், தொற்றா நோய்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் திங்கள் கிழமை நடைபெற்றது.

குறுந்தகடு வெளியீடு

சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் டாக்டர் சம்பத் வரவேற்றார். சர்க்கரை நோய், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் யோகா பயிற்சிகள் அடங்கிய குறுந்தகடை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் வெளியிட்டு பேசியதாவது:

இந்திய மருத்துவத்துறை சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய துறைகளை உள்ளடக்கியது. நம் மருத்துவ முறை 2000 ஆண்டுகள் தொன்மையானது.

பெருகிவரும் தொற்றா நோய் களான ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய், கர்ப்பப்பை வாய் புற்று, மார்பக புற்று போன்ற தொற்றா நோய் வகைகளைக் கருத்தில் கொண்டு தொற்றா வகை நோய் தடுப்புப் பணிகளை ஒருங்கிணைக்கும் நோக்கத்தில் இந்த கருத்தரங்கம் நடைபெறுகிறது.

வெற்றி நிச்சயம்

தற்போது, ஒரே மருத்துவ வளாகத்தில், பல பிரிவுகளை உள்ளடக்கிய மருத்துவர்கள் பலர் பணிபுரிந்தபோதும் ஒருவருக்கொருவர் பெயர் தெரியாத நிலை உள்ளது. இந்த கருத்தரங்கின் மூலம் இடைவெளி குறைந்து, நெருக்கம் அதிகரிக்கும்.அரசு மருத்துவர்களிடம் நோயாளிகள் வரும்போது, உங்களிடம் இல்லாத வைத்திய முறை அருகில் உள்ள வேறு பிரிவில் அதற்கு சிகிச்சை அளிக்க முடியும் என நம்பினால் தயங்காது பரிந்துரைத்து அனுப்ப வேண்டும். பாரம்பரியத்தோடு, விஞ்ஞானமும் சேர்ந்தால் வெற்றி நிச்சயம்.

மருத்துவத்துறை மற்றும் குடும்ப நலன் துணை இயக்குநர் ரவீந்திரன் பேசுகையில், “நான் ஆங்கில மருத்துவர். இதய நோய் காரணமாக சில ஆண்டுக்கு முன்பு பைபாஸ் சர்ஜரி செய்து கொண்டேன். தொடர்ந்து ஆங்கில மருத்துவமும் எடுத்து வந்தேன். இடையில் நண்பர் ஒருவரின் வழிகாட்டுதலோடு இயற்கை உணவு, உடற்பயிற்சி, யோகா, பிராணாயாமம் உள்ளிட்ட பயிற்சிகளை செய்தேன். மிகப் பெரிய மாற்றத்தை உணர்ந்தேன்” என்றார்.

சித்த மருத்துவர் சிவராமன் பேசியதாவது:

வெளிநாட்டு குப்பை உணவை தவிர்த்தால், தொப்பையில்லாத வாழ்க்கை வாழலாம். பாரம்பரிய உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.சித்த மருத்துவம் பாரம்பரிய முறைப்படி வாழவே பரிந்துரைக்கிறது.

குமரி மாவட்டத்தை பொறுத்த வரை, ‘மட்டி வாழை’ மிகவும் பிரசித்தி பெற்றது. குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் இந்த ரக பழத்தில் சளி தொல்லை இல்லை. இனிப்பு ரகங்களில் உப்பேரி, தேன் என அந்தந்த பகுதி பாரம்பரிய உணவுகளை சாப்பிடும் பழக்கத்தை தொலைத்துவிடக் கூடாது.

முன்பெல்லாம் சளி, இருமல் இருந்தால் வீட்டு வைத்தியமும், பாட்டி குறிப்பும் கை கொடுக்கும். இன்று டாக்டரிடம் ஓடுகிறார்கள். வீட்டு வைத்திய முறை மீட்கப்பட வேண்டும் .அவையெல்லாம் காலத்தால் அழிக்க முடியாத பொக்கிஷங்கள். சித்த மருத்துவம் நாள்பட்ட நோய்களையும் தீர்க்கும். நோய்களுக்கு நல்ல பலன் அளிக்கும்.

ஆங்கில மருத்து எடுத்துக் கொள்பவர்களும் சித்த மருந்துகளை எடுக்கலாம். ஆனால், ஆங்கில மருந்துகளை நிறுத்திவிடக் கூடாது. இரண்டு துறை வல்லுநர்களையும் இணைத்திருக்கும் இந்த முயற்சி பாராட்டுக்குரியது என்றார்.

பிரகிர்தி

ஆயுர்வேத மருத்துவர் மகாதேவன் பேசுகையில், “இடுப்பு வலி, கழுத்து வலி, மூட்டு வலி, கொழுப்பு குறைப்பு ஆகியவற்றுக்கு ஆயுர்வேத மருத்துவம் நல்ல பலனை அளிக்கும். உடல், மனத் தன்மையை, ‘பிரகிர்தி’ என ஆயுர்வேதம் சொல்லுகிறது. ஆயுர்வேதம் அடிப்படையான அறிவு. இது குறித்த சித்தாந்தம் புரிந்துவிட்டால், நோய் வரும் முன்பே தடுத்து விடலாம்” என்றார்.

தமிழகத்தில் கொசுக்கள் மூலம் பரவிய டெங்கு காய்ச்சலுக்கு ஆங்கில மருத்துவ முறை கையை விரித்த நேரத்தில், பாரம்பரிய மருத்துவர்கள் வீதியெங்கும் அரசு சார்பில் நிலவேம்பு கசாயம் இலவசமாக விநியோகம் செய்து, டெங்கு காய்ச்சலைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். கால்நடைகளை வாட்டி வதைத்த கோமாரி நோய்க்கும்கூட மூலிகை மருந்துகளே ஆறுதலாய் அமைந்தன.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக