சனி, 21 டிசம்பர், 2013

 அரசு நூலகங்களுக்கு புதிதாக நூல்கள் வாங்கமுடிவு


 அரசு நூலகங்களுக்கு புதிதாக நூல்கள் வாங்கமுடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிப்பகங்கள் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக பொது நூலக இயக்குநரும் (கூடுதல் பொறுப்பு),பள்ளிக்கல்வி இயக்குநருமான வி.சி.ராமேஸ்வர முருகன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:- 
 தமிழக அரசின் பொதுநூலக இயக்ககத்தின் கீழ் செயல்படும் பொது நூலகங்களுக்கு நூலகநிதி மற்றும் ராஜாராம் மோகன்ராய் நூலக அறக்கட்டளை நிதி உதவியில் இருந்து 2012 மற்றும் 2013-ம் ஆண்டு பதிப்பு செய்யப்பட்ட தமிழ், ஆங்கில நூல்கள் வாங்கப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்களை பொது நூலக இயக்ககம் பெற இருக்கிறது. விண்ணப்ப படிவங்களை (படிவம்-ஏ, பி, சி என 3 படிவங்கள்) கன்னிமாரா நூலகத்தின் இணையதளத்தில்(www.connemarapubliclibrarychennai.com) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். படிவங்களை பூர்த்திசெய்வது தொடர்பான வழிமுறைகளும் இந்த இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. கடைசி நாள் விண்ணப்பிக்க விரும்பும் பதிப்பகங்கள் 3 படிவங்களையும் பூர்த்தி செய்து நூல் தலைப்பு ஒன்றுக்கு பதிவுகட்டணமாக ரூ.100 வீதம் இந்தியன் வங்கியின் ஏதாவது ஒரு கிளையில் பொது நூலக இயக்கக கணக்கில் செலுத்தி அந்த தொகைக்கான அசல் செலானை வெள்ளைத்தாளில்
ஒட்டி, அதில் பதிப்பக முத்திரையுடன் படிவம்-ஏ உடன் இணைத்து மாதிரி பிரதி நூல்களுடன் அந்தந்த மாவட்ட நூலக ஆணைக்குழுவின் அலுவலகத்தில் ஜனவரி 20-ம் தேதிக்குள் அலுவலக வேலை நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கப்படும் ஒவ்வொரு பதிப்பகத்துக்கும் தனித்தனியே படிவம்-பி-யை பூர்த்திசெய்து வழங்க
வேண்டும். படிவம்-ஏ-யை பொருத்தவரையில், ஒவ்வொரு பதிப்பகமும் ஒரு பிரதி மட்டும்
பூர்த்தி செய்து அளித்தால் போதுமானது. படிவம்-சி என்பது பதிப்பகம் மூலம் சமர்ப்பிக்கப்படும் நூல்கள் தொடர்பானது ஆகும். இதுதொடர்பாக கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால் 044-28524263 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக