ஞாயிறு, 29 டிசம்பர், 2013

NEWS UPDATE :ரூ.1லட்சம் லஞ்சம்  உடற்கல்வி இயக்குநர் கைது: முதன்மைக் கல்வி அலுவலர் மீதும் வழக்கு


நிர்வாகக் காரணங்களுக்காக பணியிட மாறுதல் செய்யப்பட்ட உதவித் தலைமை ஆசிரியையின் உத்தரவை ரத்து செய்ய, ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய உடற்கல்வி இயக்குநரை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கும் தொடர்பு இருப்பதால் வழக்கின் இரண்டாவது குற்றவாளியாக அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா கேமரான்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் புவனா (51), குடியாத்தம் நெல்லூர் பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் உதவித் தலைமை ஆசிரியையாக இருந்தார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு நிர்வாகக் காரணங்களுக்காக கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார்.

இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுப்பிரமணியத்தைச் சந்தித்து புவனா முறையிட்டுள்ளார். இதற்கு அவர் குடியாத்தம் அடுத்த பல்லலகுப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியின் உடற்

கல்வி இயக்குநர் கலையரசன் (42) என்பவரைச் சந்தித்துப் பேசுங்கள். அவர் உங்களுக்கு உதவி செய்வார் என தெரிவித்துள்ளார்.

அதன்படி, கடந்த வாரம் கலை யரசனைச் சந்தித்த புவனா, பணியிட மாறுதல் உத்தரவை ரத்து செய்வது தொடர்பாகப் பேசியுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்ய ரூ.3.50 லட்சம் செலவாகும் எனக் கூறியுள்ளார். பேரத்தின் முடிவில் ரூ.3 லட்சம் வழங்க முடிவானது. பணத்தைக் கொடுக்க விரும்பாத புவனா, வேலூர் லஞ்ச ஒழிப்புப் பிரிவில் புகார் கொடுத்தார்.

இதனையடுத்து, ஏடிஎஸ்பி பாலசுப்பிரமணியன் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை புவனாவிடம் கொடுத்தனுப்பினார்.

வெள்ளிக்கிழமை இரவு ரூ.1 லட்சம் பணத்தை புவனாவின் வீட்டுக்கு வந்த கலையரசனை லஞ்ச ஒழிப்புப் பிரிவு ஆய்வாளர்கள் பழனி, ரஜினிகாந்த், விஜய் ஆகியோர் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், லஞ்ச பணத்தில் ரூ.50 ஆயிரத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு கொடுக்க இருப்பதும் உறுதியானது.

இதையடுத்து, முதல் குற்ற வாளியாக கலையரசன், இரண்டாவது குற்றவாளியாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுப்பிரமணியனின் பெயர் சேர்க்கப்பட்டது.

கைது செய்யப் பட்ட உடற்கல்வி இயக்குநர் கலையரசன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கலையரசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் உறவினர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் கலையரசனை கைது செய்ததையடுத்து, அவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுப்பிரமணியத்தின் மீது ஏற்கெனவே வேலூர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாருக்கு புகார்கள் வந்துள்ளன. கடந்த 2012-ம் ஆண்டு வேலூர் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில், அரசுப் பள்ளிகளின் வரவு செலவு கணக்கு குறித்த ஆய்வு நடந்தது. அப்போது ஒவ்வொரு பள்ளிகள் சார்பில் கணக்குக் குழுவினருக்காக பணம் பெறப்பட்டது. லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் நடத்திய திடீர் சோதனையில் அங்கு கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் நடந்தபோது, சுப்பிரமணி வேலூர் கல்வி மாவட்ட அலுவலராக இருந்தார்.

அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் பரிந்துரை கடிதம் அனுப்பியிருந்தனர். தற்போது இந்த வழக்குத் தொடர்பாக விரைவில் அவரிடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

Source the Hindu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக