வியாழன், 30 ஜனவரி, 2014

தர்மபுரி மாவட்டம் சோளக்கொட்டாய் அரசு பள்ளி விளையாட்டில் முதலிடம்!

தர்மபுரி மாவட்டம் சோளக்கொட்டாய் அரசு பள்ளி மாணவர்கள், அரசு சார்பில்நடக்கும் போட்டிகளில் பங்கேற்று, பல்வேறு சாதனைகளை படைத்து, நடப்பு கல்வியாண்டில்,ஒரு லட்சத்து, 8,000 ரூபாயை பரிசுத்தொகையாக குவித்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில், 89 அரசு மேல்நிலைப்பள்ளிகளும், 113 உயர்நிலைப்பள்ளியும், 311
நடுநிலைப்பள்ளி, 789 துவக்கப்பள்ளிகளும் இயங்கி வருகிறது. மாணவ, மாணவிகளுக்குள் புதைந்திருக்கும் விளையாட்டு, கலைத்திறன் ஆற்றலை வெளிப்படுத்த, அரசு சார்பில்,பல்வேறு விளையாட்டு போட்டிகளும், பேச்சு, ஓவியம், கட்டுரை போட்டிகளும் அவ்வப்போது நடந்து வருகிறது. தொடர் படிப்புகளால் முடங்கி கிடந்த மாணவர்கள், பல்வேறு போட்டிகளால்தங்களது தனித்திறமையை காட்டி, புத்துணர்ச்சி பெற்றனர்.

அனைத்து மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பள்ளிக்கல்வித்துறை சார்பில்,பைகா, மாவட்ட, மண்டல, மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. கல்வி அறிவு மற்றும் வருமானத்தில் பின்தங்கிய தர்மபுரி மாவட்டத்தை மாணவர்களின், விளையாட்டு திறமையை வெளிப்படுத்தும் வகையிலும் பல்வேறு போட்டிகள் நடந்து வருகிறது. இதில், பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பங்கேற்று, வெற்றி பெறும் மாணவ,மாணவிகளுக்கு பரிசுத்தொகையும், சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது.


தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளும் பல்வேறு சாதனை படைத்து வருகின்றனர். குறிப்பாக,அரசு பள்ளி அளவில், தர்மபுரி அடுத்த சோளக்கொட்டாய் அரசு பள்ளி மாணவர்கள், நடப்பாண்டில் அதிகளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று, நடப்பு கல்வி ஆண்டில், ஒரு லட்சத்து, 8,000 ரூபாயை பரிசுத்தொகையாக பெற்று முதலிடம் பிடித்தனர்.

இதுகுறித்து, சோளக்கொட்டாய் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மாது, உடற்கல்வி ஆசிரியர் கருணாகரன் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில் மட்டுமின்றி, தமிழகம், தேசிய அளவில் நடந்த, ஜிம்னாஸ்டிக், ஹாக்கி, கபடி, வாலிபால்,கோகோ போன்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற, சோளக்கொட்டாய் அரசு பள்ளி மாணவ,மாணவிகள் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர். இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, கல்வியோடு,விளையாட்டு, கலைத்திறன் ஆகியவற்றையும் வழங்கி வருகிறோம். முறையான பயிற்சியையும், முயற்சியையும் தன்னகத்தே கொண்ட இப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று, எங்கள் பள்ளிக்கு பெருமை தேடி தந்துள்ளனர்.

ஆண்டுதோறும் பைக்கா, முதல்வர் கோப்பை, தேசிய மகளிர் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு மாநில, தேசியபோட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு அரசு பரிசுத்தொகை வழங்கி வருகிறது.2013-14ம் ஆண்டில், பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, வெற்றிகளை குவித்ததன் மூலம், சோளக்கொட்டாய் அரசு பள்ளி மாணவர்கள், ஒரு லட்சத்து, 8,000 ரூபாயை பரிசுத்தொகையாக வென்றுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில், அதிக பரிசுத்தொகை பெற்று, சோளக்கொட்டாய் அரசு பள்ளி முதலிடத்தில் உள்ளது, என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக