வியாழன், 23 ஜனவரி, 2014

தமிழ் நாகரிகமும், சீன நாகரிகமும்


சீன நாகரிகம் 6 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. அதேபோல் தமிழ் நாகரிகமும் மிகமிக பழமையானது. உலகின் இந்த இரண்டு பழமையான நாகரிகங்களுக்கு இடையில் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்பு இருந்திருக்கிறது. சீன இலக்கியங்கள், கல்வெட்டுக்கள், சீனக் காசுகள், பீங்கான்கள் போன்ற தொல்பொருட்கள் மூலம் கிடைத்த ஆதாரங்களை வைத்து இந்த தொடர்பு நிருபிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தை பற்றி சீனர்கள் கி.மு.2000 நூற்றாண்டிலேயே அறிந்திருக்கிறார்கள். கி.மு.1408க்கு இடைப்பட்ட காலத்தில் வூ.டி. என்ற சீன அரசர் காலத்தில் சீனாவுக்கும் தமிழகத்தில் இருந்த ‘ஹுவங்சு‘ என்ற நகருக்கும் இடையில் வணிகத் தொடர்பு இருந்ததாக ‘சியன் ஹன் சு‘ என்ற சீன நூல் குறிப்பிடுகிறது. தமிழகத்தில் ‘ஹுவங்சு‘ என்ற ஊர் எங்கிருக்கிறது என்று தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வு செய்தது. அதன் முடிவில் ஹுவங்சு என்பது இன்றைய காஞ்சீபுரம் என்பதும், அது 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஊர் என்பதும் தெரியவந்தது.
 புத்தமதம் சீனாவில் பரவியபோது தமிழகத்திற்கும் சீனாவிற்கும் இடையில் சமயத் துறவிகள் பரிமாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இந்திய மதவாதிகளில் காஞ்சீபுரத்தை சேர்ந்த போதிதர்மர், புத்தமதத்தை சீனாவில் பரப்பச் சென்றார். இவர் கி.பி.520–ல் சீனாவின் தென்பகுதியில் அமைந்த கான்டன் நகரை அடைந்தார். அங்கு அவர் தியான மார்க்கத்தில் புத்த மதத்தை போதித்தார். கி.பி.7–ம் நூற்றாண்டில் யுவான்சுவாங் என்ற சீனத்துறவி இந்தியாவிற்கு வந்திருக்கிறார்.
 சோழர்கள் காலத்தில்சீனாவுக்கும் தமிழகத்திற்கும் இடையில் வணிகத் தொடர்பு அதிகரித்திருக்கிறது. முதலாம் ராசராசனால், கி.பி.1015–ல் 52 வணிகர்கள் கொண்ட ஒரு குழு தமிழகத்தில் இருந்து சீனாவுக்கு அனுப்பப்பட்டது. இந்த குழு பலவித பரிசு பொருட்களை தமிழகத்தில் இருந்து எடுத்துக் கொண்டு போய் சீன அரசருக்கு பரிசாக வழங்கியதுடன், சீனாவிற்கும், தமிழகத்திற்கும் வணிகத் தொடர்பை ஏற்படுத்த பேச்சுவார்த்தையையும் அந்த அரசருடன் மேற்கொண்டது. இந்த பேச்சுவார்த்தையின் பயனாக தமிழகத்திற்கும் சீனாவிற்கும் இடையில் வணிக ஒப்பந்தங்கள் ஏற்பட்டிருக்கின்றன. 
தமிழக வணிகர்கள் சீனாவிற்கும், சீன வணிகர்கள் தமிழகத்திற்கும் பயணப்பட்டனர்.

 தமிழகத்திற்கு வந்த சீன வணிகர்கள் வழிபட முதலாம் நரசிம்மவர்மன் மாமல்லபுரம் அல்லது காஞ்சீபுரத்தில் ஒரு கோவிலை கட்டியதாகத் தெரிகிறது. இதே போல் தமிழகத்தில் இருந்து சீனாவுக்கு வணிகம் செய்யச்சென்ற தமிழக வணிகர்களுக்காக சீனாவின் தென்பகுதி நகரமான ‘குவந்–சு‘ என்ற நகரில் ஒரு கோவில் கட்டப்பட்டது. அன்றைய சீன அரசனான குப்லாகான் என்ற செகசைகான் என்ற அரசனின் அனுமதியோடு இந்த கோவிலை, தவச்சக்கரவர்த்திகள் என்பவர் கி.பி.1281–ல் கட்டியிருக்கிறார். இந்த கோவில் தான் சீன அரசர் பெயரால் திருக்கானீச்சுரம் என்று அழைக்கப்பட்டு வந்திருக்கிறது.

 தமிழ்நாட்டுக் கோவிலின் பல பகுதிகள் சீனாவில் கிடைத்துள்ளன. குவான் சு நகரில் கைய் யூன் என்ற கோவிலில் திருமாலின் முழு வடிவச் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. பல தூண்களில் புடைப்புச் சிற்பங்களாக ஸ்ரீதேவி பூதேவியுடன் அமர்ந்த திருமால், நரசிம்மர், ஆடை கவரும் கிருஷ்ணன், தாமோதரன், பைரவர் போன்ற வடிவங்கள் கிடைத்துள்ளன. ஆகவே சீனாவின் ‘குவான் சு‘ நகரம் தமிழ் வணிகர்களுக்கான நகரமாக இருந்திருக்கலாம் என்று தெரிய வருகிறது.
 ‘த படன்‘ என்று சீனவணிகர்களால் அழைக்கப்பட்ட தமிழக கடற்கரையோர நகரில் சீனக் கப்பல்கள் வந்து நங்கூரமிட்டு நிறுத்துவதற்காக கப்பலூரணி என்ற பகுதி இருந்ததாக தயெசுலி என்ற சீன நூல் குறிப்பிடுகிறது. ‘த படன்‘ என்பது இன்றைய நாகப்பட்டினம் என்று தெரிய வருகிறது.
 சீனா என்பது சர்வதேச அரசியலில் பிரமாண்டமாகத் தெரிகிறது. ஆனால், சீனர்கள் தமிழர்களிடத்தில் மிகுந்த மரியாதையும், தமிழக துறவிகள், வணிகர்களுடன் நெருங்கிய நட்பும் கொண்டிருந்ததை இப்போதும் கிடைத்து வரும் தொல்பொருட்கள் நிரூபித்துக் கொண்டே இருக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக