சனி, 25 ஜனவரி, 2014

வங்கிகளின் தானியங்கி பணப்பட்டுவாடா (ஏடிஎம்) மையங்களை நிர்வகிக்க புதிய பாதுகாப்பு கருவி.


வங்கிகளின் தானியங்கி பணப்பட்டுவாடா (ஏடிஎம்) மையங்களை நிர்வகிக்க புதிய பாதுகாப்பு கருவியை ஜிகாம் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

பெங்களூரில் சமீபத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள ஏடிஎம் மையங்களில் 24 மணி நேரமும் காவலர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதனால் ஒரு ஏடிஎம் மையத்தை நிர்வகிக்க மாதத்துக்கு ரூ. 40 ஆயிரம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஈடுகட்ட வாடிக்கை யாளர்கள் ஏடிஎம் மையங்களை உபயோகிப் பதற்கு கட்டணம் வசூலிக்க ரிசர்வ் வங்கி அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பல்வேறு வங்கிகள் முன் வைத்துள்ளன.

நாடு முழுவதும் 1.65 லட்சம் ஏடிஎம்கள் உள்ளன. ஏற்கெனவே வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களை பயன்படுத்துவற்கு ஒரு பரிவர்த்தனைக்கு ரூ. 4 முதல் ரூ. 5 வரை செலவாகிறது. இந்த செலவை வங்கிகள்தான் ஏற்கின்றன.

ஏடிஎம்களில் 24 மணி நேர காவலர்கள் நியமிக்கப்பட வேண்டுமெனில் ஒரு பரிவர்த்தனைக்கு

ரூ. 10 தொகையை வாடிக்கையாளர்கள் செலுத்தினால் மட்டுமே சாத்தியமாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஏடிஎம்களுக்கு முழு நேர பாதுகாப்பு அளிக்க வேண்டுமெனில் வங்கிகளுக்கு கூடுதல் செலவாகும். இந்த செலவை வங்கிகள் வாடிக்கையாளரிடமிருந்துதான் வசூலிக்க வேண்டியிருக்கும் என பெயர் குறிப்பிட விரும்பாத வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

வாடிக்கையாளர்கள் இந்த கூடுதல் சுமையை ஏற்கத் தயாராக உள்ளனரா என்பது தெரியவில்லை என்று குறிப்பிட்டார்.

இத்தகைய சூழலில் மின்னணு பாதுகாப்பு சாதனங்களை அளிக்கும் ஜிகாம் நிறுவனம் ஏடிஎம்களின் பாதுகாப்புக்கு புதிய முறையை உருவாக்கியுள்ளது.

மின்சாரத்தை சேமிக்கும் அதே சமயம் 24 மணி நேரம் செயல்படக் கூடிய தொலை தூரத்திலிருந்து நிர்வகிக்கக் கூடிய பாதுகாப்பு கருவியை ஏற்படுத்தியுள்ளது.

அசாதாரண சூழல் ஏற்படும் ஏடிஎம்களில் உடனடியாக சென்று பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் க்யூஆர்எம் சேவை இணைப்பும் இத்துடன் அளிக்கப்பட்டுள்ளது.

இது முற்றிலும் சேவை அடிப்படையிலானது. இதற்கு கூடுதல் முதலீடும் தேவையில்லை. ஆண்டு நிர்வாகக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

ஒரு ஏடிஎம்-மிற்கு இரண்டு காவலர்களை நியமிப்பதால் ஏற்படும் செலவைக் காட்டிலும் மிகக் குறைவாகும்.

ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) வகுத்துள்ள விதிகளின் அடிப்படையில் இந்த பாதுகாப்பு சாதனம் செயல்படும்.

ஜிகாம் நிறுவனத்தின் ஆண்டு விற்பனை வருமானம் ரூ. 691 கோடியாகும். 5 நாடுகளில் இந்நிறுவன கருவிகள் விற்பனையாகின்றன. இந்தியாவில் 400 நகரங்களில் 10 லட்சம் வாடிக்கையாளர்கள் இந்நிறுவனத்துக்கு உள்ளனர்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக