வெள்ளி, 24 ஜனவரி, 2014

விதிகளை மீறி சேர்க்கை விண்ணப்பம் விநியோகிக்கும் தனியார் பள்ளிகள்



அரசின் விதிகளை மீறி மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பம் விநியோகிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தனியார் பள்ளியில் முன்பருவக் கல்வியான எல்கேஜியில் சேர்க்க இடம் கிடைத்துவிட்டால் அந்தப் பள்ளியில் பணம் கட்டி குழந்தையைச் சேர்ப்பர். ஒருவேளை சேர்க்கை மறுக்கப்பட்டு வேறு யாரேனும் பரிந்துரைத்தால்தான் அப்பள்ளியில் தங்களின் குழந்தை படிக்க இடம் கிடைக்கும் என்ற நிலை உருவாகுமானால் அதற்கும் அவர்கள் தயங்குவதில்லை.

இலவச கல்வித் திட்டம்...

எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு மெட்ரிக் பள்ளிகளில் கல்வி மறுக்கப்படுவதால் இதுபோன்ற குழந்தைகளின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சமாக இருந்தால் சுயநிதி சிறுபான்மை பள்ளிகள் தவிர ஏனைய தனியார் பள்ளிகளில் அரசின் இலவச கல்வித் திட்டத்தில் சேர்க்கலாம் என்பதை மத்திய அரசு 2009-ல் சட்டமாக இயற்றியுள்ளது. இச்சட்டம் தமிழகத்திலும் அமலாக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான பள்ளிகளில் 25 சதவீதம் ஏழைகளுக்கு இடஒதுக்கீடு கொடுக்க மறுப்பதாக புகார் எழுந்ததால் சேர்க்கை விவரத்தை அந்தந்தப் பள்ளிகளில் தகவல் பலகையில் பார்வைக்கு ஒட்டவேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெரிய பெரிய பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்ப்பதைக்கூட உயர்ந்த தகுதியாகக் கருதுவதால் விண்ணப்பம் பெறுவதில் ஏற்படும் கடும் போட்டி, எல்கேஜியில் 3 வயது நிரம்பாத குழந்தைகளைச் சேர்ப்பது, அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்துக்கு மாறாக கட்டணம் வசூலிப்பது போன்றவற்றைத் தடுக்கும் விதமாக ஜூன் மாதம் தொடங்கும் வகுப்புக்கு மே மாதத்தில்தான் விண்ணப்பம் விநியோகம் செய்ய வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது.

விண்ணப்பம் விநியோகம் தொடக்கம்...

இருப்பினும் தமிழகத்தில் தற்போதே தனியார் பள்ளிகளில் விண்ணப்பம் விநியோகிக்கும் பணி தொடங்கியுள்ளது. இதை மக்களுக்குத் தெரிவிக்கும் விதமாக பதாகைகள், சுவர், துண்டறிக்கை உள்ளிட்டவைகள் மூலம் விளம்பரம் செய்யப்படுகின்றன.

இதையடுத்து மக்களும் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருந்து விண்ணப்பம் வாங்கிச் செல்கின்றனர். இவ்வாறு விண்ணப்பம் விநியோகிப்பது சட்டத்துக்குப் புறம்பான செயல் என மெட்ரிக் பள்ளிகளின் இயக்குநரும் தெரிவித்துள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னணி பள்ளிகள் என்ற சில பள்ளிகளில் ஜனவரி 17-ம் தேதியிலிருந்து விண்ணப்பம் விநியோகம் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டதோடு விநியோகமும் தொடங்கியுள்ளது. இத்தகைய நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

காற்றில் பறக்கும் அரசு உத்தரவு…

இது குறித்து கல்வி வளர்ச்சி நிறுவன ஒருங்கிணைப்பாளர் புதுக்கோட்டை கே.செந்தில் கூறியது: “பள்ளியின் அடிப்படை வசதிகள், குழந்தையைப் பள்ளியில் சேர்க்க விநியோகிக்கப்படும் விண்ணப்பம் ஆகியவற்றில் தொடங்கி படிப்பு முடியும் வரை என பல்வேறு உத்தரவுகளை அரசு வழங்கியுள்ளது. ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் அதை முறையாகக் கடைப்பிடிப்பதில்லை.

பெருநகரங்களில் மட்டுமே இருந்துவந்த 5 மாதங்களுக்கு முன்னதாகவே குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் கலாச்சாரம் கடந்த சில ஆண்டுகளாக அனைத்து பகுதிகளிலும் தொற்றியுள்ளது. தற்போது பெரும்பாலான பள்ளிகளில் விண்ணப்பம் விநியோகம் தொடங்கியுள்ளதால் இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்ய வேண்டும்” என்றார் அவர்.

நடவடிக்கை உறுதி...

இது குறித்து புதுக்கோட்டை மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் ஏ.சுசிலா கூறியது: “புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு மெட்ரிக் பள்ளியைத் தவிர அனைத்து மெட்ரிக் பள்ளிகளும் எல்கேஜி முதல் அரசாணை எண் 60-ன்படி 25 சதவீதம் ஏழைக் குழந்தைகளுக்கு இலவச கல்வி அளிக்கத் தகுதியுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் மே மாதத்தில் இருந்துதான் விண்ணப்பம் வழங்க வேண்டும். அதன்பிறகு மாணவர்கள் சேர்க்கையின் போது அதன் விவரத்தை பள்ளித் தகவல் பலகையில் தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டத்துக்குப் புறம்பாக நடந்துகொண்டால் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும்” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக