வெள்ளி, 31 ஜனவரி, 2014

சமூகத்தில் நேர்மறையான மாற்றம் ஏற்பட கல்வியில் முழு சீரமைப்பு அவசியம்-அண்ணா ஹசாரே

சமூகத்தில் நேர்மறையான மாற்றம் ஏற்பட கல்வியில் முழு சீரமைப்பு அவசியம் என காந்தியவாதி அண்ணா ஹசாரே வலியுறுத்தினார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் சென்னையில் வியாழக்கிழமை (ஜன.30) நடத்தப்பட்ட "திங்க்எஜு கான்கிளேவ்' என்றஇரண்டு நாள் கல்வி மாநாட்டில் பங்கேற்ற அண்ணா ஹசாரே பேசியதாவது: சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்ட போதும்கூட, நம்முடைய கல்வி முறை சமூகத்தில் போதிய மாற்றத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டது.கல்வியின் முக்கியக் குறிக்கோள் ஏழைக்கும் பணக்காரனுக்கும் உள்ளஇடைவெளியைக் குறைப்பதுதான். ஆனால், இந்த இடைவெளி அதிகரித்துக்
கொண்டுதான் போகிறது. இதற்கு கல்வி முறை சரியில்லாததே காரணம்.

நூறு சதவீத தேர்ச்சி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, பாடத்திட்டத்தை மாணவரிடம் திணிக்கும் பணியைத்தான்நமது கல்வி முறை செய்து வருகிறது. நாள் முழுவதும் அந்த மாணவர் என்னசெய்ய வேண்டும்; பள்ளி முடிந்து வீடு திரும்பிய பிறகு விளையாடவேண்டுமா அல்லது தூங்க வேண்டுமா என்பதில் கவனம் செலுத்த நாம்தவறிவிட்டோம். பாடத்திட்டத்தை மட்டுமல்லாமல் நல்ல பழக்க வழக்கங்களையும், தூய்மையாகசிந்திக்கவும் மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும். சுதந்திரம்பெற்று இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், நாமும் நம்முடைய நாடும்எந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறது? எதை நோக்கிச்சென்று கொண்டிருக்கிறது என்பதை நம்மில்ஒருவராவது சிந்தித்திருக்கிறோமா? பக்கத்து வீட்டில் இருப்பவர்களைப் பற்றியோ, குடியிருக்கும் கிராமத்தைப்பற்றியோ அல்லது நாட்டைப் பற்றியோ நாம் சிந்தித்திருக்கிறோமா? இந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் கல்வியின் அடிப்படை.

எனவே,இப்போதைய கல்வி முறையில் முழுமையான சீர்திருத்தத்தை ஏற்படுத்தவேண்டும். அப்போதுதான் சமூக மாற்றம் ஏற்படும். நாட்டுக்காக தியாகம் செய்தவர்களையும், அந்த தியாக கலாசாரத்தையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும் என்பதோடு, நாட்டின் முன்னேற்றுத்துக்காக நாம் அனைவரும் பாடுபட வேண்டும். தூய்மையான நபர்கள் நாடாளுமன்றத்துக்குச் செல்லும்போதுதான், அரசியலிலும் நாட்டிலும் உண்மையானமாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றார்.

மாநாடு தொடக்க விழாவில் சமூக சேவகியும் ஓய்வுபெற்ற முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியுமான கிரண் பேடி, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத் தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை ஆசிரியர் குழு இயக்குநர்பிரபு சாவ்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் ஊட்டி தோடர்சமூகத்திலிருந்து மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள முதல் நபரான மாணவி பாரதி கெளரவிக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக