வெள்ளி, 31 ஜனவரி, 2014

மக்கள் நலத்திட்டங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொலைநோக்கு பார்வையுடன் நிறைவேற்றி வருகிறார் ...

மக்கள் நலத்திட்டங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொலைநோக்கு பார்வையுடன் நிறைவேற்றி வருகிறார் என்று கவர்னர் ரோசய்யா தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் கவர்னர் ரோசய்யா நேற்று உரையாற்றிய போது கூறியதாவது:– ஜெயலலிதாவால் சாத்தியம் இந்த அரசு முக்கிய மாற்றங்களையும், சிறந்த சாதனைகளையும் கண்டுள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற கனவு நனவாகியுள்ளது. சரிநிகர் வளர்ச்சிக்கு முதன்மை இடம் அளித்து, சாதாரண மக்களும் தமிழகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சியால் அதிக அளவில் பயன்பெறும் வகையில், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி திட்டங்களுக்கான வழிவகைகளை தொலைநோக்குப்பார்வை கொண்ட முதல்–அமைச்சர் ஜெயலலிதா செயலாக்கியதன் காரணமாகவே இது சாத்தியமானது.
குறிப்பிட்ட துறைகளையும், பின்தங்கிய பகுதிகளையும் இலக்காகக் கொண்டு, சிறப்பான வளர்ச்சி திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. வறுமை, வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்சினைகளுக்கு தீர்க்கமான முறையில் தீர்வு காணப்பட்டு வருகின்றது. நீண்டகால பொருளாதார வளர்ச்சியை தூண்டும் பல்வேறு கட்டமைப்பு திட்டங்கள் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இவை அனைத்திற்கும் மேலாக, வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் நிலைநிறுத்தும் அடித்தளமாக விளங்கக்கூடிய சட்டம், ஒழுங்கு எந்தவித குறைபாடுமின்றி பராமரிக்கப்பட்டு, நிர்வாகத்தின் மீதான நம்பிக்கை நிலைநிறுத்தப்பட்டுள்ளது. மக்களின் நம்பிக்கை இத்தகைய வளர்ச்சிப்பணிகளுக்கு பொதுமக்கள் முழுமனதுடன் ஆதரவளித்துள்ளனர்.
நடந்து முடிந்த ஏற்காடு சட்டமன்ற இடைத்தேர்தலில் பெற்ற சிறப்பான வெற்றி, முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் திறனும், ஆற்றலும் மிக்க தலைமையின் மீதான மக்களின் நம்பிக்கைக்கு மேலும் ஒரு சான்றாகும். இத்தகைய நம்பிக்கை, எதிர்காலத்திலும் தொடர்ந்திட இந்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். அதே நேரத்தில், இந்த அரசு பல சவால்களை எதிர்கொள்ள நேரிட்ட போதிலும், அவற்றை உறுதியான நடவடிக்கைகளின் மூலமாக திறம்பட கையாண்டுள்ளது. தமிழ்நாடு, குறைவான நீர்வளம் உடைய மாநிலமாக உள்ளதுடன், பருவகால மாற்றங்களின் சீற்றத்திற்கு ஆளாகும் மாநிலமாகவும் உள்ளது. 2012–13–ம் ஆண்டில், கடுமையான வறட்சியை சந்திக்க நேரிட்டதால், விவசாய உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டு, அதனால் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்பட்டது. திறன்மிக்க தலைமை உரிய நேரத்தில் ஆயிரத்து 614 கோடி ரூபாய்க்கான இழப்பீட்டு நிவாரணத்தை வழங்கி, முதல்–அமைச்சர் ஜெயலலிதா கருணை உள்ளத்தோடு எடுத்த, நடவடிக்கையினால், பயிர் இழப்பினால் ஏற்பட்ட பெரும் பாதிப்பை சமாளிக்க முடிந்தது. இது தவிர, சர்வதேசப்பொருளாதார சரிவினால் இந்திய அளவில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு, மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளினால் மேலும் அதிகமாகி, தமிழகத்தின் வளர்ச்சியையும் பெரிதும் பாதித்துள்ளது. இந்த பொருளாதார சரிவை சீர்செய்ய இந்த அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. இது போன்ற சோதனைகள் இருந்தபோதிலும், முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் அயராத, திறன்மிக்க தலைமையின் கீழ் அவற்றை சமாளித்து, நமது மாநிலம் இப்பிரச்சினைகளில் இருந்து வெற்றிகரமாக மீண்டெழும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

காவிரி நதிநீர் விவகாரம்
முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து முயன்று வரும் சூழ்நிலையிலும், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை முழுமையாக செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவினையும் மத்திய அரசு இன்னும் அமைக்கவில்லை. இந்த சூழ்நிலையில், அற்காவதி நதியை புனரமைப்பதற்கும், ஹேமாவதி நதிநீர் கால்வாய்களை நவீனப்படுத்தவும் கர்நாடக அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகள், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணைக்கு முரணானது. இந்த அரசு, இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டை அணுகியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம், நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட தத்தளித்த தமிழக பக்தர்களை மீட்டது பாராட்டுக்குரியது. ஈரான் நாட்டு சிறைகளில் எட்டு மாதங்களுக்கும் மேலாக அல்லலுற்ற, நாகப்பட்டினம், ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த 16 மீனவர்களை இந்த அரசு மீட்டது. ஒடிசாவில் புயலில் சிக்கிய கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 18 மீனவர்களும் மீட்கப்பட்டனர். சமீபத்தில் அந்தமான் தீவுகளில் நடந்த படகு விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களை மீட்க இந்த அரசு எடுத்த உடனடி நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை.

புதிய வருவாய் வட்டங்கள்
சாலைகள், பாலங்கள், குடிநீர் வழங்கல், அடிப்படை கட்டமைப்பு மற்றும் பொதுச்சேவைகளை அளிப்பதற்காக, மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட 312 கருத்துருக்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. 2012–13–ம் ஆண்டு உருவாக்கப்பட்ட வருவாய் வட்டங்களோடு, கூடுதலாக மேலும் 25 புதிய வருவாய் வட்டங்களை 2013–14–ம் ஆண்டில் இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது. கிராமங்களில் உள்ள ஏழை மக்களுக்கு உறுதியளிக்கப்பட்ட அதிகபட்ச சேவைகளை வழங்குவதை குறிக்கோளாக கொண்ட புதுமையான 'அம்மா' திட்டத்தை இந்த அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. முதல் கட்டத்தில், பல்வேறு சான்றிதழ்கள், சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்கள், பட்டா மாறுதல் மற்றும் பிற கோரிக்கைகளுக்காக 33.13 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

100–வது ஆண்டு சினிமா விழா
தமிழ்மொழியின் சிறப்பினை உலகெங்கும் பரப்பிட, மதுரை உலகத்தமிழ் சங்கத்திற்கென தனியாக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. தரமணியிலுள்ள உலக தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு நிர்வாக கட்டிடம் அமைக்கும் பணிக்கு 4.17 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது. மதுரை மாநகரில் சங்கத்தமிழ் காட்சிக்கூடம் அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்திய சினிமாவின் 100–வது ஆண்டு நிறைவு விழாவை நடத்தியதில், இந்த அரசு முக்கிய பங்காற்றியது. நமது மாநிலத்தின் வரலாற்றிலேயே முதன் முறையாக, இசை மற்றும் கவின்கலை துறைகளுக்காக தனிப்பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சென்னை அரசு அருங்காட்சியகத்தில் தேசியக்கலை கட்டிடத்தை 11 கோடி ரூபாய் செலவில் புதுப்பித்தல், இரண்டு கோடி ரூபாய் செலவில் அரியலூரில் கல் புதையுயிரிப்படிவ அருங்காட்சியகம் அமைத்தல் போன்றவற்றின் மூலம், நமது பழம் பெருமையை போற்றிப் பாதுகாக்கப்படுகிறது.

உலக சதுரங்க போட்டி
2013–ம் ஆண்டுக்கான புகழ்பெற்ற பிடே உலக சதுரங்க வாகையர் போட்டியை முதன்முறையாக இந்தியாவில் நடத்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட சீரிய முயற்சிகளை நான் பாராட்டுகிறேன். தமிழக அரசு வழங்கிய 29.15 கோடி ரூபாய் நிதியுதவியோடு, சென்னையில் இந்த சிறப்பான நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

2011–12–ம் ஆண்டில் அதிக உணவு தானிய உற்பத்தியை எட்டியதற்காக, மத்திய அரசின் கிருஷி கர்மான் விருது நமது மாநிலத்திற்கு 2013–ம் ஆண்டு கிடைத்துள்ளது மன நிறைவளிக்கிறது. மாநிலத்தில், வடகிழக்கு பருவமழை அளவு 33 சதவீதம் குறைவாகப் பெய்துள்ள சூழ்நிலையிலும், 2013–14–ம் ஆண்டில் மாநிலத்தின் உணவு தானிய உற்பத்தி 100 லட்சம் மெட்ரிக் டன் அளவை விஞ்சும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நெல் ஆதார விலை
விவசாயிகளின் விளைபொருளுக்கு நியாயமான விலை கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 2013–14–ம் ஆண்டு கரீப் பருவத்தில், சாதாரண மற்றும் சன்ன ரக நெல்லுக்கு, மத்திய அரசு அறிவித்த குவிண்டால் ஒன்றுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையான முறையே ஆயிரத்து 310 ரூபாய் மற்றும் ஆயிரத்து 345 ரூபாய் ஆகியவற்றை விட அதிகமாக, அதாவது சாதாரண ரகத்திற்கு ஆயிரத்து 360 ரூபாய் எனவும், சன்ன ரகத்திற்கு ஆயிரத்து 415 ரூபாய் எனவும், இந்த அரசு உயர்த்தி வழங்கி வருகிறது. இதுபோன்றே, கரும்புக்கு டன் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 100 ரூபாய் என்ற அளவில் மட்டுமே மத்திய அரசு நியாயமான மற்றும் ஆதாயமுள்ள விலையை நிர்ணயித்துள்ள போதிலும், டன் ஒன்றிற்கு 100 ரூபாய் போக்குவரத்து செலவு உள்ளிட்ட மாநில அரசின் பரிந்துரை விலையை நடப்பு நிதியாண்டிற்கு டன் ஒன்றிற்கு 2 ஆயிரத்து 650 ரூபாய் என இந்த அரசு உயர்த்தி வழங்கியுள்ளது.
ஏழைகளுக்கு கறவை மாடுகளை வழங்கும் திட்டம் மூலமாக, கடந்த இரண்டரை ஆண்டுகளில் சுமார் 32 ஆயிரம் ஏழை, எளியோர் பொருளாதார மதிப்புமிக்க சொத்துக்களை பெற்றுள்ளனர். இதுபோன்றே, கிராமப்புற ஏழை,எளியோருக்கு விலையில்லா செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகள் வழங்கும் திட்டம் மூலமாக, 3.72 லட்சம் நிலமற்ற ஏழைப்பெண்கள் பலன் பெற்றுள்ளனர்.

பொது வினியோக திட்டம்
பொது வினியோகம் மூலம் விலையில்லா அரிசி, மானிய விலையில் பருப்புகள், சமையல் எண்ணெய், கோதுமை, சர்க்கரை மற்றும் மண்எண்ணெய் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் 1.86 கோடிக்கும் மேலான குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றன. 2013–14–ம் ஆண்டில் உணவு மானியமாக 4 ஆயிரத்து 900 கோடி ரூபாயை இந்த அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம், உணவு பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கத்தை முழுமையாக எட்டாது. முதல்–அமைச்சர் ஜெயலலிதா எடுத்த தொடர் முயற்சி காரணமாக, தற்போதுள்ள பொதுவினியோக திட்ட உணவு தானிய ஒதுக்கீடு மற்றும் எடுப்பு அளவுகளை உறுதி செய்யும் வகையில், சட்ட வரைவை மத்திய அரசு திருத்தி அமைத்துள்ளது. இச்சட்டத்தில் இன்னும் பல குறைபாடுகள் உள்ளன.

பசுமை வீடுகள்
மக்களின் நலனுக்கான, சூரிய மின்சக்தி கொண்ட பசுமை வீடுகள் திட்டம் தனிச்சிறப்புடையதாகும். கடந்த மூன்று ஆண்டுகளில் 1.80 லட்சம் வீடுகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு வீட்டிற்கான ஒதுக்கீடும் 1.80 லட்சம் ரூபாயிலிருந்து 2.10 லட்சம் ரூபாயாக இந்த ஆண்டு உயர்த்தப்பட்டுள்ளது. வரும் இரண்டு ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ் மேலும் 1.2 லட்சம் ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும். ஒவ்வொரு குடியிருப்பு பகுதியிலும் கவனம் செலுத்தும் புதுமையான கிராமப்புற கட்டமைப்பு மேம்பாட்டு திட்டமாகிய 'தாய்' திட்டம், கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி பெரும் பயன் அளித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், குடிநீர் வழங்கல், சுகாதாரம் மற்றும் சாலை மேம்பாட்டிற்கு தொடர்ந்து உயர் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

நகர்ப்புற வளர்ச்சி
மாநிலத்தின் நகர்ப்புற பகுதிகளில் 48 சதவீத மக்கள் வாழ்கின்றனர். இப்பகுதிகளில் போதிய அடிப்படை வசதிகளை அளிப்பதற்காக ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீட்டுடன் கூடிய சென்னை மாநகர வளர்ச்சித்திட்டம் மற்றும் 750 கோடி ரூபாய் ஆண்டு ஒதுக்கீட்டுடன் கூடிய ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித்திட்டம் ஆகிய சிறப்பான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கவர்னர் ரோசய்யா உரை நிகழ்த்தினார்.


Sent from my iPad

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக