அனைத்து பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தேசிய அங்கீகார வாரியத்தின் (என்பிஏ) அங்கீகாரத்தைப் பெற வேண்டியது கட்டாயம் என அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) புதியஉத்தரவை இப்போது பிறப்பித்திருக்கிறது.
மேலும் என்பிஏ போன்ற அமைப்பின் அங்கீகாரம் பெறாத கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து நிதிகளும் ரத்து செய்யப்படும் எனவும் ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது. இதன் காரணமாக, பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) வழிகாட்டுதலுக்காக காத்திருப்பதா அல்லது ஏஐசிடிஇ-யின் உத்தரவைப்பின்பற்றுவதா என்ற குழப்பத்தில் ஆழ்ந்திருப்பதாக தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகிகளும், பல்கலைக்கழக நிர்வாகிகளும் தெரிவிக்கின்றனர்.
ஏஐசிடிஇ அதிகாரம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில், ஏஐசிடிஇ சட்டம் 1987 பிரிவு 2 (ஹெச்)-ன் படி, ஒரு பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்பு பெற்றுள்ளகல்லூரிகள் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் என்ற வரையறைக்குள் வராது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இணைப்புக் கல்லூரிகள் அந்தந்த பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) கட்டுப்பாட்டின் கீழ்தான் வரவேண்டும் எனவே, யுஜிசி-தான் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரிகளுக்கும் தகுந்த வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகளை வகுக்க வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை யுஜிசி தயாரித்து, கடந்த ஜனவரி 10-ஆம் தேதி அதற்கு ஒப்புதலையும் அளித்தது. பின்னர், அந்த புதிய வழிகாட்டுதல் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மத்திய அரசு இந்த வழிகாட்டுதலை அரசிதழில் வெளியிட்ட பிறகே, அதை நடைமுறைக்குக் கொண்டுவர முடியும். ஆனால், இன்னும் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரிகளுக்கான யுஜிசி-யின்வழிகாட்டுதல்கள் அரசிதழில் வெளியிடப்படாததால், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பொறியியல் கல்லூரிகளை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாத நிலை யுஜிசி-க்கு நீடித்து வருகிறது.
இதன் காரணமாக புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கும் நடைமுறைகளும், புதிய படிப்புகளைத் தொடங்க அனுமதி வழங்கும் நடைமுறைகளும் தடைப்பட்டுள்ளன. மேலும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை ஆய்வுக்கு உள்படுத்தி அங்கீகாரம் பெற யுஜிசி-யின்"நாக்' (தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சில்) அமைப்பிடம்விண்ணப்பிப்பதா அல்லது ஏஐசிடிஇ-.யின் "என்பிஏ' அமைப்பிடம் விண்ணப்பிப்பதா என்ற குழப்பமும் கல்லூரிகளிடையே நீடித்து வருகிறது.
ஏஐசிடிஇ புதிய அறிவுறுத்தல் இந்த நிலையில், ஏஐசிடிஇ புதிய உத்தரவு ஒன்றை கடந்த ஜனவரி 29-ஆம் தேதி பிறப்பித்திருக்கிறது. இது ஏஐசிடிஇ வழிகாட்டுதல் 2014- என்றபெயரில் வெளியிடப்பட்டுள்ளது. ஏஐசிடிஇ சட்டம் 1987 பிரிவு 23-இல் துணைப் பிரிவு (1)-இன் கீழ் உள்ள அதிகாரித்தின் கீழ் இந்த வழிகாட்டுதல் பிறப்பிக்கப்பட்டிருப்தாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதலில் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், எம்சிஏ, எம்பிஏ மற்றும் ஹோட்டல் மேலாண்மை கல்வி நிறுவனங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் ஆகிய அனைத்தும் "என்பிஏ' அல்லது ஏஐசிடிஇ மூலம் தகுதி வாய்ந்ததாகக் கண்டறியப்பட்ட அமைப்பின் மூலம் தங்கள் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை ஆய்வுக்கு உள்படுத்தி அங்கீகாரம் பெறவேண்டியது கட்டாயம். அவ்வாறு அங்கீகாரம் பெறத் தவறும் கல்வி நிறுவனங்களுக்கு ஏஐசிடியி-யின் எந்தவொரு நிதியுதவியும் வழங்கப்பட மாட்டாது. மேலும்,
ஏற்கெனவே அளிக்கப்பட்டு வரும் நிதியுதவியும் நிறுத்தப்படும் எனவும்ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது.
இந்த புதிய உத்தரவு காரணமாக பெரும்குழப்பத்துக்கு ஆளாகியிருப்பதாகவும், இது தொடர்பாக தெளிவான உத்தரவை விரைவாக மத்திய அரசு வெளியிட வேண்டும் என தனியார்பொறியியல் கல்லூரி நிர்வாகிகள் தெரிவித்தனர். இதுபோல், யுஜிசி-யிடமிருந்து எந்தவித உத்தரவும் இதுவரை வராததால்புதிய கல்லூரி தொடங்குவதற்கான விண்ணப்பங்கள் ஒன்றுகூட இன்னும் பெறப்படவில்லை என அண்ணா பல்கலைக்கழக நிர்வாகி ஒருவர் கூறினார்.
இது குறித்து யுஜிசி உயர் அதிகாரி ஒறுவர் கூறியது: உச்ச நீதிமன்ற உத்தரவின்படி யுஜிசி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த உத்தரவின்படி, பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அனைத்தும் யுஜிசி-யின் கீழ்தான் வருகின்றன. எனவே, இந்த கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ புதிய வழிகாட்டுதலை வெளியிட்டிருப்பது உச்ச நீதிமன்றஉத்தரவுக்கு எதிரானதாகத்தான் கருத முடியும். யுஜிசி வழிகாட்டுதல், அரசிதழில் வெளியிட்டவுடன், பொறியியல்கல்லூரிகளுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் யுஜிசி தொடங்கிவிடும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக