வியாழன், 4 செப்டம்பர், 2014

உன்னதப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர் பெருந்தகைகளுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்து!-தமிழிசை சவுந்தரராஜன்

ஆசிரியர்களைப் பெருமைப்படுத்துவதே குருவைக் கொண்டாடுவோம் எனப் பொருள் தரும் 'குரு உத்சவ்' என்பதன் நோக்கம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

ஆசிரியர் தினத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "மாதா, பிதா, குரு, தெய்வம் என்று குருவைக் கொண்டாடி மகிழ்கிறோம் தமிழ்நாட்டில். அதற்கேற்ப சிறந்த ஆசிரியராகவும், ஆட்சியாளராகவும் இருந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம்.

நல்ல குடிமக்களை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கும் ஆசிரியர்களின் தியாகத்தைப் போற்றுவோம். இதைத்தான் மத்திய அரசு 'குரு உத்சவ்', அதாவது 'குருவைக் கொண்டாடுவோம்' என்கிறது. ஆனால், அதையும் அரசியலாக்கி, எது அவசியம் எது அரசியல் என்றில்லாமல் இங்கே சிலர் விமர்சித்துக் கொண்டிருந்தாலும், நோக்கம் ஆசிரியப் பெருமக்களை பெருமைப்படுத்துவதே ஆகும்.

ஆசிரியப் பணி, இறைப்பணிக்கு நிகரானது. அத்தகைய உன்னதப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர் பெருந்தகைகளுக்கும், அவர்களால் அறிவொளி பெறும் மாணவச் செல்வங்களுக்கும் உள்ளம் கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக