வியாழன், 4 செப்டம்பர், 2014

ஆசிரியர் நியமனத்துக்கு தடை: அரசின் மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு

தமிழகத்தில் ஆசிரியர் நியமனத்தில் பின்பற்றப்படும் வெயிட்டேஜ் முறைக்கு எதிரான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், இது தொடர்பாக 2 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டது.

தனி நீதிபதி சசிதரன் பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் சோமையாஜி இன்று மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த மனுவை பரிசீலித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு, இதனை அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டது. ஆசிரியர் பணி நியமனம் தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த தடை உத்தரவின் நகல் கிடைக்கவில்லை என்று கூறிய நீதிபதிகள், அரசு தனது மேல்முறையீட்டு மனுவை நாளை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

தனி நீதிபதி அவர்களின் தீர்ப்பு நகல் கிடைத்தவுடன் நாளை விசாரணைக்கு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக