பிளஸ் டூ மாணவர்கள் ஐ.ஐ.டி., அண்ணா பல்கலைக்கழகங்களுக்கு அடுத்தபடியாகப் பெரிதும் விரும்பும் முன்னணி தனியார் கல்வி நிறுவனங்களில் ராஜஸ்தான் பிட்ஸ் பிலானி தொழில்நுட்பக் கல்லூரியும் ஒன்று. பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி என்ற கல்லூரிதான் சுருக்கமாகப் பிட்ஸ் பிலானி எனப்படுகிறது. ஐ.ஐ.டி பட்டதாரிகளுக்கு எப்படிப் பன்னாட்டு நிறுவனங்களில் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் அதிகச் சம்பளத்தில் வேலை கிடைக்கிறதோ, அதேபோன்று பிட்ஸ் பிலானி பட்டதாரிகளுக்கும் கைநிறையச் சம்பளத்தில் வேலைவாய்ப்பு நிச்சயம்.
குறைந்த கல்வி கட்டணம், வேலைவாய்ப்பு உத்தரவாதம், நல்ல கல்விச்சூழல் ஆகிய காரணங்களால் மாணவ-மாணவிகள் அதிகம் விரும்பும் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியாகப் பிட்ஸ் பிலானி திகழ்கிறது.
இங்குச் சிவில், கெமிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், இன்ஸ்ட்ருமென்டேஷன், மெக்கானிக்கல், மேனுபேக்சரிங், பயோ-டெக்னாலஜி ஆகிய பாடப்பிரிவுகளில் பி.இ. (ஆனர்ஸ்) பட்டம் வழங்கப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலம் பிலானி, கோவா, ஹைதராபாத் ஆகிய இடங்களில் பிட்ஸ் பிலானி கல்வி வளாகங்கள் இயங்கி வருகின்றன. மேற்கண்ட படிப்புகளுக்குப் பிட்ஸ் பிலானி நடத்தும் பிரத்யேக நுழைவுத்தேர்வு (பிட்சாட்) அடிப்படையில் மட்டுமே மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இது 3 மணி நேரம் கொண்ட ஆன்லைன் தேர்வு. சென்னை உள்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு நடத்தப்படுகிறது.
"பிட்சாட்" நுழைவுத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் பிளஸ் டூவில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்ணும் மூன்று பாடங்களையும் சேர்த்துச் சராசரியாக 75 சதவீத மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும்.
கடந்த ஆண்டு பிளஸ் டூ முடித்தவர்களும் தற்போது பிளஸ் டூ படித்துக் கொண்டிருப்போரும் மட்டுமே நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். பிளஸ் டூ தேர்வில் மாநில அளவில் முதலிடத்தைப் பிடிக்கும் மாணவர்கள் நேரடியாகச் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். நுழைவுத்தேர்வு மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. அட்மிஷனுக்கும் பின்னர்த் தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
2014-2015ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான "பிட்சாட்" நுழைவுத்தேர்வுக்கான அறிவிப்பைப் பிட்ஸ் பிலானி வெளியிட்டுள்ளது. மே 14ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நுழைவுத்தேர்வு நடத்தப்படும். இதற்கு www.bitsadmission.com என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுமுறை, பாடத்திட்டம் ஆகிய விவரங்களையும் இந்த இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். விண்ணப்பிக்கக் கடைசி நாள் பிப்ரவரி 15. நுழைவுத்தேர்வு முடிவடைந்த பிறகு, அட்மிஷனுக்காக இதே இணையதளத்தில் பிளஸ் டூ மதிப்பெண் விவரங்களுடன் மே 20ஆம் தேதிக்குள் தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக