புதன், 3 செப்டம்பர், 2014

வெயிட்டேஜ் மதிப்பெண்ணை அடிப்படையாக கொண்டு ஆசிரியர்களை பணி நியமனம் செய்வதை தமிழக அரசு முழுமையாக ரத்து செய்யவேண்டும் -தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவனர் ராமதாஸ்


வெயிட்டேஜ் மதிப்பெண்ணை அடிப்படையாக கொண்டு ஆசிரியர்களை பணி நியமனம் செய்வதை தமிழக அரசு முழுமையாக ரத்து செய்யவேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

விஜயகாந்த் வலியுறுத்தல்

இந்த விவகாரம் தொடர்பாக விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், பேரணி என தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். பேரணியில் கலந்துகொண்டவர்களில் ஒரு சிலர் தற்கொலை செய்துகொள்ளவும் முயற்சி செய்துள்ளனர். ஆனால் தமிழக அரசோ இதை கண்டும், காணாமல் இருந்து கொண்டுள்ளது.

இந்த பிரச்சினைக்கும், தனக்கும் துளிகூட சம்பந்தம் இல்லாதது போலவும், அருகில் உள்ள மாநிலத்தில் இப்பிரச்சனை நடப்பதுபோலவும் தமிழகஅரசு நடந்து கொள்கிறது.

தற்போது போராட்டம் நடத்திவரும் அனைவருமே சுமார் 30-லிருந்து 40-வயது வரை உள்ளவர்கள். இவர்கள் கடந்த பதினைந்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பாலும் அரசு பள்ளியில் படித்து சுமார் 600 முதல் 750 மதிப்பெண்கள் வரை பெற்று, ஆசிரியர் பயிற்சி பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பயிற்சி பெற்று அதற்கான தகுதி சான்றிதழையும் பெற்றுள்ளனர்.

ஆனால் தமிழக அரசு வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யும் முறையை கொண்டுவந்துள்ளதால், இவர்களில் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக கிராமப்புறங்களில் வசிப்பவர்கள், மிகவும் பிற்படுத்தபட்டோர்கள், ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர்கள் ஆகிய குடும்பங்களில் உள்ளவர்களால் கண்டிப்பாக இந்த வெயிட்டேஜ் மதிப்பெண்ணை பெறமுடியாது. தற்போதுள்ள முறைப்படி இவர்களுக்கு வாய்ப்பும் கிடைக்காது. பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள், நகர்புறத்தை சார்ந்தவர்கள், தனியார் பள்ளிகளில் படித்தவர்கள் ஆகியோருக்கு மட்டுமே இந்த வெயிட்டேஜ் மதிப்பெண் முறை அதிகம் பயன் அளிக்கும்.

எனவே தமிழக அரசு இப்பிரச்சனையில் உரிய கவனம் செலுத்தி ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் செய்யவேண்டும். வெயிட்டேஜ் மதிப்பெண்ணை அடிப்படையாக கொண்டு பணி நியமனம் செய்வதை முழுமையாக ரத்து செய்யவேண்டும். பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கும் வரை ஆசிரியர் தகுதி தேர்வு நடத்துவதை நிறுத்திவைக்க வேண்டும். சட்டபேரவையில் அறிவிக்கப்பட்ட ஆசிரியர் காலி பணியிடங்களை தற்போது தேர்ச்சி பெற்றுள்ள ஆசிரியர்களை கொண்டே நிரப்பவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இந்தியா முழுவதும் ஆசிரியர்களை போற்றும் விதமாக நாளை மறுதினம் (05.09.2014) ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். எனவே ஆசிரியர்கள் உண்மையான மகிழ்ச்சியுடன் ஆசிரியர் தினத்தை கொண்டாடும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களை தமிழக அரசு அழைத்து பேசி இப்பிரச்சனைக்கு சுமூக தீர்வுகாண வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என அவர் கூறியுள்ளார்.

தகுதி மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்க: ராமதாஸ்

வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்து தகுதி மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டும் பட்டதாரி ஆசிரியர்களை நியமித்து அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிமுகம் செய்திருக்கிறது. இதனால் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றும் ஆசிரியர் வேலை பெற முடியாமல் பல்லாயிரக்கணக்கான பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெயிட்டேஜ் மதிப்பெண் முறைப்படி தகுதித்தேர்வு மதிப்பெண்களில் 60% மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். மீதமுள்ள 40% வெயிட்டேஜ் மதிப்பெண்கள் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு, பட்டப்படிப்பு, பி.எட். தேர்வு ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. பள்ளி மற்றும் கல்லூரித் தேர்வுகளில் பத்தாண்டுகளுக்கு முன் வழங்கப்பட்டதைவிட இப்போது அதிக மதிப்பெண் வழங்கப்படுவதால் புதிதாக ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் அதிக வெயிட்டேஜ் மதிப்பெண்களைப் பெற்று எளிதாக ஆசிரியர் பணிக்கு தேர்வாகிவிடுகிறார்கள்.

அதேநேரத்தில் பத்தாண்டுகளுக்கு முன் படித்தவர்கள் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றாலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அவர்கள் பெற்ற மதிப்பெண் குறைவு என்பதால் அவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை.

உதாரணமாக அண்மையில் நடந்த தகுதித்தேர்வில் 150-க்கு 110 மதிப்பெண் பெற்ற பழைய மாணவருக்கு வேலை கிடைக்கவில்லை. அதேநேரத்தில் 150-க்கு 85 மதிப்பெண் பெற்ற புதிய மாணவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் உதவியுடன் வேலை கிடைத்திருக்கிறது.

தமிழக அரசின் இந்த புதிய அணுகுமுறை அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற இயற்கை விதிக்கு முற்றிலும் எதிராக அமைந்துள்ளது. இது மிகப்பெரிய சமூக அநீதி ஆகும்.

வேலைவாய்ப்பில் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டித்து பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த சிலர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலைக்கு சென்று உயிர் பிழைத்துள்ளனர். இதற்குப் பிறகும் அரசு மனமிறங்கி இவர்களுடன் பேச்சு நடத்த முன்வராதது ஜனநாயக செயல்பாடாக தோன்றவில்லை.

ஆசிரியர்கள் அறிவை வழங்குபவர்கள். அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் தேவையற்ற பிடிவாதம் காட்டுவதை விடுத்து சம்பந்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி, வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்யவும், தகுதி மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டும் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

கருணாநிதி கண்டனம்

முன்னதாக, ஆசிரியர் தகுதி தேர்வுக்கான மதிப்பெண் முறையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் பிரச்சினையில் தமிழக அரசு அலட்சியம் காடட்டுவதாக திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்தார்.

மேலும், ஆசிரியர் நியமன விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் அவர் வலியுறுத்தினார்.

ஆசிரியர் தகுதித் தேர்வு பிரச்சினையில் தலைவர்களின் வலியுறுத்தல் சரியா?
ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்து, தகுதி மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டும் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற அரசியல் தலைவர்களின் வலியுறுத்தலுக்கு தமிழக அரசு...
செவிசாய்க்க வேண்டும்:73%
கண்டுகொள்ளத் தேவையில்லை:21%
நோட்டா:5%
மொத்த வாக்குகள்: 559.         Time  11.30 pm. 03/09/14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக