திங்கள், 4 மே, 2015

தமிழ் இலக்கணம் அறிவோம்! -1

மொழியின் அடிப்படைப் பாடம், எழுத்துகள். தமிழில் எத்தனை எழுத்துகள் என்று ஞாபகமிருக்கிறதா?

தமிழ்நாட்டு எம்.எல்.ஏக்களைவிடச் சற்றே அதிகம், 247 எழுத்துகள். அவை இப்படி நான்கு வகைகளாகப் பிரியும் என்று பள்ளிக்கூடத்தில் படித்திருப்போம்:

உயிர் எழுத்துகள் : 12
மெய் எழுத்துகள் : 18
உயிர்மெய் எழுத்துகள் : 216
ஆய்த எழுத்து : 1

மொத்தம்: 247

இந்த மேலோட்டமான பாகுபாடு, ஓரளவுக்குதான் பயன் தரும். இலக்கணத்தை ஊன்றிக் கற்க விரும்புகிறவர்கள், இந்த எழுத்துகளுடன் இன்னும் நன்கு அறிமுகமாகவேண்டும், இவற்றை இன்னும் பலவிதமாகப் பகுத்துத் தெரிந்துகொள்ளவேண்டும், அதற்கு ஏற்பப் பயன்படுத்தப் பழகவேண்டும்.

தொல்காப்பியமும் சரி, நன்னூலும் சரி, தமிழ் எழுத்துகளை இரண்டு பெரும் வகைகளாகப் பிரிக்கின்றன: முதலெழுத்துகள் மற்றும் சார்பெழுத்துகள்!

பெயரைக் கேட்டதும், இவற்றின் விளக்கம் புரிந்துவிடும், 'முதல் எழுத்துகள்' என்றால், மொழிக்கு அடிப்படையாக அமைகிற Basic Alphabets. இவற்றை வைத்துதான் மீதமிருக்கிற அனைத்து எழுத்துகளும் தோன்றும், அவற்றைச் 'சார்பு எழுத்துகள்' என்கிறோம்.

கொஞ்சம் வேறு துறை உதாரணம் வேண்டுமென்றால், சிவப்பு, பச்சை, நீலம் என்கிற மூன்று அடிப்படை வண்ணங்களைப் பலவிதமாகக் கலந்து நூற்றுக்கணக்கான மற்ற வண்ணங்களைத் தருவித்துக்கொள்கிறோம் அல்லவா? அதுபோல, தமிழில் இருக்கும் முதல் எழுத்துகளைக் கலந்து சார்பு எழுத்துகள் தோன்றுகின்றன.

அந்த முதல் எழுத்துகள், மொத்தம் முப்பது. அப்படியானால், சார்பு எழுத்துகள், 217.

முப்பது முதல் எழுத்துகளும் உங்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவைதான். அ, ஆ, இ, ஈ என்று தொடங்கி, ஔ வரை செல்லும் பன்னிரண்டு உயிர் எழுத்துகள். க், ங், ச், ஞ் என்று தொடங்கி ன் வரை செல்லும் பதினெட்டு மெய் எழுத்துகள். இந்த முப்பதும்தான் தமிழ் மொழிக்கே அடிப்படையான எழுத்துகள். உயிர்மெய் எழுத்துகள் எனப்படும் 216 எழுத்துகளும் இவற்றிலிருந்து பிறப்பவை.

சார்பு எழுத்துகள் 217 என்று பார்த்தோமே, இங்கே 216தானே வருகிறது?

மீதமிருப்பது ஆய்த எழுத்து, அதாவது 'ஃ'. மிக விசேஷமான இந்தச் சார்பு எழுத்தைப்பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பேசுவோம்.

இப்போதைக்கு, மீண்டும் முதல் எழுத்துகளின்மீது கவனத்தைத் திருப்புவோம். அந்த முப்பது எழுத்துகளுக்குள் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய இலக்கண நுட்பங்கள் ஏராளமாக உள்ளன.

தமிழின் எழுத்து நுட்பத்தை விரிவாகப் பார்ப்பதற்குமுன்னால், நாம் 'மாத்திரை'களைப்பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும்.

முன்பெல்லாம் தமிழ் வகுப்பில் 'மாத்திரை' என்று போர்டில் எழுதி அடிக்கோடு போட்டதும், தமிழ் ஆசிரியர்கள் ஒரு மிகப் பழைய்ய்ய ஜோக்(?) அடிப்பார்கள், 'மாத்திரைன்னா தலைவலி மாத்திரை இல்லை, இது வேற!'

அப்போ, மாத்திரைன்னா என்ன?

அது ஓர் நேர அளவு. விநாடி, நிமிடம், மணிபோல.

இப்படிக் குத்துமதிப்பாகச் சொன்னால் எப்படி? ஒரு நிமிடம் என்பது 60 விநாடி, ஒரு மணி என்பது 60 நிமிடம், அதுமாதிரி மாத்திரையையும் துல்லியமாக விளக்கமுடியுமா?

தொல்காப்பியத்தில் ஒரு மிக அழகான நூற்பா இதை விளக்குகிறது:

கண் இமை, நொடி என அவ்வே மாத்திரை

அதாவது, நாம் ஒருமுறை கண் இமைப்பதற்கு எவ்வளவு நேரமாகுமோ, ஒருமுறை கை விரல்களால் சொடக்குப் போடுவதற்கு எவ்வளவு நேரமாகுமோ, அதுதான் ஒரு மாத்திரைப் பொழுது.

சினிமாவில் வருவதுபோல் ஸ்லோ மோஷனில் கண் இமைக்கக்கூடாது, அல்லது அதே சினிமாவில் காதலனைக் கண்ட காதலியின் கண்கள் படபடப்பதுபோல் அதிவேகமாகக் கண் இமைக்கக்கூடாது. இயல்பாக, பொதுவாக, சராசரியாக ஒரு மனிதர் கண் இமைப்பதற்கோ, கை விரல்களைச் சொடக்குவதற்கோ எவ்வளவு நேரம் ஆகும் என்று கவனியுங்கள், அதுதான் ஒரு மாத்திரை.

இன்னும் கொஞ்சம் நுட்பமாகப் போவோமா, அதாவது, ஒரு மாத்திரைக்குக் கீழே, கால் மாத்திரை, அரை மாத்திரை, முக்கால் மாத்திரை போன்றவற்றுக்குக்கூட கணக்கு உண்டு!

இந்த நூற்பாவைக் கவனியுங்கள்:

'உன்னல் காலே, ஊன்றல் அரையே,
முறுக்கல் முக்கால், விடுத்தல் ஒன்றே!'

அதாவது, கையில் சொடக்குப்போடவேண்டும் என்று நினைக்கும் நேரம், கால் மாத்திரை, அதற்காக இரண்டு விரல்களை ஒன்று சேர்க்கும் நேரம், அரை மாத்திரை, விரல்களை முடுக்கும் நேரம், முக்கால் மாத்திரை, அவற்றை விடுவித்து 'டப்' என சொடக்குச் சத்தம் எழும் நேரம், ஒரு மாத்திரை.

நினைத்தாலே ஆச்சர்யமாக உள்ளதல்லவா? இத்துணை நுட்பமாகச் சிந்தித்திருக்கிறார்கள் நம் பழந்தமிழர்கள்!

அது சரி, இலக்கணப் பாடத்தில் நேரக் கணக்கு எதற்கு?

தமிழ் எழுத்துகள் எல்லாவற்றையும் எப்படி உச்சரிக்கவேண்டும் என்பதற்கு மாத்திரைக் கணக்கு உண்டு. எழுத்துகளுக்கு மாத்திரை உண்டு என்பதால், சொற்களுக்கும் உண்டு, வாக்கியங்களுக்கும் உண்டு, எல்லாவற்றுக்கும் உண்டு.

உதாரணமாக, 'அ' என்ற எழுத்தை உச்சரிக்க ஒரு மாத்திரை நேரம் எடுத்துக்கொள்ளவேண்டும், ஆனால் 'ஆ' என்பதை உச்சரிக்க இரண்டு மாத்திரை நேரம் எடுத்துக்கொள்ளவேண்டும்.

சந்தேகமிருந்தால், ஒரு கையால் சொடக்குப் போட்டபடி 'அ' என்றோ 'ஆ' என்றோ உச்சரித்துப் பாருங்கள், கச்சிதமாக 1 மாத்திரை, 2 மாத்திரை நேரம்தான் எடுத்துக்கொள்வீர்கள்.

இப்படி உச்சரிக்கும் நேர அளவைப் பொறுத்து, உயிர் எழுத்துகளை இரண்டு பிரிவாகப் பிரிக்கிறார்கள்:

* குறில் அல்லது குற்றெழுத்து
* நெடில் அல்லது நெட்டெழுத்து

குறுகி ஒலிப்பது குறில், அதாவது இந்த எழுத்துகள் சட்டென்று ஒலித்து முடிந்துவிடும். நீண்டு ஒலிப்பது நெடில், அதாவது இவற்றை கொஞ்சம் நீட்டி முழக்கிச் சொல்லவேண்டியிருக்கும்.

பன்னிரண்டு உயிர் எழுத்துகளில் அ, இ, உ, எ, ஒ என்பவைமட்டும் குறில்கள், மீதமுள்ள ஏழும் நெடில்கள்.

இந்தக் குறில் எழுத்துகளை உச்சரிப்பதற்கு, ஒரு மாத்திரைப் பொழுது போதும், நெடில்களை உச்சரிப்பதற்கு இரண்டு மாத்திரை நேரம் தேவைப்படும்.

அப்படியானால், மெய் எழுத்துகள்?

மெய் எழுத்துகளில் குறில், நெடில் என்கிற பாகுபாடே கிடையாது. அவை எல்லாமே குறிலைவிடச் சிறியவை, அரை மாத்திரைப் பொழுதுக்குள் உச்சரிக்கப்பட்டுவிடும். ஆய்த எழுத்து(ஃ)ம் இதேமாதிரிதான்.

அப்படியானால், உயிர்மெய் எழுத்துகளுக்கு மாத்திரைக் கணக்கு உண்டா?

நிச்சயமாக உண்டு. அவற்றில் இருக்கும் உயிர் எழுத்து எது என்பதைப் பொறுத்து, உயிர்மெய் எழுத்துகளைக் குறில், நெடில் என்று பிரிக்கலாம்.

உதாரணமாக, 'கி' என்ற எழுத்தில் உள்ள உயிர் எழுத்து, 'இ', அது குறில், ஆகவே 'கி'யும் குறில்தான். அதற்கும் ஒரு மாத்திரைதான் அளவு.

அதேசமயம், 'கீ' என்ற எழுத்தில் உள்ள உயிர் எழுத்து 'ஈ', அது நெடில், ஆகவே 'கீ' நெடில், அதற்கு இரண்டு மாத்திரை அளவு.

இப்படியே இருக்கும் எல்லா உயிர்மெய் எழுத்துகளையும் குறில், நெடில் என வரையறுத்து, ஒன்று அல்லது இரண்டு மாத்திரைகளைக் கணக்கிடலாம்.

ஆக, தமிழில் மாத்திரைக் கணக்கு:

உயிர் எழுத்துகள் : குறில் என்றால் 1 மாத்திரை, நெடில் என்றால் 2 மாத்திரை
மெய் எழுத்துகள் : 1/2 மாத்திரை
உயிர்மெய் எழுத்துகள் : குறில் என்றால் 1 மாத்திரை, நெடில் என்றால் 2 மாத்திரை
ஆய்த எழுத்து : 1/2 மாத்திரை

சுருக்கமாகச் சொன்னால், தமிழ் எழுத்துகள் எல்லாமே இரண்டு சொடக்குப் போடும் நேரத்துக்குள் உச்சரிக்கப்பட்டுவிடும். 'மூன்று மாத்திரை எழுத்து' என்று எதுவுமே தமிழில் கிடையாது.

சில இடங்களில், குறிப்பாகப் பாடல்களில் இந்த மாத்திரைக் கட்டுப்பாடு மீறப்படுவதுண்டு. அதைப்பற்றி அப்புறம் வேறொரு சந்தர்ப்பத்தில் பேசுவோம்.

இப்போது, மறுபடி உயிர் எழுத்துகளுக்குத் திரும்புவோம். அந்தப் பன்னிரண்டு எழுத்துகளைப்பற்றி இன்னும் நிறைய விஷயங்கள் தெரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது.

பள்ளியில் உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள் வித்தியாசப்படுத்திக் காட்டுவதற்காக, ஓர் எளிய சூத்திரம் சொல்வார்கள், 'தலையில புள்ளி வெச்சது மெய் எழுத்து, புள்ளி வைக்காதது உயிர் எழுத்து.'

இந்தச் சூத்திரம், இன்றைக்குப் பொருந்தலாம். ஆனால் அன்றைக்கு (அதாவது, தொல்காப்பியம், நன்னூல் எழுதப்பட்ட நேரத்தில்) உயிர் எழுத்துகளிலும் இரண்டு எழுத்துகளுக்குத் தலையில் புள்ளி வைத்திருந்தார்கள். அவை: எ மற்றும் ஒ. பின்னர் ஏதோ காரணத்தால் இந்தப் பழக்கம் தவிர்க்கப்பட்டுவிட்டது. ஆதலால் இப்போது, புள்ளி வைத்த உயிர் எழுத்துகள் எவையும் இல்லை.

உயிர் எழுத்துகளில் மூன்றைமட்டும் 'சுட்டெழுத்துகள்' என்பார்கள். அதாவது, 'சுட்டு எழுத்துகள்', அவை ஒரு பொருளைச் சுட்டிக்காட்டுகிற எழுத்துகள்.

உதாரணமாக, 'அப்பையன்' என்று சொல்லும்போது, அதில் வரும் 'அ' என்ற எழுத்து, சம்பந்தப்பட்ட பையனைச் சுட்டிக்காட்டுகிறதல்லவா? அதனால் அது சுட்டெழுத்து.

தமிழில் உள்ள மூன்று சுட்டெழுத்துகள் : அ, இ மற்றும் உ.

இந்த மூன்றுக்கும் என்ன வித்தியாசம்? எப்போது எதைப் பயன்படுத்தவேண்டும்?

'அ' என்பது, சேய்மைச் சுட்டு, தமிழில் 'சேய்மை' என்றால் தொலைவு என்று பொருள், தூரத்தில் உள்ள பொருள்களைச் சுட்டுவதற்கு 'அ' என்ற எழுத்தைப் பயன்படுத்தலாம்.

'இ' என்பது, அண்மைச் சுட்டு, அதாவது, அண்மையில், அருகில் உள்ள பொருள்களைச் சுட்டுவதற்கு 'இ' என்ற எழுத்தைப் பயன்படுத்தலாம்.

'உ' என்பது இந்த இரண்டுக்கும் நடுவே, பக்கத்திலும் இல்லாத, தூரத்திலும் இல்லாத, நடுவில் உள்ள பொருள்களைக் குறிக்கப் பயன்படுத்தலாம்.

உதாரணமாக, நான் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறேன், எதிரே ஒரு மேஜை இருக்கிறது, சற்றுத் தொலைவில் செய்தித்தாள் தரையில் கிடக்கிறது. இதை எப்படிச் சுட்டுவது?

'இந்நாற்காலி'யில் உள்ள நான், 'அச்செய்தித்தாளை' எடுத்து, 'உம்மேஜையில்' வைக்கிறேன் : இந்தக் காட்சியை அப்படியே கற்பனை செய்து பார்த்தால், அ, இ, உ வித்தியாசம் தெளிவாகப் புரிந்துவிடும்.

அ, இ என்ற சுட்டெழுத்துகளைப் புரிந்துகொள்வது மிகவும் சுலபம். காரணம், நாம் தினசரி வாழ்க்கையில் இவற்றைச் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்திவருகிறோம்.

உதாரணமாக, என் நண்பர் ஒருவர் இதே அறையில் இருக்கிறார். அவரைப்பற்றி உங்களிடம் பேசினால், 'இவன் இருக்கானே, பெரிய திறமைசாலி' என்பேன். அதே நண்பர் டெல்லியில் இருந்தால்? 'இவன்' என்று சொல்லமாட்டேன், 'என் ஃப்ரெண்டு… அவன் இருக்கானே, பெரிய திறமைசாலி' என்பேன். இந்த இரண்டுக்கும் நடுவே, மூன்றாவது சுட்டெழுத்தைப் பயன்படுத்தி 'உவன் பெரிய திறமைசாலி' என்றுகூடச் சொல்லலாம். ஆனால் அது இப்போது புழக்கத்தில் இல்லை.

மூன்று சுட்டெழுத்துகளையும் பயன்படுத்தி நம்மாழ்வார் ஓர் அருமையான பாசுரம் எழுதியிருக்கிறார்:

நாம் அவன், இவன், உவன், அவள், இவள், உவள், எவள்,
தாம் அவர், இவர், உவர், அது, இது, உது, எது,
வீம் அவை, இவை, உவை, அவை நலம் தீங்கு அவை
ஆம் அவை ஆயவை ஆய்நின்ற அவரே!

இதற்கு முழு விளக்கம் தருவதற்கு இது இடமல்ல, அதற்குப் பதிலாக, அவன், இவன், உவன், அவள், இவள், உவள், அவர், இவர், உவர், அது, இது, உது என நம்மாழ்வார் சுட்டெழுத்துகளின் பயன்பாடுகளை நன்கு காட்சிப்படுத்திருப்பதைமட்டும் பார்த்துக்கொள்ளுங்கள். இப்படி நாம் சுட்டுகிற எல்லாம் அந்த இறைவனே என்பது பாடலின் மையக் கருத்து.

இருப்பவை மூன்றே சுட்டெழுத்துகள்தாம். ஆனால் அதற்குள் பல வகைபாடுகள் உண்டு, ஏற்கெனவே அண்மைச் சுட்டு, சேய்மைச் சுட்டு பார்த்தோம், இன்னொரு வகைபாடு: அகச் சுட்டு, புறச் சுட்டு.

'அகச் சுட்டு' என்றால், அந்தச் சொல்லே ஒரு சுட்டாக இருக்கும், அதிலிருந்து சுட்டெழுத்தைப் பிரித்து எடுத்துவிட்டால், அர்த்தம் இருக்காது.

உதாரணமாக, 'அவன்' என்ற சொல், இதில் 'அ' என்பது சுட்டெழுத்து, அதைப் பிரித்துவிட்டால், 'வன்' என்று வரும், அதற்குப் பொருள் இல்லை. ஆகவே இது 'அகச் சுட்டு'.

மாறாக, 'அப்பையன்' என்ற சொல், இதில் 'அ' என்ற சுற்றெழுத்தைப் பிரித்துவிட்டால்கூட, 'பையன்' என்ற சொல் மீதமிருக்கும். ஆகவே, அது 'புறச் சுட்டு'.

ஆனால், நிஜ வாழ்க்கையில் நாம் 'அப்பையன்' என்று சொல்வதில்லையே, 'அந்தப் பையன்' என்றுதானே எழுதுகிறோம்? அது ஏன்?

'அப்பையன்' என்பதும் 'அந்தப் பையன்' என்பதும் ஒரே அர்த்தம்தான். ஆனால் இலக்கணப்படி 'அப்பையன்' மட்டுமே போதுமானது. 'அ' என்கிற சுட்டெழுத்தை நாம் 'அந்த' என்று திரித்துப் பயன்படுத்துகிறோம். இதேபோல், 'இ' என்ற சுட்டெழுத்து 'இந்த' என்று திரிகிறது, 'உ' என்ற சுட்டெழுத்து 'உந்த' என்று திரிகிறது. அந்த, இந்த, உந்த என்ற இந்த மூன்று சொற்களையும் 'சுட்டுத் திரிபு' என்பார்கள். அதாவது, அ, இ, உ என்கிற சுட்டெழுத்துகளின் திரிந்த வடிவம்.

அது, இது, உது என்று ஒரு பொருளைச் சுட்டிக் காட்டும் எழுத்துகளைப்போலவே, 'எது?' என்று கேள்வி கேட்பதற்கும் சில எழுத்துகள் வேண்டுமல்லவா?

அவை 'வினா எழுத்துகள்'. அடுத்த வாரம் அவற்றைப்பற்றி விரிவாகப் பேசலாம்.

அதற்குமுன்னால், இந்த அத்தியாயத்தில் நாம் பார்த்த முக்கியமான சொற்கள் / தலைப்புகள் / Concepts பட்டியலை இங்கே தருகிறேன், எதற்கு என்ன அர்த்தம், என்ன உதாரணம் என்று நினைவுபடுத்திப் பாருங்கள், ஏதேனும் புரியாவிட்டால், சிரமம் பார்க்காமல் மேலே சென்று ஒருமுறை படித்துவிடுங்கள்.

* எழுத்து
* அதில் இரண்டு வகை : முதலெழுத்து (30), சார்பெழுத்து (217)
* முதலெழுத்தில் இரண்டு வகை : உயிர் எழுத்து (12), மெய் எழுத்து (18)
* மாத்திரை அளவு
* குறில் (5), நெடில் (7)
* மெய் எழுத்துகள், ஆய்த எழுத்துகளின் மாத்திரை அளவு
* உயிர்மெய் எழுத்துகளின் மாத்திரை அளவு
* புள்ளி வைத்த உயிர் எழுத்துகள்
* சுட்டெழுத்துகள் (3)
* சேய்மைச் சுட்டு, அண்மைச் சுட்டு
* அகச்சுட்டு, புறச்சுட்டு
* சுட்டுத் திரிபு


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக