செவ்வாய், 5 மே, 2015

TRB PG TAMIL :தமிழ் அறிஞர்களின் உரைநடை


. தமிழ் அறிஞர்களின் உரைநடை

    கடந்த இரு நூற்றாண்டுகளில் தமிழ் அறிஞர்கள் தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு ஆற்றிய தொண்டு போற்றத்தக்கது. உரைகளாலும் உரை நடை நூல்களாலும் படைப்புகளாலும் இவர்கள் உரைநடையை வளர்த்தனர். சிவஞான முனிவர் முதல் மு.வ. வரையான அறிஞர்களின் உரைநடைப் பணிகள் இப்பகுதியில் புலப்படுத்தப்படுகின்றன.

6.5.1, சிவஞான முனிவர்

    உரையாசிரியர்கள் கையாண்ட உயரிய நடையைச் சிவஞான முனிவர் கையாண்டார். திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த சிவஞான முனிவர் 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர். வடமொழி, தமிழ் இவ்விரண்டிலும் புலமையுடையவர்.

  • சிவஞான போத மாபாடியம், இலக்கண விளக்கச் சூறாவளி, தொல்காப்பியச் சூத்திரவிருத்திமுதலிய உரைநடைநூல்களை சிவஞான முனிவர் எழுதியுள்ளார். பேச்சு வழக்கை     ஒட்டியே     உரைநடை நூல்களை இயற்றியுள்ளார். தூய செந்தமிழ் நடையையே பயன்படுத்தினார். இவரது உரைநடை நுட்பமான பொருளைத் தெளிவாக விளக்கமாகக் கூறும் தன்மையுடையது. சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் திறன் படைத்தது. நடையிலே வேகமும் கம்பீரமும் தெளிவும் உடையது.
  • 6.5.2, ஆனந்தரங்கம் பிள்ளையின் உரைநடை (1709-1761)

        ஆனந்தரங்கம்பிள்ளை அவர்கள் புதுச்சேரியின் கவர்னர் டூப்ளேயின் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார். சொந்தமாகக் கப்பல் வாணிபமும் செய்தார். ஆனந்தரங்கம்பிள்ளை அவர்களுக்கு நாட்குறிப்பு (டைரி) எழுதும் வழக்கம் உண்டு. இவரது நாட்குறிப்பின் மூலம் அக்கால மக்களது பழக்க வழக்கங்கள், பேச்சு வழக்கு, வரலாறு முதலியவற்றை அறிந்து கொள்ளலாம்.

  • ஆனந்தரங்கம்பிள்ளையின் நாட்குறிப்பை (டைரி) வரலாற்றுக் களஞ்சியம் என்று கூறுவர். இவரது நாட்குறிப்பு மூலம் அக்கால உரைநடையைப் பற்றி அறிந்து கொள்ளலாம். இவரது நாட்குறிப்பு நடை, பேச்சு வழக்கிலமைந்த நடையாகும். மேலைநாட்டாரின் உரைநடை தோன்றிய காலத்தில், இவரது உரைநடையும் அவர்களைப் போன்றே அமைந்துள்ளது. மேலும் இவரது நடையில் பிரெஞ்சு, ஆங்கிலம், பாரசீக மொழிச் சொற்களைக் காணலாம்.
  • ஆனந்தரங்கம் பிள்ளையின் டைரியைப் பற்றி வ.வே.சு. ஐயர் குறிப்பிடும்பொழுது, "அவர்     எழுதி வைத்திருக்கும் குறிப்புகளைப் படிக்கும்போது அக்காலத்துத் தமிழ்நாட்டைச் சலனப்படக் காட்சியில் பார்ப்பது போன்ற உணர்ச்சி நமக்கு உண்டாகிறது'' என்கிறார்.
  • 6.5.3, இராமலிங்க அடிகள் (1823-1874)

        வள்ளலார் என அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் சிறந்த உரைநடையாளர். பல உரைநடை நூல்களை எழுதியுள்ளார். மனுமுறை கண்ட வாசகம் எனும் உரைநடைநூல் இயல்பாகவும், எளிமையாகவும்,     உயிரோட்டமுடையதாகவும்     உள்ளது. உணர்ச்சிமிக்க நடையாக அது அமைகின்றது.

        "ஐயோ, இந்தப் பசுவின் சோர்ந்த முகத்தில், கண்ணீர் ததும்புகின்றதைக் கண்ட என் கண்களை நுங்கு சூன்றெடுப்பது போல பிடுங்கியெறியேனோ!... என் செவிகளை செம்புநீருருக்கி விட்டுச் செவிடாக்கேனோ!''

    6.5.4, ஆறுமுக நாவலரின் உரைநடை (1822-1879)

        தமிழ் உரைநடை வரலாற்றில் ஆறுமுக நாவலரின் உரைநடை மிகவும் குறிப்பிடத் தக்கது. மேலைநாட்டாரின் வருகையால் அரசியல், சமூக, பொருளாதாரப் பண்பாட்டு மாற்றங்கள் ஏற்பட்டன. இம்மாற்றங்களுக்கு ஏற்ப உரைநடை தனது பயன்பாட்டு எல்லையை விரிவுபடுத்த வேண்டி வந்தது. மேலைநாட்டார் இந்தியாவிலும் இலங்கையிலும் கிறிஸ்தவ சமயப் பிரச்சாரத்தைத் தொடங்கினர். நூல்களும் துண்டுப் பிரசுரங்களும் வெளியிடப்பட்டன. பொது மக்களுக்காகப் பேச்சு வழக்கைச் சார்ந்த உரைநடையைக் கையாண்டனர். இலங்கையில் கிறிஸ்தவ சமயப் பிரச்சாரத்திற்கு எதிராகப் பொது மக்களுக்குச் சைவ சமயக் கொள்கைகளை விளக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதற்காக எளிய நடையைக் கையாள வேண்டிய இன்றியமையாமை ஆறுமுக நாவலருக்கு ஏற்பட்டது.     அச்சு இயந்திரங்களின் வருகை உரைநடை வளர்ச்சிக்குத் துணைபுரிந்தது. அக்காலகட்டத்தில் தோன்றிய பத்திரிகைகள் உரைநடை தோன்றுவதற்கு உதவி செய்தன. ஆறுமுக நாவலர் பலவாறு புகழப்படுகிறார். உரைநடையின் தந்தை, உரைநடையின் வல்லாளர், நாவன்மை படைத்த பேச்சாளர், சைவ வாழ்வு தந்த     நன்னெறியாளர் என்பன அவர் பற்றிய புகழுரைகளில் சில.

    • திருமுருகாற்றுப்படை உரை, நன்னூல் காண்டிகை உரை, திருவிளையாடற் புராண வசனம், பெரிய புராண வசனம், இலக்கண வினா விடை, சைவ வினா விடை, யாழ்ப்பாணச் சமயநிலை, நல்லறிவுச் சுடர் கொளுத்தல் போன்ற     உரைநடை     நூல்களை ஆறுமுக நாவலர் எழுதியுள்ளார்.

    6.5.5, சி.வை. தாமோதரம் பிள்ளையின் உரைநடை      (1832-1901)

        சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்கள் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். தமிழகத்தில் உயர்ந்த பதவி வகித்தார். வழக்குரைஞராகவும் பணியாற்றினார்.     கலித்தொகையையும் தொல்காப்பியத்தையும் பதிப்பித்தார். இலக்கிய வழக்கு நடையையும் கலந்து எழுதினார். இவரது நடை தெளிவான நடையாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய நடையாதலால் வடசொல் கலப்பும் ஆங்கிலச்சொல் கலப்பும் காணப்படுகின்றன.

    6.5.6, உ.வே. சாமிநாதய்யரின் உரைநடை (1855-1942)

        டாக்டர் உ.வே. சாமிநாதய்யரின் புகழ் தமிழ் உள்ள அளவும் நிலைத்து நிற்கும். உத்தமதானபுரத்தில் பிறந்த இவர், தம் வாழ்நாள் முழுவதும் பழைய ஏடுகளைத் தேடிக் கண்டுபிடித்து, படி எடுத்துப் பிழையின்றிப் பதிப்பித்துத் தந்தார். காப்பியங்களும், புராணங்களும், கோவைகளும் உலாக்களும் இவரால் சிறந்த முறையில் பதிப்பிக்கப்பட்டன. சீவகசிந்தாமணி, மணிமேகலை, பத்துப்பாட்டு, புறநானூறு முதலியவற்றைப் பதிப்பித்து வெளியிட்டார்.

  • நான் கண்டதும் கேட்டதும், பழையதும் புதியதும், நல்லுரைக்கோவை, நினைவு மஞ்சரி என்பவை இவரது கட்டுரைத் தொகுப்புகளாகும். இவர் தமிழுக்காகவே வாழ்ந்தவர் என்று பாரதியார் பாராட்டியுள்ளார் . இவர் தமிழ்த்தாத்தா என்று அன்புடன் தமிழ் மக்களால் அழைக்கப்படுகிறார்.
  • இரண்டு வித உரைநடைகளை உ.வே.சா அவர்கள் பின்பற்றி எழுதியுள்ளார். மணிமேகலை கதைச்சுருக்கம் போன்ற நூல்களை உரையாசிரியர் நடையைப் பின்பற்றி உயர்ந்த செந்தமிழ் நடையில் எழுதினார். பிற்காலத்தில் எழுதிய நினைவு மஞ்சரி போன்ற நூல்களின் நடை எளிமையும் தெளிவும் வாய்ந்ததாகும். பிழையற்ற எளிய தமிழில் நூல்கள் எழுதி இந்த நூற்றாண்டில் உரைநடை வளர்ச்சிக்குத் தொண்டு புரிந்தார்.
  • "இராமலிங்கரும், வேதநாயகரும் செய்யுளில் வளர்த்த எளிமையைத் திரு. வி. கல்யாண சுந்தரனாரும் உ.வே. சாமிநாதய்யரும் உரைநடையில் வளர்த்தனர்'' என டாக்டர் மு.வ. கூறுவது இங்குக் குறிப்பிடத்தக்கது.
  • 6.5.7, மறைமலையடிகளாரின் உரைநடை (1876-1950)

        மறைமலையடிகள் தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் புலமையுடையவர். சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றியவர். தனித்தமிழ் இயக்கத் தோற்றத்திற்குக் காரணமாக இருந்தவர். இவரது உரைநடை நீண்ட வாக்கியங்களைக் கொண்டது. இருப்பினும் எளிமையும்     இனிமையும்     வாய்ந்ததாக     உள்ளது. மறைமலையடிகளாரைத் தனித்தமிழ் நடைக்குத் தந்தை என்று கூறுவர். குமுதவல்லி, சாகுந்தல நாடகம் போன்றவற்றை எழுதியுள்ளார்.

    6.5.8. திரு.வி.க.வின் உரைநடை (1883-1953)

        திரு.வி. கலியாணசுந்தரனார் தமிழ் ஆசிரியராக இருந்தார். பத்திரிக்கை ஆசிரியராகப் புகழ் பெற்றார். தொழிலாளர் தலைவராக விளங்கினார். பாரதியார் தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் கவிதை மூலம் செய்த அரும்பணியைத் திரு.வி.க உரைநடை மூலம் செய்தார்.

  • நாயன்மார் வரலாறு, சைவத்திறவு, இராமலிங்கர் உள்ளம், இமயமலைத் தியானம், பெண்ணின் பெருமை, மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், தமிழ்ச்செல்வம், முருகன் அல்லது அழகு,     பொதுமை வேட்டல் போன்ற நூல்களையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
  • 6.5.9. ஞா. தேவநேயப்பாவாணரின் உரைநடை (1902-1981)

        மொழிஞாயிறு தேவநேயப்     பாவாணர்     அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மொழிநூல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். தமிழ்மொழி, பண்பாடு, தமிழ் அகராதி, தமிழ்நாட்டு வரலாறு, தமிழர் மதம், தமிழ் இலக்கிய வரலாறு தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். மறைமலையடிகளுக்குப் பின் தனித்தமிழ் இயக்கத்தை வளர்த்தவர்.

  • சொற்களின் வேர்களைப் பற்றி ஆராய்ந்து பலநூல்களை எழுதினார்.
  • இலக்கணம்,     சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் பல எழுதியுள்ளார். கட்டுரை எழுதுவது எப்படி? என்று மாணவர்கள் அறிந்து கொள்வதற்காகக் கட்டுரை வரைவியல் என்னும் நூலை எழுதினார்.உரைநடை இலக்கணம் (1931) உயர்தரக் கட்டுரை இலக்கணம் (2 தொகுதிகள் 1950,1951) என்ற இருநூல்களை எழுதியுள்ளார்.
  • 6.5,10. பெரியாரின் உரைநடை (1879-1973)

        ஈ.வே. ராமசாமி என இயற்பெயர் கொண்டவர் தந்தைப் பெரியார். ஈரோட்டில் பிறந்தவர். பகுத்தறிவுச் சிந்தனைகளை மக்களிடத்தில் பரப்பியவர். தமிழ்நாட்டுச் சாக்ரடீஸ் என்றும், தமிழ்நாட்டுப் புத்தர் என்றும் இவரைப் போற்றுவர். இவரது நடை மக்கள் பேசும் பேச்சு நடையாகும்.

  • பெரியார் எதைப்பற்றியும் அஞ்சாமல் எழுதுவார். இவருக்கு இலக்கணம் பற்றிக் கவலை இல்லை . பிழைகளும், நீண்ட வாக்கியங்களும் கொண்டதாக உரைநடை இருந்தது.
  • மூடத்தனத்தை எதிர்க்கின்ற வகையில் வெளிப்படையாகச் சுருக்கென்று தைக்குமாறு எழுதுவார். இவரது நடையில் தமது கருத்துக்களைத் தெளிவாக வெளியிடுகின்ற தன்மையைக் காணலாம்.
  • 6.5.11. அறிஞர் அண்ணாவின் நடை (1909-1969    

        அறிஞர் அண்ணா காஞ்சிபுரத்தில் பிறந்தவர். தமிழ் உரைநடை வரலாற்றில் தனி நடையினைப் பெற்றுத் திகழ்ந்தவர். 'மறுமலர்ச்சி நடைக்கு அறிஞர் அண்ணா' என்று இவரைத் தமிழ் உலகம் போற்றுகிறது.

  • வடசொற்களைக் கலந்தே எழுதினார். இருப்பினும் நல்ல தமிழ் நடையைத் தமிழ் உலகுக்கு வழங்கினார். எதுகை, மோனை, அடுக்குமொழி, உவமை, உருவகம், ஓசை நயம், பழமொழி, மேற்கோள் போன்றவற்றைத் தமது நடையில் பயன்படுத்தி நடையை வளம்பெறச் செய்தார் எனக் கூறலாம்.
  • ஓர் இரவு, வேலைக்காரி, கம்பரசம், நீதிதேவன் மயக்கம், பார்வதி பி.ஏ., போன்ற நூல்களை எழுதினார்.
  • தமிழ் எழுத்து நடையிலும், பேச்சு நடையிலும் அண்ணா சகாப்தம் என்று அழைக்கப்படும் அளவுக்கு ஒரு பெரிய சகாப்தத்தை உருவாக்கிவிட்டுச் சென்றார்.
  • 6.5.12. பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் (1881-1953)

        பண்டிதமணி , மு. கதிரேசச் செட்டியார்     அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றியவர். தமிழிலும் வடமொழியிலும் புலமை பெற்றவர்.

        உதயணன் சரிதம், சுலோசனை, உரைநடைக்கோவை முதலிய நூல்களை எழுதியுள்ளார். மண்ணியல் சிறுதேர், சுக்கிரநீதி முதலியவை இவரின் சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களாகும்.

        இவர் எழுதிய திருவாசக உரை எளிய நடையில் அமைந்துள்ளது. காலத்திற்கேற்ப இவருடைய நடை மாற்றம் பெற்றுள்ளது.    

    6.5.13. ந.மு. வேங்கடசாமி நாட்டாரின் நடை (1884-1944)

        நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றியவர். சிறந்த தமிழ்ப் பேரறிஞராகத் திகழ்ந்தார். சிலப்பதிகாரம், மணிமேகலை, ஆத்திசூடி,     இன்னாநாற்பது,     இனியவை     நாற்பது, திருவிளையாடற்புராணம்     போன்ற நூல்களுக்கு உரை எழுதியுள்ளார்.

  • நக்கீரர், கபிலர், வேளிர் வரலாறு, கள்ளர் சரித்திரம் போன்ற ஆய்வு நூல்களை இயற்றியுள்ளார். இலக்கணத்தைப் பின்பற்றியே உரை எழுதியுள்ளார்.
  • 6.5.14. எஸ். வையாபுரிப்பிள்ளை நடை (1888-1956)

        எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள் ஆய்வுத்துறையில் சிறப்பாகப் பணியாற்றினார். சென்னை, கேரளப் பல்கலைக் கழகங்களில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். தமிழ், மலையாளம், வடமொழி, ஜெர்மன், ஆங்கிலம் முதலிய மொழிகளில் புலமை பெற்றவர்.

  • இலக்கியச் சிந்தனைகள், இலக்கணச் சிந்தனைகள், இலக்கிய உதயம், இலக்கிய தீபம், காவிய காலம், தமிழ்ச்சுடர் மணிகள், தமிழின் மறுமலர்ச்சி, தமிழர் பண்பாடு போன்ற நூல்களை எழுதியுள்ளார்.
  • இவருடைய நடை வடசொல் கலந்தது. இலக்கணப் பிழை இல்லாத எளிய நடையாகும்.
  • 6.5.15. வ. ராமசாமியின் நடை (1869-1951)

        வ. ராமசாமி அவர்கள் எழுத்தாளர்களின் முதல்வர், எழுத்தாளர்களின் தலைவர் என்று பாராட்டப் பெற்றவர். பாரதியாருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர். சுதந்திர விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் தம் நூல்களை எழுதினார்.

        இவருடைய எழுத்து, பேச்சு அனைத்தும் அரசியல், சுதந்திரம், சமூகச் சீர்திருத்தம், தமிழ் முன்னேற்றம் பற்றியதாகவே இருக்கிறது.    

    6.6.16. தொ.பொ. மீனாட்சி சுந்தரனார் நடை (1901-1980)

        இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய பேராசிரியர்களுள் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் சிறப்பிடம் பெற்றவர். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர்.

        குடிமக்கள் காப்பியம், சமணர் இலக்கிய வரலாறு போன்ற நூல்களை எழுதிய தொ.பொ. மீனாட்சி சுந்தரனார் அவர்கள் இலக்கியம், வரலாறு, தத்துவம் முதலிய பல துறைகளில் ஈடுபாடு கொண்டவர். இவரது நடை சில இடங்களில் கவிதை நயம் தோன்ற எழுதப்பட்டிருக்கிறது. சிறுசிறு தொடர்களில் உணர்ச்சியை வெளிப்படுத்தும் முறையில் எழுதியுள்ளார்.    

    6.5.17. மு. வரதராசனார் நடை (1912-1974)

        மு. வரதராசனார் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப்     பணிபுரிந்தவர்.     மதுரை     காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றியவர்.

  • பேராசிரியர் மு.வ. அவர்கள் நடையை எளிமைப்படுத்தியவர். எளிய நடையில் இனிமையும் மென்மையும் வாய்ந்த சொற்களால் தம் நூல்களை இயற்றியுள்ளார். நேரிய நன்னடை, எளிமையும் இனிமையும் ஓட்டமும் உடைய நடை என்றும் போற்றுவர். கள்ளோ காவியமோ, கரித்துண்டு, கயமை, பெற்ற மனம், வாடாமலர், செந்தாமரை, இலக்கிய வரலாறு,     இலக்கியத்திறன்,     இலக்கிய மரபு, மொழிவரலாறு, மாதவி போன்ற எண்ணற்ற நூல்களை மு.வ. அவர்கள் எழுதியுள்ளார்.
  •  

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக