ஞாயிறு, 3 மே, 2015

TRB PG TAMIL கலித்தொகை-மலையுளே பிறப்பினும் மலைக்கு அவைதாம் என்செய்யும்?

ஒரு காதலனும் காதலியும் யாருக்கும் தெரியாமல் ஊரை விட்டுச் செல்கிறார்கள்.இன்னோர் இடத்தில் திருமணம் செய்துகொண்டு வாழத் தீர்மானிக்கிறார்கள்.

மறுநாள், அந்தக் காதலியை வளர்த்த தாய் தன் மகளைக் காணாமல் தவிக்கிறார். 'எங்கே போனாளோ' என்று தேடுகிறார்.

ஊர் மக்கள் சொல்கிறார்கள், 'அவ தன் காதலனோட வேற ஊர்க்குப் போய்ட்டா'.

'அப்படியா? எந்த வழியாப் போனா?'

'இதோ, இந்த வழியாதான்!'

மகளைத் தேடிக்கொண்டு அந்த வழியாக ஓடுகிறார் தாய். எதிரில் வருகிறவர்களிடமெல்லாம் விசாரிக்கிறார், 'இந்தப்பக்கமா ரெண்டு பேர், ஓர் ஆணும் ஒரு பெண்ணும் போனதைப் பார்த்தீங்களா?'

அவர்கள் பதில் சொல்லவில்லை. ஆகவே, தாய்க்கு விஷயம் புரிந்துவிடுகிறது. 'பார்த்தீங்களா? சீக்கிரம் சொல்லுங்க' என்கிறார்.

'ஆமா, பார்த்தோம்!'

'எங்கே? எங்கே?'

'கொஞ்சம் பொறும்மா, ஏன் பதற்றம்? நிதானமா விஷயத்தைச் சொல்லு'.

'எப்படிங்க நிதானமாப் பேசறது, என் பொண்ணு யாரோ ஒருத்தனோட போயிருக்கா, அவங்களைக் கண்டுபிடிக்கவேணாமா?'

'அவ யாரோ ஒருத்தனோட போகலை, தன் தகுதிக்கு ஏத்த ஒருத்தனோடதான் போயிருக்கா' என்கிறார்கள் அவர்கள், 'உன் பொண்ணு தனக்குப் பிடிச்ச காதலனைத் திருமணம் செஞ்சுகிட்டு மகிழ்ச்சியா வாழப்போறா. அதை நினைச்சு நீ பெருமைப்பட வேணாமா?'

'சந்தனம் மலையில பிறக்குது. ஆனா, அந்தச் சந்தனத்தால மலைக்கு எதாவது பயன் உண்டா? சரியான நேரத்துல அதை எடுத்து அரைச்சுப் பூசிக்கிறது யாரு? மலையா? மத்தவங்களா?'

'தண்ணிக்குள்ள முத்து பிறக்குது. ஆனா, அந்த முத்தால தண்ணிக்கு எதாவது பயன் உண்டா? கோத்து மாலையாப் போட்டுக்கறது யாரு? தண்ணியா? மத்தவங்களா?'

'யாழ்ல இசை பிறக்குது, அதனால, யாழுக்கு ஏதாவது நன்மை உண்டா? கேக்கறவங்கதானே இசையை ரசிக்கறாங்க?'

'அதுபோல, நீ வளர்த்த பொண்ணு, இப்ப இன்னொருத்தனுக்குச் சொந்தம், அவன்தான் தன்னோட உரிமைன்னு நினைச்சு அவனோட கிளம்பிப் போயிருக்கா, மகிழ்ச்சியா குடும்பம் நடத்துவா. நீ கவலைப்படாதே!'

காதலன் பூசிக்கொண்ட சந்தனமாகக் காதலியை உருவகப்படுத்திப் பேசும் இந்தப் பாடல், கலித்தொகையில் வருகிறது. எழுதியவர் பெருங்கடுங்கோ.

எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடைநீழல்

உறித்தாழ்ந்த கரகமும் உரைசான்ற முக்கோலும்

நெறிப்பட சுவலசைஇ வேறோரா நெஞ்சத்துக்

குறிப்பேவல் செயன்மாலைக் கொளைநடை அந்தணீர்,

வெவ்விடைச் செலன்மாலை ஒழுக்கத்தீர், இவ்விடை

என் மகள் ஒருத்தியும், பிரள் மகன் ஒருவனும்

தம்முளே புணர்ந்ததாம் அறிபுணர்ச்சியர்

அன்னார் இருவரைக் காணிரோ பெரும!

காணேம் அல்லேம், கண்டனம், கடத்திடை

யாணெழில் அண்ணலோடு அரும்சுரம் உன்னிய

மாணிழை மடவரற் தாயிர் நீர் போறிர்!

பலவுறு நறும்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை

மலையுளே பிறப்பினும் மலைக்கு அவைதாம் என்செய்யும்?

நினையுங்கானும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!

சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை

நீருளே பிறப்பினும், நீர்க்கு அவைதாம் என்செய்யும்?

தேருங்கானும் மகள் நுமக்கு ஆங்கு அனையளே!

ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை

யாழுளே பிறப்பினும் யாழ்க்கு அவைதாம் என்செய்யும்?

சூழுங்கானும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே,

எனஆங்கு

இறந்த கற்பினாள் எவ்வம் படரன்மின்,

சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்

அறந்தலை பிரியா ஆறுமற்றதுவே!

கிட்டத்தட்ட இதேபோன்ற ஒரு காட்சி, திரைப்படம் ஒன்றில் இடம் பெற்றபோது, அதற்கான பாடல் வரிகளை எழுதியவர் நா.காமராசன். மகள் இன்னொருவனைத் திருமணம் செய்துகொண்டுவிட்டாள் என்ற செய்தி கேட்டுத் தந்தையும் தாயும் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக் கொள்வதாக அமைந்த அழகிய வரிகள் அவை:

மஞ்சள், குங்குமம், மார்பில் சந்தனம்

சூடும் கன்னிப் பாவை,

பாச தீபம் கையில் ஏந்தி,

வாழ வந்த வேளை,

கண்களாலே பெண்மை பாட,

இன்பம் கண்ட மங்கை!

இந்த வரிகளின் உச்சமாக, பெற்றோரின் நேசத்தைச் சொல்லும் இந்த எதார்த்தமான முத்தாய்ப்பை வைக்கிறார் நா.காமராசன் -

நாம் வாடி நின்றாலும்,
நலமோடு வாழ்கவே!

அந்த இரண்டு பாடல்களில் மனம் மிகவும் கனத்துவிட்டது. கொஞ்சம் மடை மாற்றுவோம்.

பாண்டியனின் காதலி ஒருத்தி. அவன் மார்பைத் தழுவ வேண்டும் என்று ஏங்குகிறாள்.

ஆனால், அவன் இப்போது அவள் அருகே இல்லை. எப்போது அவனை மீண்டும் காணலாம் என்று எண்ணி ஏங்குகிறாள். தூக்கம் வரவில்லை. இரவோடு பேச ஆரம்பிக்கிறாள். 'இரவே, உன் நிலைமை பரிதாபம்தான்!'

ஏன்? இரவுக்கு என்ன பிரச்னை?

'காதலன் அருகே இருக்கும்போது, இரவு விடியவேகூடாது என்றுதான் காதலிக்குத் தோன்றும். அதே காதலன் இல்லாதபோது, இந்த இரவு சீக்கிரம் விடிந்தால் பரவாயில்லை என்று தோன்றும்!'

'மலர்களைத் தொடுத்து மாலையாக அணிந்த பாண்டியன், மார்பில் சந்தனம் பூசியவன், அவனைத் தழுவும் காதலிகள், இரவே, நீ விடியாதே என்று உன்னை அதட்டுவார்கள்'.

'என்னைப்போல், அவனைத் தழுவ இயலாமல் தவிக்கிறவர்கள், இரவே, சீக்கிரம் விடிந்துவிடு என்று உன்னை அதட்டுவார்கள்'.

'இப்படி ரெண்டு பக்கமும் சிக்கிக்கொண்டு அவஸ்தைப்படுகிறாய், இரவே, உன் நிலைமை பரிதாபம்தான்!'

இந்தப் பாடல், முத்தொள்ளாயிரத்தில் வருகிறது -

புல்லாதார் 'வல்லே புலர்க' என்பார், புல்லினார்

'நில்லாய் இரவே நெடிது' என்பார், நல்ல

விராஅமலர்த் தார் மாறன் ஒண்சாந்து அகலம்,

இராஅளிப்பட்டது இது!

காதலன் மார்பில் பூசிய சந்தனத்தின் மணத்தைக் காதலி மட்டுமா அனுபவிக்கிறாள்? ஊர் முழுக்க மணக்குமே! இதை எண்ணி ஒரு தோழி கவலைப்படுகிறாள்.

ஏன்? காதலன் பூசிய சந்தனத்தின் மணத்தை மற்றவர்கள் மோந்தால் என்ன தவறு?

மற்றவர்கள் மோந்தால் பரவாயில்லை, புலி மோந்தால் பிரச்னையாகிவிடுமே.

புலியா? அது எங்கிருந்து வந்தது?

இந்தக் காதலன் தன் காதலியைப் பார்ப்பதற்காக நன்கு உடை அணிந்துகொண்டு, மார்பில் சந்தனம் பூசிக்கொண்டு, மாலை அணிந்துகொண்டு வருகிறான். அவளைச் சந்தித்துவிட்டுத் திரும்பச் செல்கிறான்.

அப்படி அவன் செல்லும் வழியில் காடு இருக்கிறது. அங்கே புலிகள் திரிகின்றன. அந்தப் புலிகள் இவனுடைய சந்தன மணத்தை மோந்துவிட்டால், யாரோ ஒரு மனிதன் வருகிறான் என்று தெரிந்துகொண்டு அவன்மேல் பாய்ந்துவிடுமே, அது ஆபத்துதானே?

தோழி இப்படி விளக்கியதும், காதலிக்குப் பிரச்னை புரிகிறது, 'இப்போது என்ன செய்வது?' என்று கேட்கிறாள்.

'உன்னுடைய காதல் விஷயத்தை வீட்டில் சொல்லிவிடலாம்' என்கிறாள் தோழி. 'அப்போதுதான், திருமண ஏற்பாடுகள் உடனே நடக்கும். நீ அவனை மணந்துகொண்டு மகிழ்ச்சியாக வாழலாம். சந்தனம்போல் உங்கள் வாழ்க்கையும் சிறப்பாக மணக்கும்!'

இதுவும் குறுந்தொகைப் பாடல்தான். எழுதியவர் பெயர் தெரியவில்லை -

மலைச் செஞ்சாந்தின் ஆர மார்பினன்,

சுனைப் பூங்குவளைச் சுரும்பு ஆர் கண்ணியன்,

நடுநாள் வந்து நம் மனைப் பெயரும்

மடவரல் அரிவை நின் மார்பு அமர் இன்துணை

மன்ற மறையா விரிய வேறுஅட்டுச்

செங்கண் இரும்புலி குழுமும், அதனால்

மறைத்தற்காலையோ அன்றே,

திறப்பல் வாழி வேண்டு அன்னை நம் கதவே!

நிறைவாக, சந்தனம் என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருகிற காதல் பாட்டு, ஒரு நாட்டுப்புறப் பாடலை அடிப்படையாக வைத்து மருதகாசி எழுதியது.

காதலி இந்தக் கரையில் இருக்கிறாள், காதலன் அந்தக் கரையில் இருக்கிறான். அவனை எண்ணிச் சந்தனத்தை அரைத்துத் தண்ணீரில் அனுப்புகிறாள் அவள். அது தன் காதலனுக்குச் சென்று சேர வேண்டுமே என்று எண்ணிப் பாடுகிறாள்:

ஓடுகிற தண்ணியில

ஒறச்சுவிட்டேன் சந்தனத்த,

சேந்ததோ சேரலியோ

செவத்த மச்சான் நெத்தியிலே!

சந்தனம் அவன் கைக்குச் சென்றுவிட்டது, அதை நெற்றியில் இட்டுக்கொண்டு அவளைக் காண வருகிறான் அவன்.

சந்தனப் பொட்டுவெச்சு

சொந்த மச்சான் வந்திருக்கேன்,

சந்தோஷமாக நீயும்

வந்து சேரு இக்கரைக்கு!


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக