பொறியியல் படிப்புக்கு , இதுவரையில் ஒரு லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதால், பொறியியல் படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் குறையுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சென்ற ஆண்டு பொறியியல் படிப்பில் சேர ஒரு லட்சத்து 75 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்தனர். ஏறத்தாழ - ஒரு லட்சம் இடங்கள் காலியாக இருந்தன. கடந்த ஆண்டுடன் ஒப் பிடும்போது, விண்ணப்ப விற்பனை மந்தம்தான். கடந்த ஆண்டு 2 லட்சத்து 13 ஆயிரம் விண்ணப் பங்கள் விற்பனையாயின. தற்போது, அண்ணா பல்கலைக்கழ கம் நீங்கலாக மற்ற இடங்களில் விண்ணப்ப விற்பனை நேற்றுடன் முடிவடைந்த நிலையில், ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 785 விண்ணப்பங்கள் விற்பனையாகி இருக்கின்றன.

நேற்று மாலை 5 மணி நிலவரப்படி, 1,20,000-க்கும் மேற்பட்டவர்கள் பூர்த்தி செய் யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப் பித்துள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரி யர் வி.ரைமன்ட் உத்தரிய ராஜ் தெரிவித்தார். விண்ணப்பிக்க இன்று ஒரு நாள் மட்டுமே இருப்பதால் விண்ணப் பிப்பவர்களின் எண்ணிக்கை 1.5 லட்சத்தை எட்டுவது சந்தேகம்தான்.

பொதுவாக, கலந்தாய்வு தொடங்கியதும், முதலில் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், அதன் உறுப்புக் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், சென்னையைச் சுற்றியுள்ள புகழ்பெற்ற தனியார் பொறியியல் கல்லூரிகள் முதல் நிலை, தனியார் கல்லூரிகள் 2-ம் நிலை என்ற வரிசையில்தான் இடங்கள் நிரம்பும். இந்த கல்லூரிகளில் காலியிடங்கள் முடிந்த பின்னரே இதர கல்லூரிகளை மாணவர்கள் தேடுவார்கள்.

கடந்த ஆண்டு ஒரு லட்சம் இடங்கள் நிரம்பவில்லை. தற் போதைய சூழலை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு காலி இடங்களின் எண்ணிக்கை 1,20,000-த்தை தாண்டக்கூடும் என எதிர் பார்க்கப்படுகிறது.

இதற்கான காரணங்கள் குறித்து கல்வி ஆலோசகரான பேராசிரியர் மூர்த்தி செல்வகுமரன் கூறியதாவது:

''அண்மைக் காலமாக பொறியி யல் படிப்பில் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள்தான் அதி களவில் சேருகிறார்கள். அவர்கள் கலந்தாய்வு மூலம் ஒதுக்கீடு பெற்றால்தான் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான கல்விக் கட்டண சலுகையைப் பெற முடியும். எனவே, கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கிறார்கள்.

கலந்தாய்வு மூலம் ஒதுக்கீடு பெற்று தனியார் கல்லூரிகளில் சேர்ந்தாலும், நிர்வாக ஒதுக்கீட் டின் கீழ் சேர்ந்தாலும் கட்ட ணம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. அப்படி இருக்கும் போது பின்னர் எதற்காக விண் ணப்பித்துவிட்டு கலந்தாய்வுக்கு போய்வர வேண்டும் என்ற எண் ணம் மாணவர்களுக்கும், அவர் களின் பெற்றோருக்கும் மேலோங்கி வருகிறது. இப்போது கூட தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை மும்முரமாக நடந்து வருகிறது.

அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேரும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்விக் கட்டணமாக அரசு ரூ.40 ஆயிரம் வழங்குகிறது. அதே மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் சேர்ந்தால் ரூ.70 ஆயிரம் கிடைக்கும்.

இவ்வளவு தொகை கிடைப் பதால், இடங்கள் நிரம்பினாலே போதும் என்று கருதும் சாதாரண மான கல்லூரிகள் "விடுதி இலவ சம்" என்று சொல்லி எஸ்சி, எஸ்டி மாணவர்களை ஈர்க்கின்றன. இதன் காரணமாகவும், அந்த வகுப் பைச் சேர்ந்த மாணவ-மாணவி கள் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரவே ஆர்வம் காட்டுகிறார்கள்.

கடந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் ஏறத்தாழ ஒரு லட்சம் இடங்கள் (அரசு ஒதுக்கீடு) காலியாக கிடந்தன. தற்போதைய நிலையைப் பார்க்கும்போது இந்த ஆண்டு கூடுதலாக 20 ஆயிரம் இடங்கள் (மொத்தம் 1.20 லட்சம்) காலியாக இருக்கும்போல் தெரிகிறது.

அதேபோல், கட் ஆப் மதிப் பெண்ணும் கடந்த ஆண்டை விட 1 முதல் 1.5 மதிப்பெண் வரை குறைய வாய்ப்பிருக்கிறது.''

இவ்வாறு அவர் கூறினார்.

மொத்த பொறியியல் கல்லூரிகள் - 538

கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் உத்தேச இடங்கள் - 1.8 லட்சம்

இதுவரை பெறப்பட்டுள்ள விண்ணப்பங்கள் - 1.20 லட்சம்