தன்னம்பிக்கை இருந்தால் வாழ்வில் குறையொன்றுமில்லை என்பதை மெய்ப்பிக்கும் வகையில் தனது இரண்டு கைகளையும் இழந்த பின்னரும் பிளஸ் 2 தேர்வில் 63% மதிப்பெண் பெற்றுள்ளார் மும்பை இளம் பெண் ஒருவர்.

மோனிகா மோர் (18). 2014 ஆண்டு தொடக்கம் தனது கைகளை பறித்துக் கொள்ளும் என அவர் அறிந்திருக்கவில்லை. 2014 ஜனவரி மாதத்தில் ஒரு நாள். மும்பை கட்கோபர் ரயில் நிலையத்தில் மின்சார ரயிலுக்காக காத்துக்கொண்டிருந்தார் மோனிகா மோர். ரயிலில் ஏற முயற்சித்தபோது அவர் பிளாட்பாரத்தும் ரயிலுக்கும் இடையேயான குறுகிய இடைவெளியில் தவறி விழுந்தார். ஆயிரக்கணக்கான பயணிகள் கண் முன் அவரது கைகள் இரண்டும் ரயில் சக்கரங்களில் சிக்கி துண்டாகின.

மொத்த ரயில் நிலையமுமே அதிர்ச்சியில் இருந்த அந்த வேளையில், அங்கே காத்திருந்த இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் விரைந்து செயல்பட்டு மோனிகாவை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவரது கைகள் மீண்டும் பொருத்தும் நிலையில் இல்லை. அளவுக்கு அதிகமாக சிதைந்திருந்தது.

மும்பை கெம் மருத்துவமனையில் 6 மாதங்கள் தங்கி சிகிச்சை பெற்றார். அவரது சிகிச்சைக்கு கிரேட்டர் மும்பை முனிசிபல் நிர்வாகம் ரூ.23 லட்சம் நிதியுதவி அளித்தது.

அதனைக் கொண்டு ஜெர்மன் நிறுவனமான ஓட்டோ போக் தயாரித்த செயற்க்கௌ கைகள் மோனிகாவுக்கு பொருத்தப்பட்டது. பேட்டரியால் இயங்கும் அந்த செயற்கை கைகள் அதிநவீனமானவை.

அந்தக் கைகளைக் கொண்டு மோனிகா வழக்கம்போல் எழுதலாம், கணினியை இயக்கலாம், சாப்பிடலாம், தண்ணீர் டம்ப்ளரை எடுக்கலாம், இன்னும் சிற்சில வேலைகளை செய்துகொள்ளலாம்.

செயற்கை கைகளை பொருத்தப்பட்ட நிலையில் மோனிகா தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார். மகாராஷ்டிரா மாநில உயர்கல்வித் துறை நடத்திய பிளஸ் 2 தேர்வில் மோனிகா 63% மதிப்பெண்களுடன் வெற்றி பெற்றுள்ளார்.

வெற்றி குறித்து மோனிகா கூறும்போது, "நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். தேர்வெழுத எனக்கு உதவிய எனது தோழி ஐஸ்வர்யாவுக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

வாழ்க்கையில் எதை இழந்தாலும் நம்பிக்கையை இழக்கக்கூடாது என்பதற்கு மோனிகா ஓர் எடுத்துக்காட்டு.