ஞாயிறு, 10 மே, 2015

TRB PG TAMIL:மணிமேகலை

தமிழின் இரண்டாவது காப்பியம் மணிமேகலை. அகவற்பாக்களால் ஆகிய 4286 அடிகளைக் கொண்டது. 30 காதைகளைக் கொண்டது. கோவலன் - மாதவி ஆகிய இருவருக்கும் பிறந்த மகளான மணிமேகலை என்பவளின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டதால் 'மணிமேகலை துறவு' என்ற பெயரையும் கொண்டது. இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார். தமிழில் தோன்றிய முதல் சமயக் காப்பியம் மணிமேகலை.


கோவலன் கொலையுண்டதை அறிந்த மாதவி, தன் மகள் மணிமேகலையோடு பௌத்த சமயத்தைச் சார்ந்தாள். மணிமேகலையின் அழகினால் ஈர்க்கப்பட்ட சோழ நாட்டின் இளவரசன் அவள் மீது காதல் கொள்கிறான். மணிமேகலை அவன் காதலை ஏற்கத் தயங்குகிறாள். இந்நிலையில் மணிமேகலா தெய்வம் மணிமேகலையை மணிபல்லவத் தீவில் கொண்டுபோய்ச் சேர்க்கிறது. அங்குப் புத்த பீடிகையின் மூலம் தன் பழம் பிறப்பை உணர்ந்த மணிமேகலை அமுதசுரபியைப் பெற்று, பூம்புகார் வந்து அறவண அடிகளிடம் அறம் உணர்கிறாள். அமுதசுரபியால் மக்களின் பசிப்பிணி போக்குகிறாள். இளவரசன் உதயகுமாரனிடம் இருந்து தப்பி, காயசண்டிகை என்பவளின் உருவில் நடமாடுகிறாள். அப்போது அவளைப் பின்தொடர்ந்த உதயகுமாரன் காயசண்டிகையின் கணவனால் வெட்டிக் கொல்லப்படுகிறான். அவன் தாயாகிய அரசியால் சிறைப்பட்ட மணிமேகலை சிறைக்கோட்டத்தை அறக்கோட்டம் ஆக்குகின்றாள். இறுதியில் விடுதலை அடைந்து வஞ்சி மாநகரம் சென்று அறவண அடிகளிடம் அருளுரை கேட்டுத் தவம் புரிந்து வாழ்ந்தாள் என்பதே மணிமேகலையின் கதை.


மணிமேகலையின் கதை சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சி போல் உள்ளதால் இவ்விரு காப்பியங்களையும் 'இரட்டைக் காப்பியங்கள்' எனக் கூறுவர்.


மணிமேகலையின் சிறப்பு


எளிய நடையில் கதை சொல்லும் தன்மையும் பௌத்த சமய உண்மைகளையும் நீதிகளையும் தெளிவாக எடுத்துரைக்கும் பாங்குமே மணிமேகலைக் காப்பியத்தின் சிறப்பு எனலாம்.


காப்பியக் கதையைவிட அந்நூலின் தலைவியாக விளங்கும் மணிமேகலையின் பாத்திரச் சிறப்பு மேலானது. அவள் அனைவரின் போற்றுதலுக்கும் உரியவள் ஆனவள். பரத்தைக் குலத்தில் பிறந்தவளாயினும் பத்தினி மகளாகவே நிலைபெறுகிறாள்.


மாபெரும் பத்தினி மகள் மணிமேகலை
அருந்தவப் படுத்தல் அல்லது யாவதும்
திருந்தாச் செய்கை தீத்தொழில் படாஅள்

(மணி.ஊர் அலர் உரைத்த காதை, 55-57)


என்னும் மாதவியின் கூற்று மணிமேகலையைக் கண்ணகியின் மகளாகக் காட்டுகிறது.

பல கிளைக்கதைகளைக் கொண்டு, அழகிய வருணனைகளோடு எளிமையும் பொருந்த மணிமேகலைக் காப்பியம் அமைந்துள்ளது. பரத்தை ஒழிப்பு, மது ஒழிப்பு, சிறை ஒழிப்பு, சாதி ஒழிப்பு போன்ற சீர்திருத்தங்களை வலியுறுத்தும் சீர்திருத்தக் காப்பியமாகவும் திகழ்கிறது. அறம் என்பதைச் சமவுடைமையோடு சேர்த்து விளக்குகிறாள் மணிமேகலை.


அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இதுகேள்! மன்னுயிர்க்கு எல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டது இல்

(மணி.ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை, 28-31)


உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே எனும் கருத்தைக் கொண்ட மணிமேகலை பசியின் கொடுமையையும் அதன் தன்மைகளையும் விளக்குகிறது.


குடிப் பிறப்பழிக்கும் விழுப்பங் கொல்லும்
பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்
நாண் அணி களையும்; மாண் எழில் சிதைக்கும்
பூண் அணி மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப்பிணி என்னும் பாவி

(மணி.பாத்திரம் பெற்ற காதை, 76-80)


பௌத்த சமயக் கொள்கைகளை விளக்க எழுந்த மணிமேகலையில் தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதையும், பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதையும் தத்துவ, சமயக் களஞ்சியமாகத் திகழ்கின்றன. பௌத்த சமயக் காப்பியமாக இருப்பினும் திருவள்ளுவரைப் 'பொய்யில் புலவன்' என்றும் அவர் மொழியைப் 'பொருளுரை' என்றும் போற்றுகிறது மணிமேகலை.


தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் பெருமழை என்ற அப்
பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்

(மணி.சிறைசெய் காதை, 61-63)


என்ற அடிகள் சாத்தனாரின் பண்புடைமைக்குச் சான்றாகத் திகழ்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக