வெள்ளி, 22 மே, 2015

அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஜெயலலிதா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.தமிழக முதல்வராக நாளை பொறுப்பேற்க உள்ளார்.

அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஜெயலலிதா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, தமிழக முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை பெற்ற ஜெயலலிதா, மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார். இதற்காக அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று காலை 7 மணிக்கு ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

முதலவர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உட்பட 144 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஜெயலலிதா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

10 நிமிடத்தில் நிறைவடைந்த இந்தக் கூட்டத்தில், சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஜெயலலிதா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதை, அவரிடம் சொல்வதற்கு முதல்வர் பன்னீர்செல்வம் போயஸ் கார்டன் சென்றார்.

போயஸ்கார்டனில் ஜெயலலிதா சந்தித்த பன்னீர்செல்வம், பின்னர் அங்கிருந்து கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்றார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ரோசய்யாவிடம் வழங்கினார். அவரது ராஜினாமாவை ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.

ஆளுநரை சந்திக்கிறார் ஜெயலலிதா

இதன் தொடர்ச்சியாக, பிற்பகல் 1 மணிக்கு ஆளுநர் மாளிகைக்கு செல்லும் ஜெயலலிதா, சட்டப்பேரவை தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதம் மற்றும் அமைச்சர்கள் பட்டியலை ஆளுநர் ரோசய்யாவிடம் வழங்கி, ஆட்சி அமைக்க உரிமை கோருவார்.

ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்படும் ஜெயலலிதா, கிண்டி, சைதாப்பேட்டை வழியாக அண்ணா சாலை ஸ்பென்சர் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு 2 மணிக்கு வருகிறார். எம்ஜிஆர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய பின், வாலாஜா சாலை சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு 2.15 மணிக்கு மரியாதை செலுத்துகிறார். அங்கிருந்து மீண்டும் அண்ணாசாலை வழியாக சென்று, அண்ணா மேம்பாலம் கீழ் உள்ள பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு போயஸ் தோட்டம் திரும்புகிறார்.

அதிமுகவினர் உற்சாகம்

சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலை பெற்று 7 மாதங்களுக்குப் பிறகு ஜெயலலிதா பொதுமக்கள் மற்றும் தொண்டர்களை சந்திக்க வருகிறார். எனவே, அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்க அதிமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

போயஸ் தோட்டத்தில் இருந்து ஆளுநர் மாளிகை வரையிலும் அண்ணா சாலையிலும் வழிநெடுக ஜெயலலிதாவை வரவேற்று தட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

ஜெயலலிதா செல்லும் பாதைகளில் நேற்று மாலை முதலே போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். எம்ஜிஆர், அண்ணா, பெரியார் சிலைகள் அமைந்துள்ள பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

தமிழக முதல்வராக ஜெயலலிதா நாளை பொறுப்பேற்க உள்ளார். இதற்கான விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடக்கிறது. காலை 11 மணிக்கு தொடங்கி 12 மணிக்குள் விழா முடிவடையும்.

முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு ஆளுநர் ரோசய்யா, பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். விழா முடிந்ததும் தலைமைச் செயலகத்துக்கு செல்லும் ஜெயலலிதா, முதல்வராக பொறுப்பேற்றுக் கொள்கிறார்.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக