வெள்ளி, 20 செப்டம்பர், 2013

புதிதாக 1,880 கம்ப்யூட்டர் பயிற்றுநர்கள் நியமனம் வரும் 2014 ஜனவரி 31-ம் தேதிக்குள்

அரசுப் பள்ளிகளில் தாற்காலிகமாக பணியாற்றி வந்த 1,440 கம்ப்யூட்டர்
பயிற்றுநர்களை பணி நீக்கம் செய்தது சரியானதே என சென்னை உயர்நீதிமன்றம்
தீர்ப்பளித்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய சிறப்புத் தேர்வில் இந்த கம்ப்யூட்டர்
பயிற்றுநர்கள் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெறவில்லை. எனவே,
அவர்களுக்கு பணியில் நீடிக்கும் தகுதியில்லை என நீதிமன்றம் தனது தீர்ப்பில்
தெரிவித்துள்ளது. 
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2,300-க்கும் அதிகமான கம்ப்யூட்டர் பயிற்றுநர்கள் 1999, 2000 ஆம் ஆண்டுகளில் தாற்காலிகமாக நியமிக்கப்பட்டனர். பல ஆண்டுகள் பணியாற்றிய பிறகும் இவர்கள்பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. எனவே, பணி நிரந்தரம் செய்யக்கோரி இவர்கள் வழக்குகளைத் தொடர்ந்தனர். இவர்களது வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆசிரியர் தேர்வு வாரியம்மூலம் இவர்களுக்கு சிறப்புத் தேர்வு நடத்த உத்தரவிட்டது. இந்த சிறப்புத் தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெறும் கம்ப்யூட்டர் பயிற்றுநர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் எனவும்உத்தரவிட்டது.
 இதனடிப்படையில் 2008-ல் நடைபெற்ற முதல் சிறப்புத் தேர்வில் 894 பேரும், இரண்டாவது தேர்வில் 125 பேரும், கடந்த டிசம்பரில் நடைபெற்ற மூன்றாவது தேர்வில் 15 பேரும் 50 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றனர். இந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத 1,440 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் 40-க்கும் மேற்பட்டோர் மனுதாக்கல் செய்தனர்.
 இந்த மனுக்கள் நீதிபதிகள் ஆர்.பானுமதி, கே.கே. சசிதரன் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: 
தமிழக அரசு 2,300-க்கும் அதிகமான கம்ப்யூட்டர் பயிற்றுநர்களை தாற்காலிகமாக பணி நியமனம் செய்வதில் தேவையற்ற அவசரம் காட்டியுள்ளது. எல்காட் நிறுவனம் பரிந்துரைத்த தனியார் நிறுவனங்கள் மூலம் நடத்தப்பட்ட இந்தத் தாற்காலிக கம்ப்யூட்டர் பயிற்றுநர்கள் நியமனத்தில்வெளிப்படைத்தன்மை இல்லை. இதனால் தாற்காலிகமாக பணி நியமனம் பெற்றவர்களுக்கும், நிரந்தர பணி நியமனத்துக்காக காத்திருப்போருக்கும் இடையே மிக நீண்ட சட்டப் போராட்டம் நடைபெற்று வந்துள்ளது. இவர்களை சிறப்புத் தேர்வு மூலம் பணி நிரந்தரம் செய்ய முடிவு எடுத்தவுடன் இந்தப் போராட்டம் தீவிரமடைந்து வழக்குகள்,
மேல்முறையீடுகள் என ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்தத் தேர்வுகளில் தேர்ச்சியடையாததன் மூலம் 1,440 பேரும் பணியில் நீடிக்கும் தகுதியை இழந்துள்ளனர். எனவே, அவர்களை அரசு பணி நீக்கம் செய்தது சரியான நடவடிக்கைதான். இவர்களது பெயர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மீண்டும் பதிவு செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு பதிவு மூப்பு மீண்டும் வழங்கப்பட வேண்டும். புதிதாகத் தேர்வு செய்யப்பட உள்ள 1,880 கம்ப்யூட்டர் பயிற்றுநர்கள் நியமனத்தில் இப்போதுள்ள நடைமுறையையே அரசு பின்பற்ற வேண்டும். புதிய பணி நியமனத்துக்கு இந்த 1,440 பேரும் விண்ணப்பிக்கலாம். எனினும்
அவர்கள் இந்த நியமனத்தில் எந்தவிதமான முன்னுரிமையையும் கோர முடியாது. தகுதியின் அடிப்படையில் வயது வரம்பை தளர்த்துமாறு அவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தை அணுகலாம். புதிதாக 1,880 கம்ப்யூட்டர் பயிற்றுநர்கள் நியமனம் வரும் 2014 ஜனவரி 31-ம்
தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக