வியாழன், 26 செப்டம்பர், 2013

TRB PG TAMIL NEWS UPDATE IN DETAIL :தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்துவது குறித்து மீண்டும் அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றமதுரை கிளை உத்தரவிட்டுள்ளது

முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வில், எழுத்துப் பிழையான கேள்வித்தாள்
இருந்த தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்துவது குறித்து மீண்டும் அரசின்
கருத்தை அறிந்து தெரிவிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றமதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

மறுதேர்வு நடத்துவது தொடர்பாக சில யோசனைகளைத் தெரிவித்த
நீதிபதி எஸ்.நாகமுத்து, இந்த உத்தரவைப் பிறப்பித்தார். இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மறுதேர்வு நடத்துவது குறித்து அரசின்கருத்தை அறிந்து தெரிவிக்குமாறு உத்தரவிட்டிருந்தார். மொத்தம் உள்ள 150 கேள்விகளில், பிழையான 40 கேள்விகளை நீக்கிவிட்டு 110 மதிப்பெண்களுக்கு மதிப்பீடு செய்வதாக செவ்வாய்க்கிழமை நடந்த விசாரணையின்போது அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் புதன்கிழமை இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். 

இந்நிலையில், புதன்கிழமை விசாரணையின்போது மறுதேர்வு நடத்துவதற்கான
சாத்தியக்கூறுகள் குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார். தேர்வு நடத்தப்பட்ட 150 கேள்விகளில், பிழையாக உள்ள 40 கேள்விகளை நீக்கிவிட்டு 110 மதிப்பெண்களுக்கு மதிப்பீடு செய்வதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், பிழையான 40 கேள்விகளுக்கு சரியான பதிலை அளித்திருப்பவரின் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும். இவ் வழக்கில் அளிக்கப்படும் உத்தரவு, தேர்வு எழுதியவர்களில் ஒரு நபருக்குக் கூட பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. மாற்று கேள்வித்தாள் தயாராக உள்ளது; அதை அச்சிடுவதற்கு 4 வாரங்கள் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுதேர்வு நடத்தப்படும் நிலையில், கேள்வித்தாள் அச்சிடுவது, தேர்வு நாள் குறித்து அறிவிப்பு வெளியிடுவது மட்டுமே செய்ய வேண்டியுள்ளது. ஏனெனில், ஏற்கெனவே நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இப்போதைய சூழலில் 110
மதிப்பெண்களுக்கு மதிப்பீடு செய்வது என்றாலும், உடனடியாகச் செய்துவிட
முடியாது. அதற்கும் கால அவகாசம் தேவைப்படும். ஆகவே, மேற்குறிப்பிட்ட தகவல்களைக் கூறி, மறுதேர்வு நடத்துவது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்குமாறு அரசுத் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கின் விசாரணை திங்கள்கிழமைக்கு (செப்.30) ஒத்தி வைக்கப்பட்டது.
விசாரணையின்போது ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்கள் அறிவொளி, தங்கமாரி ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக