1. புத்தகச் சுமை 2. பாடச் சுமை 3. பரீட்சைச் சுமை.
இவை பற்றி நமது ஊடகங்களில் பலர் அலசி ஆராய்ந்து நல்ல கருத்துகளையும் கூறியுள்ளனர். ஆனால் கல்வி முதலாளிகள் இவை பற்றிக் கவலைப்படுவதில்லை. அரசுப் பள்ளிகள் பல்வேறு குறுக்கிடுகளால் செயல்திறன் குறைந்து உள்ளன. இன்றைக்கு நாம் இவை பற்றி நிறையவே எழுதி வருகிறோம். இதில் வியப்பில்லை.
நமது பள்ளிப் பிள்ளைகளுக்கு பாரதியின் வரிகளான "காலை முழுதும் படிப்பு, மாலை முழுதும் விளையாட்டு' என்பது கற்பனையில்தான் உண்டு. அப்படியே நேரம் கிடைத்தாலும், அது கைபேசியிலும், வலைதளத்திலும் கழிந்து விடுகிறது. இன்று உள்ள பள்ளிப் பிள்ளைகள் - குறிப்பாக மெட்ரிக் பள்ளிப் பிள்ளைகள் - மிகுந்த தீவினை செய்தவர்களாக இருக்க வேண்டும். காலை சுமார் 7 மணிக்கு சென்றால் இரவு 9 மணிக்குத்தான் வருகிறார்கள். இந்த நேரத்தில் இவர்கள் படிப்பது என்பது வினாக்களுக்குரிய விடைகளைப் பாராமல் படிப்பது மட்டுமே ஆகும். இது சுயசிந்தனையை பாதிக்கிறது. கற்பனா சக்தியை மழுங்கடிக்கிறது. இந்த மனப்பாடம் பண்ணும் முறையை அன்று விஞ்ஞான பாடம் பற்றி எழுதும்பொழுது கல்கி பின்வருமாறு எழுதுகிறார்.
"நமது கலாசாலைகளில் இன்று வரை போதிக்கப்பட்டு வரும் விஞ்ஞானம் என்பது ஏட்டுச் சுரைக்காய் விஞ்ஞானமாகவே இருந்து வருகிறது. விஞ்ஞானப் பாடப் புத்தகங்களை பொட்டை நெட்டுருச் செய்து பரீட்சையில் எழுதி பாஸ் செய்வதுதான் விஞ்ஞானப் படிப்பின் நோக்கமாகவும் முடிவாகவும் இருந்து வருகிறது'.
இது எல்லாப் பாடங்களுக்கும் பொருந்தும். இன்று மெட்ரிக் பள்ளிகளில் கணக்குப் பாடத்தினையும் பாராமல் படிக்க வைக்கும் அவலத்தினைக் காண்கிறோம். கணக்கில் உள்ள மாதிரிகளைப் பாராமல் படிக்க வைத்து, பின்னர் அதற்கான நோட்ஸில் உள்ள அனைத்து கணக்கிற்கான வகை முறைகளைப் பாராமல் படிக்கச் சொல்கிறார்கள். சில பள்ளிகளில் வீட்டுப் பாடம் என்ற பெயரால் 50 கணக்குகளை நோட்ûஸப் பார்த்து எழுதி வர வேண்டும் என்று கூறுகிறார்கள்.
அடுத்தபடியாக, கல்கியின் கவனம் பாடப் புத்தகச் சுமையின் மீது செல்கிறது. ஜூன் மாதம் பள்ளிக்கூடம் திறந்தவுடன் புத்தகங்கள் வாங்குவதற்கு பெற்றோர்கள் படும் பாட்டை அவருக்கே உரித்தான முறையில் விவரிக்கிறார்.
"சிறுவர்களும், சிறுமிகளும், பச்சிளம் பாலகர்களும் புத்தகங்களையும், நோட்டுக்களையும் சுமந்து கொண்டு பள்ளிக்கூடங்களுக்குப் போகும் பரிதாபக் காட்சியை வீதிகளில் காணலாம்.
சாதாரண பத்து வயதுச் சிறுவன் ஒருவன் எட்டுப் பாடப் புத்தகங்களும், பன்னிரண்டு நோட்டுப் புத்தகங்களும் எடுத்துக்கொண்டு போவான். பதினாலு வயதுப் பெண் ஒருத்தி பன்னிரண்டு புத்தகங்களும் பதினெட்டு நோட்டுகளும் எடுத்துக்கொண்டு போவாள். இவை தவிர அட்லஸ், மட்டப் பலகை, பேனா, பென்ஸில், ரப்பர், மைக் கூடு, ஜியாமெட்ரி கருவிகள் உள்ள பெட்டி, வர்ணப் பெட்டி, புருஷ் இவ்வளவும் கொண்டு போக வேண்டும். விளக்குமாறு ஒன்றுதான் பாக்கி.
இங்கிலீஷுக்கு, தமிழுக்கு, பூகோளத்துக்கு, கணக்குக்கு, இலக்கணத்துக்கு ஸயன்ஸýக்கு என்று தனித்தனி பாடப் புத்தகங்கள். நான் டீடெயில் அல்லது ஸப்லிமென்டரி எனப்படும் பாடப் புத்தகங்கள். அந்தந்தப் புத்தகங்களில் உள்ள பாடங்களுக்கு அர்த்த வியாக்னம், விரிவுரை, பரீட்சைகளில் வரக்கூடிய கேள்வி பதில்கள் அடங்கிய நோட்ஸ்கள்.
எதற்காக? ஏழைப் பெற்றோர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்வதற்காக; இரவும், பகலும் நெட்டுருப் பண்ணி, உருப் போட்டு, மூளையைக் கெடுத்துக் கொண்டு குட்டிச்சுவராய் போவதற்காக'' இது எழுதப்பட்ட ஆண்டு 1948. இது இன்றும் பொருந்துவதைக் காணலாம்.
அடுத்து கல்கியின் கவனம் பாடப் புத்தகங்களைப் பிரசுரித்தல், தேர்வு செய்தல் ஆகியவற்றின் மீது திரும்புகிறது. இன்று நடப்பதை அவர் அன்றே சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் கூறுகிறார்: "பாடப் புத்தகக் கமிட்டியில் உள்ள அங்கத்தினருக்கு வேண்டியவர்கள் சிலர் பாடப் புத்தகங்களைத் தயாரிப்பார்கள்... அங்கத்தினர்கள் "இவர் நம்முடைய மனிதர் இவருக்கு ஒன்று போடுங்கள்'... என்ற முறையில் பாடப் புத்தகங்களை அங்கீகரித்து விடுவார்கள்'. பாடப் புத்தகங்களை விற்பதில் லஞ்சம் தாண்டவமாடுவது பற்றி கல்கி கூறுகிறார். "ஒரு பாடப் புத்தகக் கம்பெனிக்கு ஒரு லட்ச ரூபாய் கிடைத்தால் லாபம் போக ஐம்பதினாயிரம் மிஞ்சுகிறது. இந்த ஐம்பதினாயிரம் என்னவாயிற்று' என்று கல்கி கேட்கிறார். அதற்கு அந்த கம்பெனிக்காரர் அளிக்கும் பதிலை கல்கி கீழே தருகிறார்.
"அங்கங்கே பாடப் புத்தகம் விற்கும் கடைக்காரர்களுக்கு 100க்கு 15 வீதம் கமிஷன் கொடுப்போம். பாக்கி முப்பத்தையிரமும் நாலாபுரமும் ஆள்கள் அனுப்புவதற்கும், ஜில்லா போர்டு நகரசபை மெம்பர்களைப் பார்த்து சரிக்கட்டுவதற்கு சரியாய்ப் போய்விடும்'.
இன்றும்கூட இது சரியாக இருப்பதைக் காணலாம். மெட்ரிக் பள்ளிகளில் பாடப் புத்தகங்களை விற்க, கம்பெனிகளும் பள்ளிகளும் சேர்ந்து செய்யும் காரியங்கள் ஊரறிந்த ரகசியமாக இன்று உள்ளது. இதனை விவரிக்கத் தேவையில்லை.
கல்கியின் சிந்தனை போதானா மொழி பற்றித் திரும்புகிறது. இதில் அவர் தமிழ்தான் பயிற்சிமொழியாக இருக்க வேண்டும் என்று தெளிவாக உள்ளார். இதனை ஒரு சம்பவம் மூலம் விளக்குகிறார்.
"சென்ற 1947ஆம் வருஷத்தில் ஒரு ஹைஸ்கூலில் நடந்த பரிசு வழங்கும் வைபவத்துக்குப் போயிருந்தேன். ஒவ்வொரு வகுப்பிலும் முதலாவதாகவும், இரண்டாவதாகவும் தேறிய பிள்ளைகளைப் பெயர் சொல்லி அழைத்தார்கள். பிள்ளைகள் ஒவ்வொருவராய் மேடைக்கு வந்து பரிசு பெற்றுக் கொண்டு போனார்கள். அவர்களைப் பார்த்தபோது ஒரு குரல் அழலாம் என்று எனக்குத் தோன்றியது... இவர்கள் மகா மோசமாயிருந்தார்கள். காற்று அடித்தால் கீழே விழுந்து விடக்கூடிய அவ்வளவு திடகாத்திரம். உருவத்தைப் பற்றியோ சொல்ல வேண்டியதில்லை. "கல்லிவர்ஸ் ட்ராவல்ஸ்' என்ற புத்தகத்தில் வரும் "லில்லி புட்டு'கள் போல் அங்குஷ்டப் பிரமாணமாயிருந்தார்கள்...
பரிசு பெற்ற சுமார் முப்பது பிள்ளைகளில் ஒரே ஒரு பையன் ஆஜானுபாகுவாயும் திடமானவனாகவும் இருந்தான். அவனுடைய பெயர் அபுபக்கர் என்று சொன்னார்கள். அவனுடைய தகப்பனாரும், பாட்டனாரும் இங்கிலீஷ் பள்ளிக்கூடத்தில் படித்ததில்லை. அதனால் அவன் அப்படி இருந்தான். இந்தக் கல்வி முறையால் பேரப் பிள்ளைகளும் க்ஷீணித்துச் சோனிகளாகி விடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. நிலத்தை வளப்படுத்துவதற்கு இரண்டு வகை உரங்கள் உண்டு. ஒன்று, இயற்கை அளிக்கும் உரங்கள்... இன்னொரு வகை உரம், ரசாயன செயற்கை உரம்... ஆங்கிலேயர் ஏற்படுத்திய கல்விமுறை இந்திய நாட்டுக்கு ரசாயன உரத்தைப் போல் பயன்பட்டிருக்கிறது.. நாளாக ஆக ரசாயன எருவின் தீங்கு வெளியாகத் தொடங்கியது. மேதாவிகள் தோன்றிய இடத்தில் மந்த புத்தியாளர்கள் தோன்றினார்கள்'.
பிள்ளைகளை படிப்பு என்ற பெயரால் கட்டாயப்படுத்தி அவர்களைச் சித்திரவதை செய்யும் முறையை அவர் கண்டித்தார். இந்தக் கொடுமைகளை அவருக்கே உரித்தான வழியில் அவர் விளக்குகிறார். இந்தக் காலத்து பள்ளிகள் நடத்துபவர்களை அவர் கம்சனுக்கு ஒப்பிடுகிறார்.
"கம்சனுக்கு குழந்தைகள் மீது துவேஷம் ஏற்படுவதற்கும், குழந்தைகளை எல்லாம் கொன்றுவிடுமாறு அவன் கட்டளை போடுவதற்கும் ஏதோ ஒரு காரணம் இருந்தது...
ஆனால் இந்தக் காலத்து கம்ஸமார்களுக்கும் அவர்களுடைய தூதர்களுக்கும் அத்தகைய காரணம் எதுவுமே இல்லை.அவர்கள் யார் என்று கேட்டால் பள்ளிக்கூடங்களில் படிக்கும் பாடத்திட்டங்களை வகுப்பவர்களும், வகுத்த பாடத் திட்டங்களுக்கு ஏற்ப புத்தகங்களை எழுதுபவர்களும்தான். நாம் இவர்களுடன் இனி பள்ளிக்கூடங்களை நடத்துபவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம்'.
கல்கி இன்றைய கல்வி முறை பற்றி ஒரு சூடான விமர்சனத்தினை முன்வைக்கிறார். இது 1947-ம் ஆண்டு எழுதப்பட்டது. இது இன்றும் பொருந்தும்.
"தற்சமயம் நமது நாட்டுக் கலாசாலைகளிலும் பள்ளிக்கூடங்களிலும் அளிக்கப்படும் கல்வி பெரும்பாலும் ஏட்டு வகையைச் சார்ந்தது. பிற்கால வாழ்க்கையில் சிறிதும் பயன்பட முடியாத உபயோகமற்ற குப்பை கூளங்கள் நமது சின்னஞ்சிறு குழந்தைகள் மூளையிலும், இளம் பிராய வாலிபர்கள் மூளையிலும் திணிக்கப்படுகின்றன. இதனால் 100க்கு 99 குழந்தைகளின் மூளை வற்றி வறண்டு போகின்றன. அவர்கள் சுயமாக, ஆராய்ச்சி செய்யும் சக்தியையும் இழந்து விடுகிறார்கள்.''
கல்கியின் விமர்சனங்கள் சிந்திக்கப்பாலவை. இதனால்தானோ என்னவோ மற்றொரு மேதையான ஷேக்ஸ்பியரும் அந்தக் காலத்திலேயே கூறியுள்ளார். "முதுகில் பைக் கட்டுடன் நத்தை போல் ஊர்ந்து செல்லும் பள்ளிப் பிள்ளை'.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக