திங்கள், 13 ஜனவரி, 2014

தமிழ்மொழி உங்களை கைவிடாது : விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை


.
 பொங்கல்விழா ஈரோடு மாவட்டம் கோபி அருகே கொளப்பலூரில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் பொங்கல்விழா மற்றும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது. விழாவில் இந்திய தொலை உணர், அறிவியல் செயற்கைக்கோள்களின் தலைமை திட்ட இயக்குனரான விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
 வாழ்க்கையில் முன்னுக்கு வருவதற்கு சரியான கேள்விகளை கேட்கவேண்டும். அதற்கு பதில் கிடைத்தால் அது ஒரு கண்டுபிடிப்பாக மாறுகிறது. பல்வேறு நாடுகள் நிலவை ஆய்வு செய்ததில், குறிப்பிட்ட இடங்களில் உள்ள கற்களை மட்டும் எடுத்து சோதனை செய்து நீர் இல்லை என்று தெரிவித்தன. ஒரு இடத்தில் தண்ணீர் இல்லாமல் மற்றொரு இடத்தில் இருக்கலாம் என்ற கேள்வி எங்களுக்குள் எழுந்தது. அதைத்தொடர்ந்து, சந்திராயனை அனுப்பிய இந்தியா, நிலவை முழுமையாக ஆய்வு செய்தது. அப்போது நிலவில் நீர் உள்ளதை நிரூபித்தது சந்திராயன் மட்டும்தான்.

 இவ்வாறு கேள்விகள் மனதில் எழுவதற்கு என்னை சுயமாக சிந்திக்க வைத்தது என் தாய்மொழியான தமிழ்மொழிதான். வெளிநாட்டினருக்கு கிடைக்காத பொக்கிஷமான தமிழ்மொழி நமக்கு கிடைத்திருக்கிறது. தாய்மொழியில் படித்ததால் மட்டுமே இந்த அளவுக்கு உயர்ந்து உள்ளேன். தமிழ்மொழி உங்களை கைவிடாது. நீங்கள் மட்டும் தமிழ்மொழியை கைவிட்டு விடாதீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

 விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:– கடந்த ஆண்டு செவ்வாய் கிரகத்தை நோக்கி மங்கள்யான் விண்கலம் ஏவப்பட்டது. அது 11 மில்லியன் கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து திட்டமிட்ட பாதையில் செல்கிறது. வருகிற செப்டம்பர் மாதம் 24–ந் தேதி செவ்வாய் கிரகத்தை சென்றடையும். அப்போது 200 மில்லியன் கிலோமீட்டர் தூரம் அது பயணம் செய்திருக்கும். அங்கு மீத்தேன் வாயு, தண்ணீர் உள்பட 5 வகையான ஆய்வுகளை மேற்கொள்ளும்.
 அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்பி உள்ளது. ஆனால் அமெரிக்கா 6– வது முறையும், ரஷ்யா 11–வது முறையும், ஐரோப்பா பல்வேறு முயற்சிகளுக்கு பின் வெற்றி பெற்றது. சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் தோல்வியை தான் தழுவின.
 மங்கள்யான் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்துவிட்டால் முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தை ஆய்வுமேற்கொண்ட ஒரே நாடு இந்தியா என்று பெயர் கிடைக்கும். கையருகே திங்கள், செவ்வாய் வந்ததுபோல் ஞாயிறு வரவேண்டும் என்பதே இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் அடுத்த இலக்கு ஆகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக