புதன், 24 பிப்ரவரி, 2016

10 ஆயிரம் பெண் குழந்தைகளுக்கு ரூ.200 கோடி நன்கொடை: குஜராத் வைர வியாபாரி லால்ஜிபாய் படேல் தாராளம் பிரதமர் மோடியின் சர்ச்சைக்குரிய கோட் ஆடையை ஏலம் எடுத்த தொழிலதிபர், நாடு முழுவதும் உள்ள 10 ஆயிரம் பெண் குழந்தை களின் வாழ்வாதாரத்துக்காக ரூ.200 கோடி நன்கொடை வழங்க முன்வந்துள்ளார்.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடந்த ஆண்டு நடந்த குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக இந்தியா வந் திருந்தார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி தனது முழு பெயர் பொறித்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள கோட் அணிந்து வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து அந்த கோட் ஏலம் விடப்பட்டது. குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரியும், தொழிலதிபருமான லால்ஜிபாய் படேல் என்கிற பாட்ஷா என்பவர் ரூ.4.31 கோடிக்கு அதை ஏலத்தில் எடுத்தார். இந்த தொகை கங்கை நதி தூய்மை திட்டத்துக்கும், பெண் கல்விக்காகவும் செலவிடப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், பிரதமர் மோடி அணிந்த கோட் ஆடையை ஏலத் தில் எடுத்த அந்த வைரவியாபாரி படேல் நேற்று திடீரென 10 ஆயிரம் பெண் குழந்தைகளுக்காக ரூ.200 கோடி நன்கொடை வழங்கப் போவதாக அறிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் வாத்ஸல்யா கிராம அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று படேல் யாரும் எதிர்பாராத சமயத்தில் மேற்கூறிய அறிவிப்பை வெளியிட்டார்.

மேலும் அவர், ''வரும் மார்ச் 13-ம் தேதி குஜராத்தின் சூரத் நகரில் இந்த திட்டத்தை அறிமுகம் செய்து வைக்கப் போகிறேன். இதற்காக நாடு முழுவதும் இருந்து 10 ஆயிரம் பெண் குழந்தைகள் தேர்ந்தெடுக் கப்பட்டு, அவர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நன்கொடை வழங்கப் படும். இதன் மூலம் அந்த பெண் குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் திருமண வாழ்க்கை பிரச்சினை இல்லாமல் இருக்கும். பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் என்ற மத்திய அரசின் விழிப்புணர்வு திட்டத்துக்கு, என்னால் முடிந்த பங்களிப்பாக இந்த தொகையை ஒதுக்கியுள்ளேன்'' என்றார்.

ஏற்கெனவே, பெண் குழந்தை களுக்காக பல்வேறு நன்கொடை களை படேல் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.