செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்

தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் தாக்கல் செய்தார். மாநில பேரிடர் நிவாரண நிதியத்துக்கு ரூ.713 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஜனவரி 20-ம் தேதி தொடங்கியது. பேரவையில் ஆளுநர் கே.ரோசய்யா உரையாற்றினார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 3 நாட்கள் விவாதம் நடந்தது. விவாதங்களுக்கு பதில் அளித்து முதல்வர் ஜெயலலிதா 22-ம் தேதி உரையாற்றினார். அத்துடன் தேதி குறிப்பிடப்படாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

வழக்கமாக, ஆளுநர் உரையைத் தொடர்ந்து பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும். ஆனால், பொதுத் தேர்தல் நடக்கவுள்ளதால் இப்போது முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்கும் வரையிலான அரசின் செலவுகளுக்கு நிதி ஒதுக்கும் வகையில், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அடுத்து அமையும் புதிய அரசு, முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.

இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதாகக் கூறினார்.

தமிழக இடைக்கால பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்:

* காவல்துறைக்கு ரூ.6099 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

* தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.32.74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

* மாநில பேரிடர் நிதியத்துக்கு ரூ.713 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

* தீயணைப்பு துறைக்கு ரூ.227 கோடி நிதி ஒதுக்கீடு.

* சிறைச்சாலை துறைக்கு ரூ.281 கோடி நிதி ஒதுக்கீடு.

* வேளாண்துறைக்கு ரூ.6938.57 கோடி நிதி ஒதுக்கீடு.

* நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.8,486.26 கோடி ஒதுக்கீடு.

* மின்சாரதுறைக்கு ரூ.13,819.03 கோடி நிதி ஒதுக்கீடு.

* போக்குவரத்துத் துறைக்கு ரூ.1590 கோடி நிதி ஒதுக்கீடு.

* குறு, சிறு, நடுத்தர தொழில்துறைக்கு ரூ.348 கோடி நிதி ஒதுக்கீடு.

* ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ.18,500 கோடி நிதி ஒதுக்கீடு.

* மீன்வளத்துறைக்கு ரூ.742.99 கோடி நிதி ஒதுக்கீடு.

* பால்வளத்துறைக்கு ரூ.119.62 கோடி நிதி ஒதுக்கீடு.

* கால்நடைத்துறைக்கு ரூ.1188.88 கோடி நிதி ஒதுக்கீடு.

* நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.12,194.21 கோடி நிதி ஒதுக்கீடு

* குடிநீர் வழங்கல் திட்டங்களுக்காக ரூ.1802 கோடி நிதி ஒதுக்கீடு.

அவிநாசி - அத்திக்கடவு திட்டம் அறிவிப்பு:

அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசுக்கு திருத்திய கருத்து அனுப்பப்படும். திட்டத்துக்கான ஆரம்பக்கட்டப் பணிகள் உடனடியாக தொடங்கப்படும் என பன்னீர்செல்வம் அறிவித்தார்.