வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

ரூ.251க்கு மலிவு விலை போன் கிடைக்கும்?வாய்ப்பே இல்லை!-இந்திய செல்லுலார் சங்கம்.

ரூ.251க்கு மலிவு விலை போன் கிடைக்கும் என...... முன்பதிவு முடங்கினாலும் நிறுவனம் உறுதி புதுடில்லி: உலகின், மிக மலிவான, 'பிரீடம் 251' என்ற, ஸ்மார்ட் மொபைல் போன் குறித்து, பல்வேறு தரப்பினர் சந்தேகங்களை எழுப்பியுள்ள நிலையில், 'திட்டமிட்டபடி, 251 ரூபாய்க்கு மொபைல் போனை வழங்குவோம்' என, அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, நேற்று, போனுக்கான முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களிலேயே, வினாடிக்கு, ஆறு லட்சம் பேர் முயற்சித்ததால் இணையதளம் முடங்கியது. டில்லியை அடுத்துள்ள நொய்டாவை தலைமையிடமாக வைத்து, 'ரிங்கிங் பெல்ஸ்' நிறுவனம், 251 ரூபாய் விலை உடைய, ஸ்மார்ட் மொபைல் போனை, நேற்று முன்தினம் அறிமுகம்
செய்தது.
நான்கு மாதத்துக்குள்... : நேற்று காலை, 6:00 மணிக்கு முன்பதிவு துவங்கியது. 'முன்பதிவு செய்தவர்களுக்கு, நான்கு மாதத்துக்குள் மொபைல் போன் அனுப்பி வைக்கப்படும்' என, அந்த நிறுவனம் அறிவித்திருந்தது. நேற்று காலை, முன்பதிவு துவங்கிய, சில நிமிடங்களிலேயே, அதன் இணையதளம் முடங்கியது. 'வினாடிக்கு, ஆறு லட்சம் பேர் முயற்சி செய்ததால், முன்பதிவு செய்ய முடியவில்லை. இந்த தொழில்நுட்ப பிரச்னையை சரி செய்வதற்கு, 24 மணி நேரம் ஆகும்; அதற்கு பின், மீண்டும் முன்பதிவு துவங்கும்' என, ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சாத்தியக்கூறுகள்: மலிவு விலைக்கு மொபைல் போன் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, மொபைல் போன் தயாரிப்பு சங்கங்கள் சந்தேகங்களை கிளப்பிஉள்ளன. ஆனாலும், 'திட்டமிட்டபடி, 251 ரூபாய்க்கு மொபைல் போனை வழங்குவோம்' என, ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

மேக் இன் இந்தியாவா; மேட் இன் சீனாவா? *''சார்ஜர் மற்றும் கம்ப்யூட்டருடன் இணைக்கக் கூடிய கேபிள் போன்ற பொருட்களே, 250 ரூபாய்க்கும் அதிகமான விலையில் தான் விற்கப்படுகின்றன. இது போன்ற சூழ்நிலையில், அதிக வசதிகள் உடைய மொபைல் போனை, இந்த விலைக்கு விற்பது சாத்தியமல்ல,'' என, பிரபல தொழில்நுட்ப பத்திரிகையாளர் அசீம் மன்சந்தா கூறினார்.

*பிரீடம் 251 அறிமுக விழாவில் பங்கேற்ற பத்திரிகையாளர்களுக்கு, அதன் மாதிரி காண்பிக்கப்பட்டது. சீனாவில் தயாரிக்கப்படும், 4,000 ரூபாய் விலையுள்ள, 'ஆட்காம் ஐகான்-4' என்ற ஸ்மார்ட்போனை போலவே, இந்த மொபைல் இருப்பதாக, மூத்தபத்திரிகையாளர்கள் கூறினர்.
* 'மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், இந்த மொபைலை தயாரிப்பதாக, ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. மேக் இன் இந்தியா என்ற பெயரில், 'மேட் இன் சீனா' பொருளை, இந்தியாவில் விற்க நடக்கும் சதியாக இது இருக்கலாம்' என, தொழில்நுட்ப வல்லுனர்கள் கூறினர்.l
'டேடாவிண்ட் என்ற நிறுவனம், உலகிலேயே மிகவும் விலை குறைந்த, 'ஆகாஷ் டேப்லட்'களை, இந்தியாவில், 2,500 ரூபாய்க்கு தருவதாக அறிவித்திருந்தது. 40 லட்சம் பேர் முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்தனர். ஆனால், 2.5 லட்சம் பேருக்கு மட்டுமே இந்த டேப்லட் கிடைத்தது; அதுவும் தரமில்லாததாக இருந்தது. பழுதானால், சரி செய்யக் கூடிய வசதியையும் அந்த நிறுவனம் செய்யவில்லை. அது போன்ற, மோசடியாக, இந்த புதிய மொபைல் நிறுவனத்தின் அறிவிப்பு இருக்கலாம்' என்ற சந்தேகத்தையும் சிலர் எழுப்பியுள்ளனர்.
வாய்ப்பே இல்லை: சங்கம் எதிர்ப்பு 'ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளபடி, 251 ரூபாய்க்கு, ஸ்மார்ட் மொபைல் போனை விற்கவே முடியாது; இது குறித்து, மத்திய அரசு விசாரிக்க வேண்டும்' என, மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு, இந்திய செல்லுலார் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.சங்கத் தலைவர் பங்கஜ் மோகிந்த்ரூ எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:இந்தியாவில், மொபைல் போன் தயாரிப்புக்கென, அரசு எந்தவித மானியமோ, சலுகையோஅளிப்பதில்லை. 3,500 ரூபாய்க்கும் குறைவான விலையில், ஸ்மார்ட் மொபைல் போன்களை விற்க முடியாது.இந்த நிறுவனம், இதுவரை மொபைல் தயாரிப்பில் ஈடுபட்டதில்லை. '251 ரூபாய்க்கு மொபைல் போன்' என அறிவிப்பு வந்ததுமே, பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. இது குறித்து தொலைத்தொடர்பு துறை தீவிரமாக ஆராய வேண்டும்.