திங்கள், 25 நவம்பர், 2013

நீங்களும் ஜெயிக்கலாம் :குடும்பத்தினர் கனவுகளை மனதில் நிறுத்தி படியுங்கள்'

தேர்வில் நேரம் போதாது என்பதற்கு கவனச் சிதறலே காரணம்; குறுக்கு வழியில் ஜெயிக்க நினைக்காமல், நேர்மையாக உழைத்து முன்னேற வேண்டும். குடும்பத்தினர், ஆயிரம் ஆயிரம் கனவுகளுடன் உள்ளனர். அதை மனதில் நிறுத்தி படியுங்கள்; வாழ்வில் ஜெயிக்கலாம்,'' என, கல்வியாளர் ரமேஷ்பிரபா பேசினார்.

"
தினமலர்' நாளிதழ் சார்பில், பிளஸ் 2 மாணவர்களுக்கான, "ஜெயித்துக்காட்டுவோம்' நிகழ்ச்சி, சென்னை பல்கலை நூற்றாண்டு அரங்கில் நடந்தது. இதில், கல்வியாளர் ரமேஷ் பிரபா பேசியதாவது: பிளஸ் 2, வாழ்வில் முக்கிய காலகட்டம். பிளஸ் 2 வந்ததும், நீங்கள் பரபரப்பானீர்களோ இல்லையோ, உங்களைச் சுற்றியுள்ளோர், "நீ பிளஸ் 2; இதில் தான், உன் எதிர்காலமே இருக்கிறது' எனக்கூறி, பரபரப்பாகி விடுவர். நவம்பர் வந்ததும், தேர்வுக்கு மூன்று மாதமே இருப்பதால், லேசான படபடப்பு வந்து, எப்படியும் படித்துவிடுவோம் என, வந்துள்ளீர்கள். இந்த தேர்வில், நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. தேர்வை அணுகும் விதத்தில் குளறுபடிகள் ஏற்பட்டால் பாதிப்பு வரலாம். இதில், கவனமாக இருக்க வேண்டும். ஐந்து ஆண்டு வினாத் தாள்களை எடுத்து ஆலோசிப்பது நல்லது.இந்த ஆண்டில் இந்த கேள்வி கேட்டதால், இந்த முறை இந்த கேள்வி வரும், வராது என, அதை வைத்து ஜோதிடம் பார்க்கக்கூடாது. வினாத்தாளில், வேண்டாம் என விட்ட கேள்வி வந்தால், பதற்றம் வந்து, படித்த, 95 சதவீதமும் காலியாகிவிடும். தேர்வு மையத்திற்கு சீக்கிரம் செல்வது நல்லது. படித்த அதே நினைவுகளோடு தேர்வு எழுதச் சென்றால் வெற்றிகரமாக அமையும். நண்பர்களோடு, அதைப் படித்தாயா, இதைப்படித்தாயா என, ஆலோசிப்பது மனரீதியாக பாதிப்பை ஏற்படுத்தலாம். தேர்வு நேரத்தை எப்படி சரியாக பயன்படுத்துகிறோம் என்பதில் தான், நம் எதிர்காலமே உள்ளது. நேரம் போதாது என்பதற்கு, கவனச்சிதறல் தான் காரணம். குறுக்கு வழியில் ஜெயிப்பது என்ற எண்ணம் கூடாது. நேர் வழியில், உழைத்து ஜெயிக்க வேண்டும்; அதுதான் சரியான அணுகுமுறை. தேர்வு முடிவுக்காக உயிரை மாய்த்துக்கொள்வது; எதிர்பார்த்த மார்க் வரவி"ல்லை என, தற்கொலை செய்து கொள்வது என்பதெல்லாம் கோழைத்தனம். விலை மதிப்பற்ற உயிரை, பேப்பருடன் ஒப்பிடக்கூடாது. தோற்றாலும் ஒரு மாதத்தில், மறு தேர்வு எழுத வாய்ப்பு உள்ளது என்ற, பக்குவம் வர வேண்டும். நீங்கள் நல்லவர்களாக இருக்க முயற்சித்தாலும், சினிமா போன்ற ஊடகங்கள், நீங்கள் திசை மாற காரணமாகிறது. விடலைப் பருவம் எது சரி, தவறு என, கணிக்க முடியாத வயது. இந்த காலகட்டத்தை பாதுகாப்பாக கடந்து விட்டால், வாழ்வில் ஜெயிப்பது எளிதாகிவிடும். எது காதல் என நினைக்கிறாயோ, அது காதல் அல்ல; அது தோற்றம் சார்ந்தது. அறிவுக்கும், உணர்ச்சிக்கும் வித்தியாசம் உண்டு. இதை உணர வேண்டும். உங்களைச் சுற்றி, உங்கள் குடும்பத்தினர் ஆயிரம், ஆயிரம் கனவுகளை சுமந்துள்ளனர். பல குடும்பங்களில் பொருளாதார சிக்கல் உள்ளது. படித்து, குடும்பத்தை மேம்படுத்துவாய் என, நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த கனவுகளை மனதில் வைத்து, நல்ல மதிப்பெண், அடுத்து பட்டப்படிப்பு; பட்ட மேற்படிப்பு; நல்ல வேலை; முதல் சம்பளத்தில், அம்மாவிற்கு சேலை; அப்பாவிற்கு முதல் வேட்டி வாங்கிக் கொடுக்க வேண்டும் என, நினையுங்கள். தவறான சிந்தனை வரும்போது என் குடும்பம், என் வீடு என்ற நினைப்பு வரட்டும். தனியாக இருப்பதை தவிர்த்து, அதன் ஒரு பகுதியை, நல்ல நண்பர்களோடும், மற்றொரு பகுதியை, குடும்பத்தோடும் செலவிடுங்கள். வாழ்வில் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.
டி.வி.ஆர்., பதக்கம் பெற்ற மாணவிகள் : பிளஸ் 2 கலைப்பிரிவில், கடந்த ஆண்டில் திருவள்ளூர் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற, பூஜா எஸ் குமாரிக்கு, "தினமலர்' நிறுவனர் டி.வி.ஆர்., உருவம் பொறித்த, வெள்ளி பதக்கமும், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் எழுதிய, "திருப்பு முனைகள்' என்ற, புத்தகத்தையும், கல்வியாளர் ரமேஷ் பிரபா வழங்கினார். சென்னை மாவட்டத்தில் முதலிடம் பெற்ற, எஸ்.திவ்யா, இரண்டாமிடம் பெற்ற, ஸ்ரீலட்சுமிக்கான வெள்ளி பதக்கம் மற்றும் பரிசு புத்தகத்தையும், அவரது பெற்றோர் பெற்றுக் கொண்டனர்.
காலை நேரத்தில் நடந்த அறிவியல் பிரிவு நிகழ்ச்சியின் போது, வேலம்மாள் மெட்ரிக் பள்ளி மாணவி ஸ்ருதி, வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி மாணவன், சையத் சல்மானும் மேடையேறினர். நட்பு, தாய்மை குறித்தும் விளக்கம் அளித்தனர். இவர்களுக்கு, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் எழுதிய, "அக்னிச் சிறகுகள்' புத்தகம் வழங்கப்பட்டது.
அதிகம் குவிந்த மாணவியர் : "தினமலர்' நாளிதழ் சார்பில், பிளஸ் 2 மாணவர்களுக்கான ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி, சென்னை பல்கலை நூற்றாண்டு அரங்கில் நடந்தது. நேற்று மதியம், கலைப்பிரிவு மாணவர்களுக்கான நிகழ்ச்சி நடந்தது. இதற்காக, காலை, 11;30 மணியில் இருந்து, மாணவர்கள் அதிக அளவில் வந்து வெளியில் காத்திருந்தனர். மாணவர்களைக் காட்டிலும் மாணவியர் அதிகம் வந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக