வியாழன், 28 நவம்பர், 2013

ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துக்கு புது கட்டிடம்

ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்துக்கு சென்னை அருகே காரப்பாக்கத்தில் சொந்த கட்டிடம் கட்டப்பட உள்ளது. கல்வியியல் பல்கலைக்கழகத்தை 20 ஏக்கர் பரப்பில் பிரமாண்டமாக அமைப்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
தமிழகத்தில் இயங்கி வந்த கல்வியியல் கல்லூரிகள் (பி.எட். கல்லூரி), அந்தந்த பகுதியில் இருந்த பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வந்தன. இவற்றை ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் வகையில், 2008-ம் ஆண்டில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் 650-க்கும் அதிகமான தனியார் கல்வியியல் கல்லூரிகளும், 21 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன.
இதைதொடர்ந்து, அனைத்து கல்வியியல் கல்லூரிகளுக்கும் ஒன்றுபோல் தேர்வு நடத்தப்பட்டு, ஒரேநேரத்தில் முடிவுகள் வெளியிடப் படுகின்றன. தற்போது, ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

20 ஏக்கரில் புது கட்டிடம்

ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துக்கு சொந்தக் கட்டிடம் இல்லாததால், அது பல்வேறு இழப்புகளை சந்தித்து வருகிறது. யு.ஜி.சி.யின் 12-பி அந்தஸ்து பெறுவதற்கு, பல்கலைக்கழகம் சொந்தக் கட்டிடத்தில் இயங்க வேண்டும் என்பது முக்கியமான ஒரு விதி. 12-பி அந்தஸ்து இருந்தால்தான் யு.ஜி.சி. உள்பட பல்வேறு மத்திய அமைப்புகளின் நிதி உதவியை எந்தவொரு பல்கலைக்கழகமும் பெற முடியும்.
கடந்த 5 ஆண்டுகளாக தற்காலிக கட்டிடத்தில் இயங்கி வரும் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துக்கு சொந்தக் கட்டிடம் கட்டுவதற்கு சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் பல்வேறு இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இறுதியாக, பழைய மாமல்லபுரம் சாலையில் (.எம்.ஆர்.) உள்ள காரப்பாக்கத்தில் 20 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. அரசுக்கு சொந்தமான இந்த நிலத்தில் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துக்கு சுமார் ரூ.25 கோடி செலவில் பிரமாண்டமான கட்டிடம் கட்டுவதற்கு உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
தாராள நிதி உதவி
தேவையான பல்வேறு துறை களுடன் சொந்தக் கட்டிடத்தில் இயங்கும்போது ஆசிரியர் கல்வி யியல் பல்கலைக்கழகத்துக்கு யு.ஜி.சி. உள்ளிட்ட நிதி வழங்கும் அமைப்புகளிடம் இருந்து உள்கட்டுமானப் பணி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளுக்கு தாராளமாக நிதி உதவி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக