சனி, 23 நவம்பர், 2013

பாரத ரத்னா

நாட்டின் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான பாரத ரத்னா 1954-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.
இந்த விருதுக்கு தகுதியானவர்களின் பெயர்களை குடியரசுத் தலைவருக்கு பிரதமர் பரிந்துரைப்பார். ஓராண்டில் அதிகபட்சமாக 3 பேருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்படும். இந்த விருது ஏற்படுத்தப்பட்டபோது, அமரர்களுக்கு வழங்கப்படாது என்ற விதி பின்பற்றப்பட்டது. அதனால்தான் 1948-ல் மறைந்த மகாத்மா காந்திக்கு விருது வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதை மாற்றும் வகையில் 1966-ல் அந்த விதியில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்பிறகு, முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி உள்பட இதுவரை 12 பேருக்கு அவர்களின் மறைவுக்குப் பிறகு பாரத ரத்னா வழங்கப்பட்டுள்ளது.
நம் நாட்டவர்களைத் தவிர்த்து அன்னை தெரசா, அப்துல் கபார் கான், நெல்சன் மண்டேலா ஆகிய வெளிநாட்டினர் மூவருக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
ரொக்கப் பரிசு கிடையாது
பாரத ரத்னா விருதில் குடியரசுத் தலைவர் கையெழுத்திட்ட சான்றிதழ், பதக்கம் ஆகியவை அடங்கும். ரொக்கப் பரிசு கிடையாது.
விருது பெறுவோருக்கு அணிவிக்கப்படும் பதக்கம் 32 மி.மீட்டர் விட்டத்தில் அரச இலை வடிவில் இருக்கும். அதில் சூரியனின் உருவமும் “பாரத ரத்னா” என்ற சொல் தேவநாகரி எழுத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும்.
விதி 18 (1)-ன்படி விருது பெற்றோர் தங்களின் பெயருக்கு முன்போ, பின்போ பாரத ரத்னா அடைமொழியைப் பயன்படுத்தக் கூடாது. அவசியம் என்று கருதினால் மட்டும் விசிட்டிங் கார்டு, லெட்டர் பேட் ஆகியவற்றில் “பாரத ரத்னா விருதைப் பெற்றவர்” என்ற சொற்றொடரைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
முதல்முறையாக விருது வாபஸ்
சுதந்திரப் போராட்டத் தலைவர் சுபாஷ் சந்திர போஸுக்கு 1992-ல் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. ஆனால், அவரது மரணத்தில் மர்மம் நீடிப்பதை சுட்டிக் காட்டி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்மீது உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு காரணமாக சுபாஷ் சந்திர போஸுக்கு அறிவிக்கப்பட்ட பாரத ரத்னா விருது முதல்முறையாக வாபஸ் பெறப்பட்டது.
நடைமுறை விதியில் மாற்றம்
கலை, இலக்கியம், அறிவியல், பொதுச் சேவை உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு மட்டுமே இதுவரை பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வந்தது. பிற துறைகளில் சாதித்தவர்களும் இந்த விருதைப் பெறும் வகையில் விதியில் மாற்றம் செய்து அறிவிக்கை வெளியிடப்பட்டது.
இதை தொடர்ந்தே முதல்முறையாக விளையாட்டுத் துறையைச் சேர்ந்த சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவரையும் சேர்த்து இதுவரை 43 பேர் பாரத ரத்னா விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
2013 – சி. என். ஆர். ராவ்
(1934 ஜூன் 30) கர்நாடகத்தைச் சேர்ந்த பிரபல வேதியியல் விஞ்ஞானி. செவ்வாய்க் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் திட்டத்தில் பின்புலமாகச் செயல்பட்டவர். தற்போது பிரதமரின் அறிவியல் ஆலோசகராக உள்ளார்.
2013- சச்சின் டெண்டுல்கர்
(1973 ஏப்ரல் 24) உலகின் தலைச் சிறந்த கிரிக்கெட் வீரர். கிரிக்கெட் உலகில் முறியடிக்கப்பட முடியாத பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர். பாரத ரத்னா விருது பெற்ற முதல் விளையாட்டு வீரர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக