சனி, 30 நவம்பர், 2013

இணையான பட்டப் படிப்புகளை முடிவு செய்வது எப்படி? : ஐகோர்ட் உத்தரவு

"நிபுணர் குழு பல்வேறு பல்கலை பட்டங்களை ஒப்பிட்டு, ஒரு பட்டம், அதற்கு இணையான மற்றொரு பட்டத்திற்கு சமம், என கூறினாலும், அரசு உத்தரவு தான் ஏற்புடையது. பட்டம் என்றைக்கு வழங்கப்படுகிறதோ, அந்த நாளிலிருந்து தான் இணையானதாக கருத வேண்டும்,' என, மதுரை ஐகோர்ட் கிளை பெஞ்ச் உத்தரவிட்டது.
 தமிழகத்தில் பல கல்லூரிகளில் "பி.., ஆங்கிலம்' முக்கிய பட்டப்படிப்பு போன்று, " பி.., தொடர்பியல் ஆங்கிலம்' மற்றும் "ஆங்கில தொடர்பியல்' என முக்கியப் பாடத்திற்கு இணையான உட்பிரிவு படிப்புகள் உள்ளன. கணிதம், உயிரியல், தாவரவியல் முக்கிய பட்டப் படிப்புகள், மேற்படிப்புகளில் உட்பிரிவுகளும் பயிற்றுவிக்கப்படுகிறது. முக்கிய பாடப்பிரிவு (பி.., ஆங்கிலம், பி.எஸ்.சி.,கணிதம்) மற்றும் உட்பிரிவு பாடங்களில் பட்டம் பெற்றவர்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய, ஆசிரியர் நியமனத் தேர்வில் பங்கேற்றனர். தமிழக அரசு 2012 ல், "உட்பிரிவு பாட பட்டங்கள், முக்கிய பாட பட்டப் படிப்புகளுக்கு இணையானது,' என, உத்தரவிட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம்,"2012 க்கு முன் உட்பிரிவு பாடங்களில் பட்டம் பெற்றவர்களை, முக்கிய பாடங்களில் பட்டம் பெற்றவர்களுக்கு இணையாகக் கருத முடியாது. பணி வாய்ப்பு வழங்க முடியாது,' என நிராகரித்தது.
 இதுதொடர்பாக தாக்கலான ஒருவழக்கில், தனி நீதிபதி," 2012 ல் அரசு உத்தரவிட்டாலும், 2012 க்கு முன் பட்டம் பெற்றவர்களுக்கும், அது பொருந்தும்,' என தீர்ப்பளித்தார். ஐகோர்ட் பெஞ்ச், "2012 ல் அரசு உத்தரவிட்டுள்ளது. அது,           2012 க்கு பின், பட்டம் பெற்றவர்களுக்குத்தான் பொருந்தும்,' என உத்தர விட்டது.
கோவில்பட்டி பாண்டவர்மங்கலம் நாடார் தங்க சுபா லட்சுமண் தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், பி.., (ஆங்கில தொடர்பியல்) 2011ல் தேர்ச்சி பெற்றேன். இது பி.., ஆங்கிலத்திற்கு இணையானது, என பல்கலை உறுதியளித்தது. பி.எட்., தேர்விலும், 2012 அக்.,14 ல் ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி அடைந்தேன். சான்றிதழ் சரிபார்ப்பின்போது, ஆசிரியர் தேர்வு வாரியம், "பி..,ஆங்கில தொடர்பியல், பி..,ஆங்கில பாடத்திற்கு இணையானது அல்ல,' என நிராகரித்தது. இதை ரத்து செய்ய வேண்டும், என்றார். மேலும் ,சிலர் இதுபோல மனு செய்தனர். நீதிபதி எஸ்.நாகமுத்து, ""ஏற்கனவே இது போன்ற படிப்புகள் தொடர்பாக, தனி நீதிபதி ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். பெஞ்ச் வேறு உத்தரவு பிறப்பித்துள்ளது. இவ்வழக்கை, கூடுதல் நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்க பரிந்துரைக்கிறேன்,'' என்றார்.
 நீதிபதிகள் எம்.ஜெய்சந்திரன், எம்.வேணுகோபால், டி.ராஜா கொண்ட பெஞ்ச் முன், விசாரணைக்கு மனுக்கள் வந்தன. மனுதாரர்களின் தரப்பில் வக்கீல்கள் சண்முக ராஜா சேதுபதி, கார்த்திகேய வெங்கடாஜலபதி, எஸ்.மனோகர் ஆஜராயினர்.
நீதிபதிகள்: நிபுணர் குழு : பல்வேறு பல்கலை பட்டங்களை ஒப்பிட்டு, ஒரு பட்டம், அதற்கு இணையான மற்றொரு பட்டத்திற்கு சமம் என கூறினாலும், அரசு உத்தரவுதான் ஏற்புடையது. பட்டம் என்றைக்கு வழங்கப்படுகிறதோ, அந்த நாளிலிருந்து தான் இணையானதாக கருத வேண்டும். உதாரணமாக, ஒருவர் 2010 அக்.,1 ல் பட்டம் பெற்றுள்ளார். அந்த பட்டம், அதனுடன் தொடர்புடைய வேறு பட்டப்படிப்பிற்கு இணையானது, என நிபுணர் குழு 2012 ஜன.,1 ல் முடிவு செய்கிறது. அந்த தேதியை கணக்கில் கொள்ளாமல், 2010 அக்.,1 லிருந்து தான் இரு பட்டங்களும் இணையானது என முடிவு செய்ய வேண்டும். இவ்வழக்கில், மனுதாரர்கள் பணி வாய்ப்பை எதிர்நோக்கி உள்ளனர். எனவே, எதிர்காலத்தில்தான், இரு பட்டப்படிப்புகளும் இணையானதாக, கொள்ள வேண்டும் என, முடிவு செய்யக்கூடாது. குழு தீர்மானித்து முடிவு செய்த தேதியிலிருந்து தான், இணையானது என கருத முடியாது. முதலில் பட்டம் பெற்ற தேதியிலிருந்துதான், இணையானதாக கருத வேண்டும், என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக