சனி, 16 நவம்பர், 2013

வளர்ச்சிக்கான வாய்ப்புக்களை உருவாக்கும் கல்வி : தமிழக திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை முதன்மை செயலாளர் வலியுறுத்தல்

"வளர்ச்சிக்கான வாய்ப்புக்களை உருவாக்கும் வகையில், தரமான கல்வியை பல்கலைகள் உருவாக்க வேண்டும்,'' என தமிழ்நாடு திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை முதன்மை செயலாளர் கிருஷ்ணன் வலியுறுத்தினார்.மதுரை காமராஜ் பல்கலை, யு.ஜி.சி., ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி சார்பில் நடந்த தேசிய கருத்தரங்கிற்கு, துணைவேந்தர் கல்யாணி தலைமை வகித்தார். ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி இயக்குனர் மும்தாஜ் பேகம் வரவேற்றார். கருத்தரங்கை துவக்கி வைத்து, கிருஷ்ணன் பேசியதாவது:உலக அளவில், இந்தியாவில் இளைஞர் வளம் அதிகம் உள்ளது. இதன் மூலம் கல்வி, பொருளாதாரம், தொழில் உட்பட அனைத்து துறைகளிலும் வளர்ச்சி காண நடவடிக்கை வேண்டும். அதற்கான வாய்ப்புக்களை உருவாக்க, தரமான கல்வியை, பல்கலைகள் உருவாக்க வேண்டும்.1900 ல், அர்ஜெண்டினா, அமெரிக்கா ஆகிய இரு நாட்டிலும், தனிநபர் வருமானம் ஏறக்குறையை ஒரே அளவில் தான் இருந்தன. ஆனால், அமெரிக்காவின் தனிநபர் வருவாய், தற்போது எட்ட முடியாத அளவில் உயர்ந்துள்ளது. இதற்கு காரணம், அங்கு இளைஞர் வளத்தை முறையாக பயன்படுத்தியது தான்.தமிழகத்தில், 32 சதவிகிதம் இளைஞர் உள்ளனர். இவர்களுக்கு தரமான கல்வி அளிப்பது சவாலாக உள்ளது. உலக அளவில் சிறந்த 200 பல்கலைகளில், ஒன்று கூட இந்திய பல்கலை இல்லை. இந்திய கல்வி நிறுவனங்களில், வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கை 27 ஆயிரம் என்ற அளவில் தான் உள்ளன. தரமான கல்வி கிடைத்தால் மட்டுமே, வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும். தொழில் நுட்பம் மற்றும் கல்வித் தரம் என 2 வழியிலும் கவனம் செலுத்துவதன் மூலம், தரமான கல்வியை பெறமுடியும். இதற்கு தரமான கல்வி நிறுவனங்களை உருவாக்க வேண்டும்.ஆந்திரா, கர்நாடகா உட்பட தென் மாநிலங்களில் பல உயர் கல்வி நிறுவனங்கள், 80 சதவிகிதம் தனியார் பங்களிப்புடன் செயல்படுகின்றன. இதுபோன்ற பங்களிப்பை பல்கலைகள் மேற்கொள்ள வேண்டும், என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக