வியாழன், 8 அக்டோபர், 2015

ஆதார் : மக்கள் தெரிந்திருக்க வேண்டிய 10 தகவல்கள்


ஆதார் அட்டையை கட்டாயமாக்க கோரி தொடரப்பட்ட வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. மேலும், ஆதார் அட்டையை கட்டாயப்படுத்தக் கூடாது என்று விதிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை மாற்றவும் உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்த வழக்கு தொடர்பாக மக்கள் தெரிந்திருக்க வேண்டிய 10 தகவல்கள் இதோ:

* மக்கள் அனைவருக்கும் பயோமெட்ரிக் அடிப்படையில் கை ரேகை மற்றும் கண் கருவிழியை முக்கிய ஆதாரமாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய ஆதார் அட்டையை மத்திய அரசு வழங்கி வருகிறது. வங்கி கணக்கு தொடங்குவது, காஸ் இணைப்பு, ஓய்வூதியம், திருமணப் பதிவு உட்பட அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டது. ஆதார் அட்டையை கட்டாயமாக்குவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 2012-ல் கர்நாடக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி புட்டாசுவாமி பொதுநல வழக்கு தொடுத்தார்.

* இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆதார் அட்டையை கட்டாயமாக்கக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு மனு தாக்கல் செய்தது.

* வழக்கு முடிவடையும் வரை ஆதார் அட்டை வழங்க இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. மேலும் ஒரு இடைக்கால உத்தரவைப் பிறப்பித்து, ரேஷன் பொருட்கள், காஸ் இணைப்புகளுக்கு மட்டும் ஆதார் அட்டையை வைத்துக் கொள்ளலாம் என்றும் மற்ற திட்டங்களுக்காக ஆதார் அட்டையை கட்டாயமாக்கக் கூடாது என்றும் தெரிவித்திருந்தது.

* குறிப்பாக, குற்ற வழக்குகளில் நீதிமன்றங்கள் கேட்டுக்கொள்ளும்போது மட்டுமே சம்பந்தப்பட்ட நபரின் ஆதார் அட்டை விவரங்களை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் தனது இடைக்கால உத்தரவில் அறிவுறுத்தியது.

* இதனிடையே, அரசின் சமூக நலத் திட்டங்கள் மக்களுக்கு சென்றடைவதில் உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு பெரும் தடையாக உள்ளது. எனவே ஆதார் அட்டை திட்டத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று செபி, டிராய், ரிசர்வ் வங்கி, மத்திய அரசு ஆகியவை கோரிக்கை வைத்தன.

* இந்த மனுக்கள் தொடர்பான விசாரணை நேற்று முன்தினம் நீதிபதிகள் செல்லமேஸ்வர், பாப்தே, சி.நாகப்பன் ஆகியோரைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வில் மீண்டும் நடைபெற்றது. ஆதார் அட்டை பெறுவதற்காக தனது சொந்த, தனியுரிமை அல்லது தனிப்பட்ட தகவல்களை விட்டுக் கொடுக்க நாட்டின் ஏழை மக்கள் தயாராக உள்ளனர், இது அவர்களுக்கு உணவையும் வருவாயையும் வழங்கும். எனவே ஆதார் அட்டை திட்டத்தை தடுக்க வேண்டாம் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதி செல்லமேஸ்வர், "ஏழை, எளியவர்கள் என்பதற்காக அவர்கள் தனியுரிமை கொள்கையை வைத்துக் கொள்ளக் கூடாதா" என்று கேள்வி எழுப்பினார்.

* நீதிபதியின் கேள்விக்கு பதிலளித்த அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, "ஆதார் அட்டையை அனைவரும் விருப்பப்பட்டுதான் எடுத்துக் கொள்கின்றனர், ஆதார் அட்டை பயன்படுத்துவது ஒருவருக்கு பிரச்சினையாக இருந்தால் பயன்படுத்தாமல் இருந்துவிட்டுப் போகட்டும். தினக்கூலியை மட்டுமே தங்களின் வாழ்வாதாரமாக கொண்டுள்ளவர்கள், உணவுக்கு கஷ்டப்படுபவர்களுக்கு, ஆதார் அட்டை சரியான வழிமுறை. ஆதார் அட்டை பயன்படுத்துவதால் அரசின் நலத் திட்டங்களில் முறை கேடான வழிகளை கையாண்டு பயன்பெறுபவர்கள் தடுக்கப்பட் டுள்ளனர். இதனால் அரசுக்கு ஓர் ஆண்டுக்கு சுமார் ரூ.14 ஆயிரம் கோடி மிச்சமாகியுள்ளது" என்றார்.

* அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகிக்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் கூறும்போது, "நாட்டின் பெரும்பான்மையான மக்களுக்கு சேர வேண்டிய பயன்கள் சென்றடைவதை உச்ச நீதிமன்றம் ஏன் தடுக்க வேண்டும்? ஒரு ஏழை, 'எனது தனியுரிமையை எடுத்துக் கொள்ளுங்கள், பணம் கொடுங்கள்' என்று கேட்கும் போது, உச்ச நீதிமன்றமோ பணம் வேண்டாம் தனியுரிமையை வைத்துக் கொள் என்று கூறுகிறது" என்றார்.

* அதேவேளையில், ஆதாரை எதிர்த்து மனு தாக்கல் செய்த பல்வேறு தரப்பினர், என்.ஜி.ஓ.க்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஷியாம் திவான் கூறும்போது, "பயோமெட்ரிக்தான் மனிதரின் தனி அடையாளம். இதனை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்பது பற்றி அரசுக்கு எவ்வித புரிதலும் இல்லை" என்றார்.

* இத்தகைய வாதங்களின் தொடர்ச்சியாக, ஆதார் அட்டைக்காக ஒருவர் தானே முன்வந்து தனது அந்தரங்க உரிமைகளை, தகவல்களை அளிக்க முடியுமா என்பதை அரசியல் சாசன அமர்வுதான் தீர்மானிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், இது தொடர்பான மத்திய அரசின் மனு உட்பட் அனைத்து மனுக்கள் மீதான விசாரணையையும் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர். மேலும், ஆதார் அட்டையை கட்டாயப்படுத்தக் கூடாது என்று விதிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை மாற்றவும் நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.