வியாழன், 8 அக்டோபர், 2015

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 1.5 லட்சம் அரசு ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ அமைப்பு சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படம்: ம.பிரபு
15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ அமைப்பு சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படம்: ம.பிரபு

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் சுமார் ஒன்றரை லட்சம் பேர் இதில் பங்கேற்றனர்.

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நவம்பர் இறுதி வாரம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது, தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக கருதுவது, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ) சார்பில் இன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்லாமல் 'ஆப்சென்ட்' ஆனார்கள். கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை உட்பட மாவட்டத் தலைநகர்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் என அனைத்து பிரிவு ஆசிரியர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

சென்னை மாவட்டத்தில் மாநகராட்சிப் பள்ளி, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சுமார் 2 ஆயிரம் பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். வள்ளுவர் கோட்டம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் கே.சத்தியநாதன், உடற்கல்வி ஆசிரியர்-இயக்குநர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.லிங்கேசன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை ஜாக்டோ மாநில உயர்நிலைக்குழு உறுப்பினரும், உடற்கல்வி ஆசிரியர்-இயக்குநர் சங்க மாநிலத் தலைவருமான எஸ்.சங்கரபெருமாள் தொடங்கிவைத்தார். இதில், 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

பெரம்பூர் எம்.ஹெச் சாலையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட ஒரு சில மேல்நிலைப் பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். கோட்டூர்புரம், சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கின. சைதாப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட சில பள்ளிகள் காலையில் இயங்கினாலும் மதியத்துக்கு பிறகு மூடப்பட்டன.

மாற்று ஏற்பாடு

ஜாக்டோ வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆசிரியர்கள் அதிக எண்ணிக்கையில் வராத பள்ளிகளில் மட்டும் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்களைக் கொண்டு பாடங்கள் நடத்தப்பட்டன.

வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் 1.50 லட்சம் ஆசிரியர்கள் கலந்துகொண்டதாக ஜாக்டோ மாநில தொடர்பாளர் பெ.இளங்கோவன் தெரிவித்தார். அதே நேரத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 80 சதவீத ஆசிரியர்களும், தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 30 சதவீதம் பேரும் பணிக்கு வந்ததாக பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் கூறினார்.

காலவரையற்ற போராட்டம்

தங்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் நவம்பர் இறுதி வாரம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஜாக்டோ மாநில உயர்நிலைக்குழு உறுப்பினர் எஸ்.சங்கரபெருமாள் கூறும்போது, ''எங்களின் பெரும்பாலான கோரிக்கைகள் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டியது தொடர்பானவை. எனவே, முதல்வர் எங்களை அழைத்துப் பேச வேண்டும். நவம்பர் 2-வது வாரத்தில் ஜாக்டோ உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெறுகிறது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் நவம்பர் இறுதி வாரம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம்'' என்றார்.