புகை கசிந்தாலே அலறும் அலாரங்கள் பீதியூட்டுகின்றன. தீயணைப்புத் துறை இருக்கும் இந்தக் காலத்திலும் நெருப்பு என்றால் ஓடுகிறோம். நெருப்பைத் தேவைப்படும்போது உருவாக்கலாம் என்று லட்சம் வருஷங்களுக்கு முன் கண்டுபிடித்த ஆதி மனிதனே சாதனையாளன் என்கிறாள் எனது தோழி.

அரசன்குளத்தில் பிறந்த விஜயாவை ப்ளஸ் 2 முடித்த உடன் தறி ஓட்ட அனுப்பியது குடும்பம். அழுது புலம்பி மூன்று வருடங்களுக்குப் பிறகு கல்லூரியில் சேர்ந்து சில வருடங்களுக்குப் பிறகு- அரசுத் தேர்வில் வெற்றி பெற்று பெரியவர் ஒருவருக்கு இனிப்பு கொடுத்தாள் விஜயா. "அப்ப எல்லாம் எக்ஸாம் ரொம்பக் கஷ்டம்... இப்ப மாதிரி ஈஸி இல்ல "என்றார் அவர்.

பெற்றோர்?

"சாதனையாளர்கள் சிலரைச் சொல்லுங்கள்" என்றால் பலரும் "பில் கேட்ஸ், டோனி, சானியா மிர்ஸா, மண்டேலா..." இந்த ரீதியில்தான் பதில் சொல்வார்கள்.

இது அறிவார்ந்த பதில்தான். ஆனால், பெருந்தன்மையான பதில் அல்ல நிச்சயமாக, நியாயமான பதிலும் அல்ல.

ஏனென்றால், இன்றைய நெருக்கடியான உலகில், கழுத்தை நெறிக்கும் போட்டிச் சந்தையில் தன் வயது மற்றும் திறமையை மீறி ஓடி, நீங்கள் கேட்டதில் பாதியையாவது வாங்கிக் கொடுத்துவிட்டு, மீதிக்கு சமாளிப்புக் கண்ணீரைத் தன்னுள்ளேயே தேக்கும் வித்தையறிந்த உங்கள் பெற்றோர் சாதனையாளர் இல்லையா?

பாகுபலிதான் அதிகம்

யாரையெல்லாமோ சந்தித்து, நினைத்துக்கூடப் பார்க்காத பணிவுகளை வெளிப்படுத்தி, வெயில், மழையில் நனைந்து பொருளீட்டி, சந்தோஷத் துக்கான டிக்கெட் நீட்டப்படும். நிறைய பேர் "ஏன் இவ்வளவு நேரம்?" என்று அதைப் பிடுங்கிக்கொண்டு ஓடுவார்கள். கால் கடுக்க வரிசையில் நின்ற அவர்களின் பாதங்களுக்கு ஒரு ஒத்தடப் பார்வையை எத்தனை பேர் அளித்துப் போவார்கள்?

படகில் வைத்துக் குழந்தைகளை நதியில் கைவிடும் பெற்றோர்களும் இருக்கலாம். ஆனால் தான் நீரில் மூழ்கி, தன் குழந்தையைத் தலைக்கு மேல் தாங்கி வாழ்க்கையைக் கடக்கும் 'பாகுபலி' படக் காட்சி மாதிரிதான் அநேகப் பெற்றோர்கள்.

வீட்டிலிருந்து பெற்றோர்கள் இல்லாத இடங்களில், தாத்தா, பாட்டி என யாரோ ஒருவர் உங்களுக்காகத் தங்கள் கனவுகளை, சின்னத் தேவைகளைத் தியாகம் செய்து தான் உங்களைக் கரைசேர்க்கிறார்கள்.

அவர்களைப் பார்த்து, "பெரிசா என்ன செஞ்சுட்டீங்க...?" என்று நீட்டி முழக்குகிற நாக்கு எங்கோ ஒரு ஆட்டத்தில் சிக்ஸர் அடித்த விளையாட்டு வீரரைச் சாதனையாளர் என்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

ஆதிக் குரங்கிலிருந்து சாதனை யாளரைப் புகழ்வதில் தவறில்லை. ஆனால் அந்தப் பட்டியலை முதலில் வீட்டிலிருந்துதான் தொடங்க வேண்டும்.

சுற்றிலும் எத்தனை பேர்!

அந்த நேர்மையான மனதுதான் செருப்புக்கூட இல்லாமல் மூன்று கி.மீ. நடந்து, நடுவில் விட்டுப் போன கல்வியைத் தொடர்ந்து, ஒரு குட்டி நகரத்துக்கு வந்து, அதைவிடப் பெரிய நகரத்தில் உள்ளவர்களிடம் போட்டி போட்டு, வெற்றி பெற்று இனிப்பை நீட்டும் விஜயாவின் தறி ஓட்டிய கையின் ஈரத்தைப் புரிந்து கொள்ளும்.

அந்தத் திறந்த மனதுதான் எத்தனையோ '...பவன்கள் ' இருந்தாலும், ஒரு சந்தில் வயசான அம்மாளின் தட்டுக்கடைக்கு வழிகாட்டும். பெரிய உணவகங்கள், ஆயிரத்தெட்டு நடைமுறைப் பிரச்சினைகளை மீறி அவள் தயாரிக்கும் உணவுக்கு வெள்ளை வேட்டிக்காரர்களையும், டை அணிந்த எக்ஸிக்யூட்டிவ்களையும் தட்டை ஏந்தி நிற்க வைத்த சாதனையைப் புரிந்து கொள்ள வைக்கும்.

ரத்த அழுத்தம், கொழுப்பு என்று 30 வயசுக்காரர்களே ரிப்போர்ட்களுடன் அலையும்போது, முறையான வாழ்க்கை காரணமாக 60-வயதிலும் " சளி, காய்ச்சல்கூட பெருசா வந்ததில்லீங்க..." என்பவர்கள், ஒற்றை ஆளாய் 50 பேருக்கு அறுசுவை உணவை நம் வீடுகளில் தயாரிக்கும் மனுஷிகள், முறைகேடாய்ப் பணம் சம்பாதிக்க வாய்ப்பிருந்தும் நல்மதிப்பீடு கள் காரணமாக அதைத் தவிர்ப்பவர்கள் எனச் சுற்றிலும் எத்தனை பேர் !

பட்டியல் எடுங்கள்

நாம் "அவ கதையும் ஏதோ லக்ல ஓடுது", "பெருசா லெக்சர் அடிப்பான்..." என்போம்!

அருகில் இருப்பதாலேயே அமுதசுரபிகளின் அருமை புரிவதில்லை. உழைத்துக் களைத்த கோலத்தில், கிழிந்த விசிட்டிங் கார்டை நீட்டுவதாலேயே கடவுள்கள் அடையாளம் காணப்படுவதில்லை!

வீடு, தெரு, உலகம் என்றுதான் சாதனையாளர் பட்டியல் விரிய முடியுமே தவிர, எடுத்த எடுப்பிலேயே பிரபஞ்ச வீதியில் ஆள் தேடுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது...?

இன்னொன்றும் இருக்கிறது. உங்களின் சாதனையாளர்களும் இப்படித்தான்; "ஐசக், ஆப்பிளைச் சாப்பிடுவியா, அத விட்டுட்டு புவியீர்ப்பு விசை அது, இதுன்னு உளறிக்கிட்டு இருக்கற..."என்ற விமர்சனத்தையே முதலில் சந்தித்திருப்பார்கள்.

எனவே, சுற்றியிருக்கிற மனிதர்களின் எளிய சாதனைகளைப் பாராட்டக் கிடைக்கும் எந்த வாய்ப்பையும் நழுவவிட வேண்டாம். இதனால் உங்கள் மனம் விசாலம் அடையும். அடுத்தவரின் வலியை உணர்கிறபோது வாழ்க்கை பற்றிய பார்வை மாறும். இவர்களின் சின்னத் திறமைகளை மதிக்கும்போது உங்களின் சின்னத் திறமையையும் நீங்கள் அடையாளம் காண்பீர்கள்.

இப்போது சாதனையாளர் பட்டியலைத் தயாரியுங்கள் !