வெள்ளி, 9 அக்டோபர், 2015

2.7 ஆறாம் வேற்றுமை

2.7 ஆறாம் வேற்றுமை
 

1.   அது என்னும் பெயருடைய வேற்றுமைச்சொல் ஆறாவதாகும்.   அதாவது ஆறாம் வேற்றுமைக்குரிய உருபு அது என்பதாகும். ஆறாம் வேற்றுமைப் பன்மைக்குரிய உருபு அ என்பதாகும்.
 

2. இவ்வேற்றுமை 'இதனது இது'(இப்பொருளினுடையது இது) என்னும் கிழமைப் பொருள் (உடைமைப் பொருள்) தருவதாகும்.
 

3. இக்கிழமைப் பொருள் தற்கிழமை, பிறிதின் கிழமை என இருவகைப்படும். தன்னோடு ஒன்றியிருக்கும் கிழமை தற்கிழமை. சாத்தனது கை. கை சாத்தனோடு ஒன்றிருப்பது. தன்னோடு ஒன்றாமல் பிறிதாக இருக்கும் கிழமை பிறிதின் கிழமை. சாத்தனது ஆடை. ஆடை, ஒன்றாத உடைமை.  தற்கிழமை,  1) ஒன்றுபல குழீஇய தற்கிழமை 2) வேறுபல குழீஇய தற்கிழமை 3) ஒன்றியற் கிழமை 4) உறுப்பின் கிழமை 5) மெய் திரிந்து ஆய தற்கிழமை என ஐவகைப்படும். பிறிதின் கிழமை 1) பொருளின் கிழமை 2) நிலத்தின் கிழமை 3) காலத்தின் கிழமை என மூவகைப்படும்.
 

இவற்றின் விளக்கங்களையும் எடுத்துக்காட்டுகளையும் அடுத்த நூற்பாவில் காண்போம்.
 

நூற்பா
ஆறாகுவதே
அதுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
தன்னினும் பிறிதினும் இதனது இதுவெனும்
அன்ன கிளவிக் கிழமைத் ததுவே.

2.7.1 கிழமைப் பொருளது விரி
 

கிழமைப் பொருளின் 16  விரிகளையும் அவைபோன்ற வேறு சிலவற்றையும் தொல்காப்பியர் வழிநின்று காணலாம்.
 

1.

குழூஉக் கிழமை

:

ஒரே வகைப்பொருள் குழுவாகச் சேர்ந்து(ஒன்றாகத் திரண்டு) உடைமைப் பொருளாக வருவது ஒன்று பல குழீஇய கிழமை.
 

   

எள்ளது குப்பை : (குப்பை - குவியல்)
 

   

வெவ்வேறு வகைப் பொருள்கள் குழுவாகத் திரண்டு உடைமைப் பொருளாக வருவது வேறுபல குழீஇய கிழமை.
 

   

படையது குழாம் : (நால்வகைப் படைகளது கூட்டம்)
 

2.

இயற்கைக் கிழமை

:

இயற்கை - ஒரு பொருளுக்கு இயல்பாகிய தன்மை.
 

   

நீரது தண்மை, தீயது வெம்மை, சாத்தனது இயற்கை
 

3.

நிலைக் கிழமை

:

நிலை - நிலைமை.
 

   

சாத்தனது நிலைமை, சாத்தனது இல்லாமை.
 

   

இயற்கைக் கிழமையும் நிலைக்கிழமையும் ஒன்றியற் கிழமை (ஒரே பொருளுக்குள் இயல்பாக ஒன்றியிருக்கும் கிழமை) ஆகும்.
 

4.

உறுப்பின் கிழமை

:

யானையது கொம்பு, எனது கை.

இது உறுப்பின் கிழமை
 

5.

செயற்கைக் கிழமை

:

செயற்கையால் வரும் கிழமை.
 

   

சாத்தனது கற்றறிவு.
 

6.

முதுமைக் கிழமை

:

தந்தையது முதுமை
 

7.

வினைக் கிழமை

:

வினை - செயல்
 

   

சாத்தனது தொழில்
 

   

மேற்கண்ட மூன்றும் (5,6,7) மெய்திரிந்து ஆய தற்கிழமை.

   

மெய்திரிதல் - வினைமுதலின் வேறுபாடு. அறிவு, முதுமை, செயல் ஆகியவை அந்தந்த வினை முதலின் வேறுபாட்டை உள்ளடக்குவன.
 

இதுவரை ஐவகைத் தற்கிழமையும் கண்டோம்.8.

உடைமைக் கிழமை :

:

சாத்தனது தோட்டம்.
 

9.

முறைமைக் கிழமை

:

முறைமை - உறவுமுறை.
 

   

கன்றினது தாய்.
 

10.

கருவிக் கிழமை

:

இசையது கருவி, சாத்தனது எழுதுகோல். 
 

11.

துணைக் கிழமை

:

சாத்தனது துணை இந்நாய்.
 

12.

கலக் கிழமை

:

கலம் - எழுதிய ஓலை, ஆவணம். இக்காலத்தில் 'பத்திரம்' என்று சொல்லப்படுவது.
 

   

அரசனது பட்டோலை.
 

13.

முதற்கிழமை

:

ஒரு செலவுக்காக வகுத்துக்கொண்ட பொருள்,  முதலீட்டுப் பொருள். வணிகரது முதல்.
 

14.

தெரிந்துமொழிச் செய்தி

:

செய்தி - செய்யுள். ஆராய்ந்த மொழியால் செய்யப்படும் செய்யுள்.
 

   

கபிலரது பாட்டு, கம்பரது காப்பியம்.

8 முதல் 14 வரை உள்ளவை பொருட் பிறிதின் கிழமை ஆகும்.
 

15.

கிழமைக் கிழமை

:

கிழமை - உரிமை. தொன்று தொட்டு உரிமையாய் வரும் உடைமை.
 

   

முருகனது குறிஞ்சி நிலம்.
 

   

வெள்ளியது ஆட்சி (வெள்ளி - நாள், நட்சத்திரம்).
 

16.

வாழ்ச்சிக் கிழமை

:

வாழும் இடம் பற்றி வருவது.
 

   

யானையது காடு.
 

இவ்விரண்டும் நிலப் பிறிதின் கிழமை. வெள்ளியது ஆட்சி என வருவது மட்டும் காலப்பிறிதின் கிழமை.'திரிந்து வேறுபடூஉம் பிற' என நூற்பாவில் வருவது கொண்டு கீழ்க்கண்டவற்றையும் கூறலாம்.
 

எள்ளது சாந்து. எள் அரைத்த சாந்து. ஒரு பொருள் திரிந்து வேறுபடுவது.
பொருளது கேடு. பொருள் முற்றுமாகக் கெடுதல்.
சொல்லினது பொருள்.
அழகினது பொலிவு.
 

மாணவர்களே! 
 

பிற வேற்றுமைகளுக்கும் ஆறாம் வேற்றுமைக்கும் இடையே பெரும் வேறுபாடு ஒன்று உண்டு. ஆறாம் வேற்றுமை உடைமைப் பொருள் வேற்றுமை.  அஃறிணைப் பொருள்களை மட்டுமே உடைமைப் பொருள்களாகக் கொள்ளமுடியும்.  ஆகவே ஆறாம் வேற்றுமையில் உடைமையைக் குறித்து, வருமொழியாக வரும் சொல் அஃறிணையாகவே இருக்கும்.  பிற வேற்றுமைகளில் வருமொழிச் சொல் இருதிணையாகவும் வரலாம்.
 

உயர்திணையில் உறவுப் பொருள் போன்றவற்றை வருமொழியில் சொல்லும்போது அங்கு அது உருபைப் பயன்படுத்தாமல் கு உருபைப் பயன்படுத்த வேண்டும் என்பதனைத் தொல்காப்பியர் வேற்றுமை மயங்கியலில் (நூ.11) குறிப்பிடுகிறார்.
 

(எ-டு) என் மகன் என்பதனை எனது மகன் என விரிக்காமல்
எனக்கு மகன் என விரிக்க வேண்டும்.
 

இதற்கு விதிவிலக்காக இலக்கியங்களில் அது உருபு வருமொழி உயர்திணைக்கு வரும் சில இடங்களும் உண்டு.
 

(எ-டு) 'அரசனது தோழன்'
'குன்றவர் தமது செம்மல்'
'நினது அடியார்'
 

இக்காலப் பேச்சு வழக்கில் 'அது' திணை வேறுபாடின்றி இயல்பாக வழங்கி வருவதை அறிவீர்கள். எனது நண்பன், நண்பனது மனைவி, மனைவியது தாய்.
 

நூற்பா
இயற்கையின் உடைமையின் முறைமையின் கிழமையின்
செயற்கையின் முதுமையின் வினையின் என்றா
கருவியின் துணையின் கலத்தின் முதலின்
ஒருவழி உறுப்பின் குழுவின் என்றா
தெரிந்துமொழிச் செய்தியின் நிலையின் வாழ்ச்சியின்
திரிந்து வேறுபடூஉம் பிறவும் அன்ன
கூறிய மருங்கின் தோன்றும் கிளவி
ஆறன் பால என்மனார் புலவர்.

(தொல். சொல். வேற். 19)