வெள்ளி, 16 அக்டோபர், 2015

தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் அமைப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது - உச்ச நீதிமன்றம்


உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் மற்றும் மாறுதல் விவகாரங்களுக்காக தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் அமைப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும், நீதிபதிகள் நியமன விவகாங்களை கடந்த 22 ஆண்டுகளாக மேற்கொண்டுவரும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய 'கொலீஜியம்' அமைப்பு முறையே தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்றும் அந்தத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த வழக்கை பேரமர்வுக்கு மாற்றக் கோரிய மத்திய அரசின் மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் மற்றும் மாறுதல் விவகாரங்களை கடந்த 22 ஆண்டுகளாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய 'கொலீஜியம்' அமைப்பு மேற்கொண்டு வருகிறது. இதற்கு மாற்றாக, தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் என்ற ஒன்றை அமைத்து மத்திய அரசு சட்டம் இயற்றியது. இச்சட்டத்தை எதிர்த்து ஏராளமான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டன.

இவ்வழக்கின் முக்கியத்துவம் கருதி, நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹர், சலமேஸ்வர், மதன் லோக்கூர், குரியன் ஜோசப், ஆதர்ஷ் குமார் கோயல் ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.

இந்த வழக்கு விசாரணையின்போது, 'ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு 22 ஆண்டுகளுக்கு முன் கொலீஜியம் முறையை உருவாக்கியது. அதை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஒன்பது நீதிபதிகள் உத்தரவு தொடர்பான வழக்கு என்பதால், தற்போது தேசிய நீதிபதிகள் நியமனக்குழு சட்டம் குறித்து ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்க அதிகாரம் இல்லை. எனவே, ஒன்பது நீதிபதிகளை விட கூடுதலாக 11 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு இந்த வழக்கை மாற்ற வேண்டும்' என்று மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், 'கொலீஜியம் முறையில் நீதிபதிகள் நியமனம் நடப்பதற்கு வி.ஆர்.கிருஷ்ணய்யர் உள்ளிட்ட நீதியரசர்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன்மூலம், தவறு நடக்க வாய்ப்புள்ளது என்று சுட்டிக்காட்டி உள்ளனர். இப்படி ஒரு நிலை வரும் என்பதை அரசியல் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரே நினைத்துப் பார்த் திருக்க மாட்டார். அவரே சகித்துக் கொள்ள மாட்டார்' என்றும் வாதிடப்பட்டது.

ஆனால் நீதிபதிகளோ, 'அம்பேத்கரால் கூட சகித்துக் கொள்ள முடியாத நிலை நாட்டில் பலமுறை ஏற்பட்டுள்ளது. 'கொலீஜியம்' நியமன முறை தொடங்கிய பிறகு, தவறாக நீதிபதிகள் நியமனம் நடந்துள்ளதாக உங்களால் ஆதாரத்துடன் பட்டியல் தாக்கல் செய்ய முடியுமா' என்று மத்திய அரசிடம் கேள்வி எழுப்பினர்.

இவ்வாறாக விவாதங்கள் நடந்து முடிந்த நிலையில், தேசிய நீதிபதிகள் நியமன ஆணையக் குழு செல்லத்தக்கதா என்ற இந்த வழக்கில், இந்த ஆணையத்தை அமைக்கும் சட்டம், அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும், தற்போது நடைமுறையில் இருக்கும 'கொலீஜியம்' முறையே தொடரும் என்றும் உச்ச நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பளித்தது.

அத்துடன், இந்த வழக்கை பேரமர்வுக்கு மாற்றக் கோரிய மத்திய அரசின் மனுவையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்து உத்தரவு பிறப்பித்தனர்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக