வெள்ளி, 16 அக்டோபர், 2015

நெட் தேர்வில் வெற்றி பெற வேண்டுமா?
   ·    

உதவிப் பேராசிரியருக்கான தேசிய அளவிலான தகுதித் தேர்வு வருகிற டிசம்பர் 27 ல் நடக்க இருக்கிறது. இந்தத் தேர்வு டிசம்பரிலும் ஜூன் மாதத்திலும் என ஒரு வருடத்தில் இருமுறை நடத்தப்படுகிறது. முதுகலை பட்டப் படிப்பு படித்தவர்கள் இந்தத் தேர்வுகளை எழுதலாம்.

இதில் மூன்று தாள்கள் உள்ளன. முதல் தாளில் பொதுவான மூளைத் திறன் சம்பந்தப்பட்ட 60 கேள்விகள் உள்ளன. இவற்றுள் 50 கேள்விகளுக்குக் கட்டாயமாகப் பதில் அளிக்க வேண்டும். இரண்டாவது மற்றும் மூன்றாம் தாள்களுக்கு நீங்கள் முதுகலையில் படித்த பிரதான பாடத்திலிருந்து முறையே 50 மற்றும் 75 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.

முதல் தாளில் லாஜிக் மற்றும் மூளைத் திறன் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு முறையான பயிற்சியின் மூலமாக மட்டுமே பதில் அளித்து வெற்றி பெற முடியும். மாநில மற்றும் மத்திய தேர்வாணையம் கடந்த ஆண்டுகளில் நடத்திய தேர்வுகளின் வினா விடைகளைக் கொண்டு நாம் இதற்காகப் பயிற்சி செய்யலாம்.மேலும் மூளைத் திறன் கேள்விகளை உள்ளடக்கிய புத்தகங்களைக் கொண்டோ அல்லது அதற்கென இருக்கும் பயிற்சிக் கூடங்களில் சேர்ந்தும் பயிற்சி பெறலாம்.

முடிந்தவரை காலையில் 4 முதல் 7 மணிவரை முதல் தாளுக்குப் படிப்பது நல்லது. தினமும் மூன்று மணி நேரம், முதல் தாளுக்குச் செலவிடுவது அவசியம்.

இரண்டாம் மற்றும் மூன்றாம் தாள்களுக்கு அறிவியல்ரீதியான அணுகுமுறை அவசியம். பிரதான பாடத்திட்டத்தைக் கூர்ந்து கவனியுங்கள். ஐந்து மற்றும் பத்துப் பிரிவுகளாக முறையே இரண்டாம் தாளுக்கும் மூன்றாவது தாளுக்கும் அளிக்கப்பட்டுள்ளது. முதல் பிரிவில் முதலாவது கருத்தையோ அல்லது கோட்பாட்டையோ எடுத்துக்கொள்ளுங்கள். சம்பந்தப்பட்ட புத்தகங்களை எடுத்துக்கொண்டு குறிப்புகள் எடுக்கவும்.

ஒவ்வொரு நாளும் ஒரு கருத்தையும் கோட்பாட்டையும், இரண்டு புத்தகங்களிலிருந்து எடுப்பதை ஒரு பயிற்சியாக மாற்றவும். உயிரே போனாலும் இந்த பயிற்சியை முடித்துவிட்டுத்தான் மறு வேலையைப் பார்க்கவும். இது போல பாடத்திட்டத்தில் உள்ள அனைத்துப் பிரிவுகளையும் படிப்பதற்கு எவ்வளவு நாட்கள் ஆகும் என்பதைக் கணக்கிட்டுப் பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கலாம்.

இரண்டாம் மற்றும் மூன்றாம் தாள்கள் சம்பந்தப்பட்ட பயிற்சியில் தினமும் ஒவ்வொரு பிரிவுக்கும் அரை மணி நேரம் ஒதுக்கலாம். 

மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு பிரிவிலும் தினமும் ஒரு கருத்தையோ கோட்பாட்டையோ படிக்கும்போது மனதிலே ஒரு கலவையாகப் பாடங்கள் பதியத் தொடங்கும். ஆழ்ந்து படிக்கும்போது ஒவ்வொரு பெரும் பிரிவுகளையும் இணைக்கக்கூடிய, மெல்லிய, ஆனால் வலிமையான இழையை நாம் பிடித்துவிடலாம். நேரம் ஒதுக்கிப் படிக்கும் காலத்தில் பார்ப்பது, கேட்பது,பேசுவது அனைத்தும் பாடம் சம்பந்தப்பட்டதாக இருந்தால் இந்தத் தேர்வில் வெற்றி வெகு விரைவாக வந்து சேரும்.