ஓவியம், எழுத்து, நாட்டுப்பற்று என்று பல தளங்களில் தடம் பதித்தவர் நாமக்கல் கவிஞர்

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் உதவியுடன் நாகர்கோவில் நகரப் பூங்காவில் நடந்த மகாத்மா காந்தி நினைவுச் சின்ன தூபி திறப்பு நிகழ்ச்சி அது. 1953-54 காலகட்டத்தில் நடந்தது. நிகழ்ச்சி ஆரம்பித்தபின் நாமக்கல்லார் வந்தார். அவர் அன்று முக்கிய பேச்சாளர். மனைவியுடன் தாமதமாக வந்தவர், மேடையில் அமராமல், பார்வையாளர் வரிசையில் கடைசியில் போய் உட்கார்ந்தார். மேடையிலிருந்த தலைவர் ஒருவர் நாமக்கல்லாரைப் பார்த்து விட்டார். கூட்டத்துக்கு ஏற்பாடுசெய்திருந்த வெ. நாராயணனை (பரந்தாமன்) அழைத்து காதில் பேசினார். பரந்தாமன், அந்த நிகழ்ச்சியில் தன்னார்வலராகப் பணிசெய்த எழுத்தாளர் சுந்தர ராமசாமியை அழைத்து நாமக்கல்லாரை மேடைக்கு வரச்சொன்னார். சு.ரா.வும் சொன்னார். கவிஞர் தயக்கத்துடன் மேடையில் போய் அமர்ந்தார். அன்று பேசும்போது தாமதமாக வந்து மற்றவர்களுக்குச் சிரமம் ஏற்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இத்தனைக்கும் நாமக்கல்லார் அப்போது பிரபலமாக இருந்தார். அவரது எளிமைக்கு உதாரணம் இது.

தான் வாழ்ந்த காலத்தில் பிரபலமானவராகவும் பாராட்டுக்குரியவராகவும் வாழ்ந்திருக்கிறார் நாமக் கல்லார் என்று அழைக்கப்படும் நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளை. நாமக்கல்லார் எழுதிய நூற்கள் 50 அளவில் இருக்கலாம். நாவல்கள் 5, நாடகம் 2, கட்டுரைத் தொகுதிகள் 10, சுயசரிதை 1, இசை நூற்கள் 3, மொழிபெயர்ப்பு 4, திறனாய்வு 7, பதிப்பு 1 கவிதைத் தொகுப்பு 1 சிறுகாப்பியங்கள் சில.

திருக்குறளுக்கு உரை

நாமக்கல்லாரின் நூற்களைத் தமிழ்ப்பண்ணை பதிப்பகம், பழனியப்பா பிரதர்ஸ், இன்ப நிலையம், பாரதி பதிப்பகம், கவிஞன் பதிப்பகம் ஆகியன வெளியிட்டுள்ளன. இவரது நூற்களில் நாடு விடுதலை பெற்ற பின்னர் வெளியிடப்பட்டவையே அதிகம். இதற்குச் சின்ன அண்ணாமலையின் முயற்சி முக்கியமானது. அவரது தமிழ்ப் பண்ணைப் பதிப்பகம்தான். நாமக்கல்லாரின் நூற்களை முறையாக வெளியிட்டன. கவிஞரின் மகன் அமிர்தலிங்கம் நிறுவிய கவிஞன் பதிப்பகம் ஆரம்பத்தில் சில நூற்களை வெளியிட்டாலும் எல்லா நூற்களையும் தொகுக்கும் முயற்சி நடக்கவில்லை. நாமக்கல்லாரின் கவிதைகள் 1929-ல் சிறு பிரசுரமாக வந்தன.

1932-ஆம் ஆண்டு நடந்த சத்தியாகிரகத்தில் பங்கு கொண்டதால் மதுரை, வேலூர் சிறைகளில் இருந்தார். அப்போது இவரது சக கைதிகளான காங்கிரஸ்காரர்கள் திருக்குறளில் சந்தேகம் கேட்டார்கள். நாமக்கல்லார் அவர்களுக்குத் திருக்குறள் வகுப்பு எடுத்திருக்கிறார். அதற்காக திருக்குறளின் பழைய உரைகளைப் படிக்க ஆரம்பித்தார்.

பரிமேலழகர் உரையை ஆழமாகப் படித்தார். அந்தக் காலக்கட்டத்தில், தானே ஒரு உரையை எழுதலாம் என்ற நம்பிக்கை கவிஞருக்கு வந்தது. அப்போது உருவானது திருக்குறள் புதிய உரை (1932) அந்த உரையை உடனே யாரும் வெளியிட முன்வரவில்லை. கவிஞரும் முயற்சி செய்ய வில்லை. 1955-ல் தான் கோவையில் சிலரின் முயற்சி யால் வெளியிடப்பட்டது. இப்போது வேகமாக விற்பனை யாகும் திருக்குறள் உரைகளில் நாமக்கல்லாரின் உரையும் ஒன்று.

நாமக்கல்லாருக்கு ஓவியத்தில் நாட்டம் இருந்தது. நிறைய ஓவியங்களை வரைந்திருக்கிறார். தான் கவிஞராக மாறியது கிட்டப்பாவின் நாடகக்குழுவுடன் ஏற்பட்ட தொடர்பு என்று அவரே கூறியிருக்கிறார். நாமக்கல்லார் தமிழ் அறிஞர்களிடம் அல்லது தமிழ் ஆசிரியர்களிடம் முறையாகத் தமிழ் படித்தார் என்பதற்கு அவரின் சுயசரிதையில் சான்று இல்லை. ஆனால் மரபுவழி இலக்கியங்களைப் படித்த அனுபவம் இவருக்கு முறையான யாப்பு வடிவங்களை அறிமுகப் படுத்தியிருக்கலாம்.

காந்தியக் கவிஞர்

1921-ல் சுதேசிப் பொருளைப் பயன்படுத்துவது பற்றிய தன் கருத்தை மகாத்மா முன் வைத்த போது நாமக்கல்லார் 'ஆடுராட்டே ஆடுராட்டே சுழன்றாடு ராட்டே' என்ற பாடலை சுதேசிகளின் கூட்டங்களின் பாடுவதற்காக எழுதிக் கொடுத்தார். அன்றைய காங்கிரஸ்காரர்களிடம் குறிப்பாகக் காங்கிரஸ் தலைவர்களிடம் நாமக்கல்லாரின் பெயர் பிரபலமானதற்கு இந்தப் பாடல் காரணமானது. இது தவிர வேறு சில விடுதலைப் பாடல்களையும் பாடினார். எல்லா பாடல்களையும் தொகுத்து தேசபக்திப் பாடல்கள் என்ற தலைப்பில் வெளியிட்டார் (1922). வசதியுள்ள காங்கிரஸ் தலைவர்கள் இந்தப் பிரசுரத்தை விலைக்கு வாங்கி இலவசமாய் விநியோகித்தனர். இக்காலகட்டத்தில் காந்தி, நொண்டிச் சிந்து, முதல் சுதந்திரப்போர், நாட்டுக்கும்மி போன்ற பாடல்கள் தனித்தனி பிரசுரங்களாக வெளிவந்தன.

மகாத்மா உப்புச்சத்தியாகிரகத்தை ஆரம்பித்த போது (1930) தமிழகத்தில் வேதாரண்யத்தில் இராஜாஜி தலைமை ஏற்று நடத்தினார். அப்போது தொண்டர்கள் பாடுவதற்கு,

கத்தியின்றி ரத்தமின்றி

யுத்தமொன்று வருகுது

சத்தியத்தின் நித்தியத்தை

நம்பியாரும் சேருவீர்

என்று நாமக்கல்லார் எழுதிக் கொடுத்தார். இப்பாடல் அப்போது மிகப் பரபரப்பாகப் பேசப்பட்டது. இராஜாஜி நாமக்கல்லாரைத் தனியே அழைத்துப் பாராட்டினார். திலகர் விதைத்த விதை பாரதியாக முளைத்தது. காந்தி தூவிய விதை நாமக்கல்லார் ஆக வளர்ந்தது என்றார்.

நாமக்கல்லார் எழுதிய 5 புதினங்களில் மலைக் கள்ளன் என்ற நாவல் வேலூர் சிறையிலிருந்த போது எழுதப்பட்டது. இது 1942 -ல் அச்சில் வந்தது. இந்த நாவல் 1951-ல் திரைப்படமாக வந்தது.  ராமுலு நாயுடு தயாரித்த இப்படத்தில் எம்.ஜி.ஆர் நடித்தார். இது அப்போது 6 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு திரையிடப்பட்டது. 1951-ல் ஜனாதிபதி பரிசு பெற்றது.

தனித்த பார்வை கொண்டவர்

தமிழ்மொழி பற்றிய இவரது வர்ணனையில் வெறி யில்லை. தமிழின் தொன்மை, வளர்ச்சி பற்றிய கணிப்பும் இவருக்கு உண்டு. நாமக்கல்லாரிடம் வடமொழியின் மீதும் பிறமொழிகளிடமும் வெறுப்பு இல்லை. அதனால் இவரது பார்வையில் தெளிவு இருக்கிறது.

நாமக்கல்லாரின் இந்த நூல் அந்தக் காலத்தில் காங்கிரஸ்காரர்களிடம் பெரிய மரியாதையைக் கொடுக்கவில்லை. பகுத்தறிவுச் சார்புள்ள ப.வே. மாணிக்க நாயக்கரின் நண்பரான நாமக்கல்லார் பிராமணரை துவேசம் இன்றி விமர்சித்திருக்கிறார். இவர் பகுத்தறிவாளர் இல்லை; காங்கிரஸ் கட்சியிலும் பெரும் செல்வாக்குடையவராகவும் இல்லை.

பண்டைத் தமிழ் இலக்கியங்கள், உரையாசிரியர்கள் பற்றிய இவரது கட்டுரைகள் விமர்சனப் பார்வை உடையவை. தாயார் கொடுத்த தனம் - நல்ல தொகுப்பு. இவரது இலக்கிய இன்பம் (1950) திருவள்ளுவரும் பரிமேலழகரும் (1956) திருவள்ளுவர் திடுக்கிடுவார் (1954) கம்பரும் வால்மீகியும் (1950) ஆகியன திறனாய்வு நூற்கள்.

திருவள்ளுவரும் பரிமேலழகரும் குறிப்பிடத் தகுந்த நூல், திருக்குறள் குறித்து பிற்காலத்தில் வெளிவந்த விமர்சன நூற்களில் பரிமேலழகரின் உரை பற்றிய கருத்து உருவாவதற்கு நாமக்கல்லார் காரணமாயிருந்திருக்கிறார். இசைத்தமிழ் தொடர்பான கட்டுரைகளில் மேடையில் தமிழில் பாட வேண்டும் என்னும் காரணங்களை முன்நிறுத்துகிறார். மேடையில் தமிழில் பாடுதல் என்ற கருத்து உருவான காலகட்டத்தில் எழுதியவர் இவர். இவரது கீர்த்தனைகள் மூன்று நூற்களாக வந்துள்ளன. நாமக்கல்லார் கவிஞராக அடையாளம் காணப்பட்டாலும் சிறந்த உரையாசிரியராகவும் வாழ்க்கை வரலாற்றாசிரியராகவும் விளங்கினார். தமிழில் வாழ்க்கை வரலாறு குறிப்பாகத் தலவரலாறு மிகக் குறைவாகவே வந்துள்ளன.

நாமக்கல்லார் 1910-ல் சென்னையில் நடந்த ஓவியக் கண்காட்சியில் பாரதியைச் சந்திக்க முயற்சி செய்தார். முடியவில்லை 1920-ல் கானாடுகாத்தானில் அவரைச் சந்தித்தார். ஒரு பாட்டும் பாடிக் காட்டினார். "பலே பாண்டியா; பிள்ளை நீர் ஒரு புலவர் சந்தேகமில்லை" என்றாராம் பாரதி.

- அ.கா. பெருமாள், நாட்டுப்புறவியலாளர்