வியாழன், 22 மே, 2014

என்ஜினீயரிங் கல்லூரிகளின் ‘ரேங்க்’ பட்டியல் இணையதளத்தில் வெளியிடவேண்டும் என்று அண்ணாபல்கலைக்கழகத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கவுன்சிலிங் தொடங்குவதற்கு முன்பு தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளின் தேர்ச்சி விகிதம் உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் வெளியிடவேண்டும் என்று அண்ணாபல்கலைக்கழகத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், டி.பூபாலசாமி என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:– கிராமபுற மாணவர்கள் தமிழகத்தில் 2012–ம் ஆண்டு 521 என்ஜினீயரிங் கல்லூரிகள் இருந்தது. இதில் 29 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள். மீதமுள்ள கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகளாகும். தமிழகத்தில் உள்ள பல என்ஜினீயரிங் கல்லூரிகள், அகில இந்திய தொழில் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) நிர்ணயம் செய்துள்ள உள்கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யவில்லை. ஆண்டுக்கு 2.5 லட்சம் மாணவர்கள் என்ஜினீயரிங் படிப்பில் சேருகின்றனர். அதில், கிராமபுறத்தில் தமிழ் வழியில் படித்த நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் பலர் உள்ளனர். கல்லூரி விவரங்கள் தமிழகத்தில் 151 தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள் ஒரே விதமான பெயர்கள், அடையாளங்களுடன் இயங்குவதால், எந்த கல்லூரிகளை தேர்வு செய்வது என்பதிலும், எந்த கல்லூரி சிறந்தது என்பதை தெரிந்துக் கொள்வதிலும் மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே, ஒவ்வொரு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம், அந்த கல்லூரியின் 'ரேங்க்' பட்டியல், ஒரே பெயரில் உள்ள கல்லூரிகளை வேறுப்படுத்தி காட்ட தனியான அடையாளங்கள் ஆகியவைகளை கொண்ட விளக்க புத்தகத்தை மாணவர்களுக்கு வழங்க தமிழக உயர் கல்வித்துறை செயலாளர், அண்ணாபல்கலைக்கழகம் ஆகியவைகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

வெளியிட வேண்டும்
இந்த வழக்கில் தமிழக அரசு, ஏ.ஐ.சி.டி.இ. ஆகியவை தனித்தனியாக பதில் மனுக்களை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள அதே கோரிக்கைகளை வலியுறத்தி ஏற்கனவே தாக்கல் செய்த வழக்குகளில் ஐகோர்ட்டு சில இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்து இருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கை தலைமை நீதிபதி (பொறுப்பு) சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்து நேற்று தீர்ப்பளித்தனர்.
அந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:– தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள் ஆகியவைகளில் படிக்கும் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை கவுன்சிலிங் தொடங்குவதற்கு முன்பு தன்னுடைய இணைய தளத்தில் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட வேண்டும். நடவடிக்கை எடுக்கலாம் ஒரே பெயர்களில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகள், அதன் (கோடு) எண்கள், அந்த கல்லூரியை பற்றிய தகவல்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தனி ஒரு பட்டியலாக தயாரித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட வேண்டும். அதேபோல, ஒரே விதமான பெயர்களை கொண்டு அந்த பெயர்களை தவறாக பயன்படுத்தும் தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள் மீது சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க ஏ.ஐ.சி.டி.இ.– க்கு உரிமை உள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் ஆகியவை ஏ.ஐ.சி.டி.இ. நிர்ணயம் செய்துள்ள உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவைகளை சரியாக மேற்கொண்டுள்ளதா என்பது குறித்து ஏ.ஐ.சி.டி.இ. மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் குறிப்பிட்ட கால இடைவெளிக்கு உட்பட்டு ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக